சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ 2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் இந்திய திரையுலகமே வியப்போடு எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான படம் ‘2.0’. இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும், இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான செலவில் தயாரித்து வருகிறது.
ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும், படத் தொகுப்பாளராக ஆண்டனியும், ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது எந்திரன் படத்தின் 2 பாகமான 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மும்பையில் அந்தேரி மேற்கில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் நேற்று மாலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அக்சய்குமார், டைரக்டர் ஷங்கர், நடிகை எமி ஜாக்சன், லைக்கா நிறுவன சேர்மன் சுபாஷ்கரன், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான்கான் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை பிரபல இந்திப்பட இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார். இதையடுத்து, ரஜினிகாந்தின் முதல் தோற்றம் 3–டி முறையில் வெளியிடப்பட்டது.
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், “ஷங்கரின் ஆற்றல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடையும். எனினும் தற்போது மிகுந்த சவால் நிறைந்த படத்தில் பணியாற்றி வருகிறேன். நான் என்ன செய்தாலும் ஷங்கர் மகிழ்ச்சி அடையமாட்டார். எனினும் உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறேன். இந்தியாவிற்கும், உலகிற்கும் ஏதாவது புதுமையாக படைக்க முயற்சி செய்து வருகிறேன்..” என்றார்.
இயக்குநர் ஷங்கர் பேசும்போது, “எப்போதும் நான் எனது முந்தைய படைப்பைவிட அடுத்து எடுக்கும் படம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். 2.0 படத்தை இயக்க எந்திரனைவிட 10 மடங்கு அதிக சிரத்தை எடுத்துள்ளேன். இந்த படத்தை இயக்குவது எவரெஸ்ட் சிகரத்தை முதுகில் சுமந்து கொண்டு அதில் ஏறுவதற்கு சமமானது..” என்றார்.
‘2.0’ படத்தில் வில்லானாக நடித்திருக்கும் நடிகர் அக்சய் குமார் கூறுகையில், “இந்திய சினிமா வரலாற்றில் இந்தப் படம் புதிய மாற்றத்தை உருவாக்கும். பொதுவாக நான் என் படங்களில் மேக்–அப் போடுவதில்லை. ஆனால் இந்த படத்திற்காகத்தான் முதல் முறையாக 3 மணி நேரம் தொடர்ச்சியாக மேக்–அப் போட வேண்டியிருந்தது. போட்ட மேக்கப்பை கலைக்கவும் இன்னொரு 1 மணி நேரம் செலவானது. சினிமாவில் நடிக்க தொடங்கியது முதல் போடாத மேக்கப்பையெல்லாம், இந்த ஒரே படத்தில் போட்டுவிட்டேன். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல. இந்த பிரபஞ்சமே அவர்தான்..” என்று பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா, 2.0 படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் மதன்கார்க்கி, சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, எடிட்டர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தி நடிகர் சல்மான்கான் அழையா விருந்தாளியாக விழா அரங்கிற்குள் வந்தார். நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் பேசும்போது, “எனக்கு தெரிந்தவரையில், ரஜினிகாந்த் மிகவும் அற்புதமான மனிதர். அவர் மீது நான் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு என்னை யாரும் அழைக்கவில்லை. இங்கு இந்த பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறுவதை கேள்விப்பட்டதும் உடனடியாக வந்தேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது மிகவும் அற்புதமான அனுபவம்..” என்றார் சல்மான்கான்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றுவது கடினமானது. எந்த செயலையும் கச்சிதமாக முடிக்கக் கூடியவர். அதனால்தான் அவர் மிகச் சிறந்த இயக்குநராக உள்ளார்.
இந்த படத்தில் நான் வெறும் வில்லன்தான். படத்தின் ஹீரோ அக்சய்குமார் என்பதுதான் உண்மை. எனக்கு வேறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அப்படி வழங்கி இருந்தால் நான் அக்சய் குமார் கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பேன். அவர் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படம் வெளியான பிறகு அக்சய்குமாரை உலகமே பாராட்டும்.
2.0 படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலக அரங்கில் இந்திய சினிமாவிற்கு கவுரவத்தை பெற்று தரும்..” என்றார்.