full screen background image

சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு சிக்கலோ சிக்கல்..!

சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு சிக்கலோ சிக்கல்..!

சில நாட்களுக்கு முன்புதான் தயாரிப்பாளர் வருண் மணியன், “மஞ்சப்பையோட ஊரிலிருந்து வந்தவர், அதே மஞ்சப்பையோட திரும்பிப் போகப் போகிறார்..” என்று யாரோ ஒரு தயாரிப்பாளரை மனதில் வைத்து டிவிட்டரில் சொல்லியிருந்தார்.

அது யார் என்பது இப்போது தெரிந்துவிட்டது. வருண்மணியன் குறிப்பிட்டது தயாரிப்பாளரும், இயக்குநருமான லிங்குசாமியைத்தான்.

லிங்குசாமிதான் சமீபத்திய ஒரு பேட்டியொன்றில் தான் கும்பகோணத்திலிருந்து வெறும் மஞ்சப்பையோடுதான் சென்னைக்கு வந்திறங்கியதாக குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் வருண் மணியனும் குறிப்பிட்டிருக்கிறார்.

இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை..? வேறென்ன கொடுக்கல்.. வாங்கல்தான்..

‘உத்தமவில்லன்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ படங்களின் தயாரிப்புக்காக வருண்மணியனின் ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருக்கிறது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

கடந்த 2014, ஆகஸ்ட் 11-ம் தேதி இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட 5 கோடி ரூபாய் கடன் தொகையானது 2014 நவம்பர் 11-ம் தேதிக்குள்ளாக வட்டியுடன் திருப்பித் தரப்பட வேண்டும் என்று இரு தரப்பாருமே ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கெல்லாம் முன்னதாகவே 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதியன்று ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

அதன்படி இந்த இரண்டு படங்களின் சேட்டிலைட் உரிமைகளையும் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுக் கொள்வதென்றும், இதற்காக ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் ஒப்பந்தமானது.

ஆனால் ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனம் 6 கோடி ரூபாயை மட்டுமே திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இதுவரையிலும் கொடுத்துள்ளது. இது ‘ரஜினி முருகன்’ படத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது. ‘உத்தமவில்லனை’ ஜெயா டிவி வாங்கிவிட்டது.

இந்த நேரத்தில் ‘உத்தமவில்லன்’ ரிலீஸும் தள்ளிப் போனதால், ஒப்பந்த நாளும் முடிந்து போனதால் கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று வருண்மணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி மீது வழக்குத் தொடுத்தார்.

அதில், தனக்குத் தர வேண்டிய கடன் தொகையை வட்டியுடன் செலுத்தாமல், ‘உத்தமவில்லன்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தடை கோரியிருந்தார்.

மேலும் அந்த மனுவில், ஜீ தமிழ்த் தொலைக்காட்சி சேட்டிலைட் உரிமைக்காக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கும் 6 கோடி ரூபாயில் இருந்து தனது கடனை செட்டில் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இந்த வழக்கை கடந்த மே 2-ம் தேதியன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாலசுப்ரமணி, “உத்தமவில்லன்’ படம் முதல் நாளே ரிலீஸானதால் அதனை தடை செய்ய முடியாது..” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால் “ரஜினி முருகன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரேடியன்ஸ் நிறுவனத்திற்கு கடன் தொகையையும், வட்டி தொகையையும் முழுமையாகக் கொடுத்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கை தள்ளியும் வைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 25-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது இப்போது அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதன் காரணம்கூட இதுதானாம்..!

வருண் மணியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ‘ரஜினிமுருகன்’ படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்பாகவே அசலில் ஒரு தொகையையும், வட்டி தொகையையும், தர வேண்டும் என்று உள்ளதாம்.

இதனால் ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியதில் இருந்து 4.68 கோடியை ‘ரஜினி முருகன்’ இசை வெளியீட்டுக்கு முன்பாக திருப்பதி பிரதர்ஸ் வருண் மணியனுக்கு அளிக்க வேண்டும்.

அதன் பின்பு மிச்சமான தொகையான ஒரு கோடியே 5 லட்சம் ரூபாயும் வருண்மணியனுக்கு செட்டில் ஆனால்தான் ‘ரஜினி முருகன்’ படம் ரிலீஸாகும் சூழல் உள்ளது.

இனி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மல்லுக்கட்டு யுத்தம், ‘ரஜினி முருகன்’ படத்தின் ரிலீஸின்போது தெரிய வரும்..!

Our Score