நடிகர் கமல்ஹாசனின் உடன் பிறந்த அண்ணனான சந்திரஹாசன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் காலமானார்.
அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் இன்று காலை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, இயக்குநர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் நாசர், விஷால், தயாரிப்பாளர் சங்கத்தினர், இசைஞானி இளையராஜா, நடிகை ரோகிணி, நடிகர் சாருஹாசன், சுஹாசினி மணிரத்னம், அக்சரா ஹாசன், அனுஹாசன் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் ரஜினி பேசும்போது, “கமல்ஹாசனின் 100 சதவிகித கோபத்தை நான் பார்த்திருக்கிறேன்..” என்றார்.
அவர் பேசுகையில், “என்னுடைய நண்பர் கமல் அவர்களுக்கு மூன்று தகப்பனார்கள். முதல் தகப்பனார் அவரை பெற்றவர். மற்ற 2 தகப்பனர்கள் சாருஹாசன் அண்ணா, சந்திரஹாசன் அண்ணா. கமலை வளர்த்தவர் சாரு அண்ணா. அவரை ஆளாக்கியவர் சந்திரஹாசன் அவர்கள். நான் அவரை இரண்டு முறைதான் பார்த்திருக்கிறேன். சாருஹாசனோடு நிறைய பழகியுள்ளேன். ஆனால், சந்திரஹாசனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.
உண்மையை சொல்லணும்னா பொருளாதாரத்தில் இப்ப இருக்கிற ஆர்ட்டிஸ்டுகளுடன் ஒப்பிட்டால் அவர்கள் வச்சிருக்கிற பணத்தைக்கூட என் நண்பர் கமல் வச்சுக்கல. இது வருத்தப்பட வேண்டிய விஷயம். சொல்லித்தான் ஆகணும். ஆனால் அதைப் பற்றி அவர் வெளியில் சொல்வதேயில்லை. கவலையே படலை. இப்போ ஏதாவது கொஞ்சம் பணம் வைச்சிருக்காருன்னு சொன்னா, அதுக்குக் காரணம் சந்திரஹாசன் ஸார்.
கமலுக்கு பணம் சேர்த்துக் கொடுத்தது சந்திரஹாசன் அண்ணன். கமல், இனிமேல் இருக்கும் பணத்தை எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்.. எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்று நான் யோசிக்கிறேன்.
அது மட்டுமில்லை… கமல்ஹாசனைப் போல ஒரு கோபக்காரரை நான் பார்த்ததே இல்லை. அவரோட கோபத்தில் பத்து சதவீதத்தைதான் நீங்க பார்த்திருக்கீங்க. நான் 100 சதவீதம் பார்த்திருக்கேன். அதனால்தான் நான் அவர்கிட்ட ரொம்பவும் ஜாக்கிரதையாக இருப்பேன். கமலை சமாதானப்படுத்துவதில் அன்பாக சொல்வார் சாரு அண்ணா, கொஞ்சம் அதட்டி சொல்வார் சந்திரா அண்ணா. இப்ப எல்லா பொறுப்பும் சாரு அண்ணாவிடம்தான் உள்ளது. அவர்தான் எல்லாத்தையும் பார்த்திட்டு கமலுக்கு பக்கபலமா இருக்கணும்.
அனந்து, பாலசந்தர், சாருஹாசன், சந்திரஹாசன் ஆகிய நால்வரும்தான் கமலுடைய உயிர்கள். இதில் மூன்று பேர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அவர்களுடைய ஆத்மா எப்போதுமே கமலுடன் இருக்கும். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் கமல்..” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.