‘லிங்கா’ பிரச்சினையே இன்னமும் ஓயாத நிலையில் கடந்த மாதம் ஒரு நள்ளிரவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குவது ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் என்றதும் மூச்சையாகிப் போனது தமிழ்த் திரையுலகம்.
ஷங்கர், வாசு, கே.எஸ்.ரவிக்குமார், லாரன்ஸ் என்று வரிசை கட்டி இயக்குநர்கள் அடுத்தப் பட இயக்குநர்கள் லிஸ்ட்டில் காத்திருக்க எந்த வகையிலும் ஒப்பிட முடியாத இதுவரையிலும் 2 திரைப்படங்களை மட்டுமே இயக்கம் செய்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு அடித்த லக்கி பிரைஸை நினைத்து பெருமூச்சுவிட்டார்கள் மூத்த இயக்குநர்கள்.
இந்தப் படத்தை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவே தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாக எதுவுமே உறுதிப்படுத்தாமல் இருந்தது.
இன்று மாலை இத்தகவலை உறுதிப்படுத்தி படத்தின் பி.ஆர்.ஓ.க்களான டைமண்ட் பாபு, ரியாஸ் அஹமது இருவரும் இணைந்து செய்தியனுப்பியிருக்கிறார்கள்.
மேலும் இயக்குநர் பா.ரஞ்சித்தும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ரஜினியை சந்தித்த புகைப்படங்களும் இன்றைக்கே வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வந்திருக்கும் செய்தி இதுதான் :
40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப் பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு.
ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து ‘பைரவி’ படத்தை விளம்பரம் செய்தார்.
விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, 1984-ம் ஆண்டு தயாரிப்பாளராகி… ‘யார்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்தார்.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்து முதன்முறையாக இயக்கிய ‘புதுப்பாடகன்’ படம் உட்பட அவர் தயாரித்த பல படங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.
ரஜினி நடித்த ‘அண்ணாமலை’, ‘முத்து’, ‘பாட்ஷா’ ஆகிய படங்கள் உருவாகும் நேரத்தில் அந்தப் படங்களை முதலில் கலைப்புலி எஸ். தாணுதான் தயாரிக்கும் சூழல் இருந்தது, ஆனால் சில, பல காரணங்களால் அது முடியாமல் போனது.
ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்புலி எஸ். தாணு தவம் இருந்தார். அவரது தவத்துக்குக் கிடைத்த வரமாக தற்போது, கலைப்புலி எஸ். தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ‘மெட்ராஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன், உமாதேவி, கானா பாலா பாடல்களை எழுத, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.










