நேற்று இரவு நடைபெற்ற ‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதில் இருந்து சில பகுதிகள் :
“இந்த விழா ‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா போல் இல்லாமல் படத்தின் வெற்றி விழா போல் தோன்றுகிறது. ‘ஐ’ படத்தை எப்போது பார்ப்பேன் என்கிற ஏக்கத்தை எனக்குள்ளே ஏற்படுத்தியிருக்கிறது. ஷங்கர் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு சீக்கிரமாக காண்பிக்க வேண்டும்..
கடந்த 20 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் பயணித்துக் கொண்டிருப்பவர் ஷங்கர். எந்த இடத்தில் தனது பயணத்தைத் துவக்கினாரோ இப்போது அதற்கும் மேலே போய்க் கொண்டிருக்கிறார். இந்தப் படம்தான் அவரது சினிமா கேரியரில் உச்சம். இதுக்கு மேல செய்றதுக்கு என்ன இருக்கு..?
இந்திய சினிமாவை ஹாலிவுட்டுக்கு நிகராக கொண்டு செல்வதற்காகத்தான் ஷங்கர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். ‘ரியல் சினிமா இந்தியன்’ என்று ஷங்கரை சொல்ல்லாம்.
இந்த ‘ஐ’ படம் சீயான் விக்ரமை ‘ஐ’ விக்ரமாக மாற்றியுள்ளது. இந்த ‘ஐ’ படத்தின் கேரக்டருக்காக விக்ரம் கடுமையாக உழைத்துள்ளார். விக்ரம் மாதிரியான நடிகனை நான் ஹாலிவுட்டிலும் பார்த்ததில்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட உழைக்கிறார் விக்ரம். படத்தின் கதாபாத்திரத்துக்காக கஷ்டங்களை அனுபவித்துவரும் விக்ரம் தன்னையே வருத்திக் கொண்டு நடிப்பவர்.
விக்ரமின் அப்பா தேவராஜ் ஷங்கரிடம் சென்று ‘ஏன் என் பையனை இப்படி கஷ்டப்படுத்துறீங்க?’ என்று நேரிலேயே கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு விக்ரமின் குடும்பத்தினருக்கே கஷ்டத்தைக் கொடுத்துள்ளது இந்த படத்தின் கேரக்டர்.. சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கும் விக்ரமுக்கு நான் வணக்கம் செலுத்தி என்னுடைய இதயங்கனிந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார் ரஜினிகாந்த்.