அதோ வருகிறது.. இதோ வருகிறது.. என்றெல்லாம் ஆசை காட்டிய இதுவரையில் ஏமாற்றிவந்த சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி ரிலீஸாவதாக அப்படத்தைத் தயாரிக்கும் ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பாக ரஜனியின் இளைய மகள் செளந்தர்யா அஸ்வினின் இயக்கத்தில் உருவாகத் துவங்கிய இப்படம், தமிழின் முழுமையான முதல் அனிமேஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்சர் டெக்னாலஜியின் மூலம் உருவாகும் முதல் இந்தியப் படமும் இதுவேயாகும்..! உலகளவில் ஹாலிவுட்டில் டின் டின், அவதார், Beowulf ஆகிய படங்களில் மட்டுமே இந்த டெக்னாலஜி இதுவரையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்..
இதில் சூப்பர்ஸ்டார் 2 கேரக்டர்களில் வருகிறாராம். தமிழுக்கு கிடைப்பாரா மாட்டாரா என்ற தவிப்பில் இருக்கும் இப்போதைய பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரினி தீபிகா படுகோனே இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். உடன் சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா, ருக்மணி ஆகியோரும் உண்டு.. இசை ஏ.ஆர்.ரஹ்மான்.. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் அனைத்து விஷயங்களிலும் உறுதுணையாக இருந்து படத்தை முடிக்க உதவியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவருக்குப் பின்பு இயக்குநர் மாதேஷும் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உடன் பணியாற்றியிருக்கிறார்.
படம் முழுவதுமே அனிமேஷன் காட்சிகள்தான் என்பதால் நிறைய நேரமும், பணமும் செலவாகியுள்ளது.. இப்படத்தின் கிராபிக்ஸ், அனிமேஷன் வேலைகள் அனைத்தும் வெளிநாடுகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. பல ஹாலிவுட் படங்களை தயார் செய்திருக்கும் லண்டன் பைன்வுட் ஸ்டூடியோ, அமெரிக்காவில் இருக்கும் கவுண்டர்பன்ச் ஸ்டூடியோஸ், இங்கிலாந்தில் இருக்கும் பேஸ்வேர் டெக்னாலஜிஸ் போன்ற புகழ் பெற்ற தொழில் நுட்பப் பட்டறைகளில் ‘கோச்சடையான்’ தயாராகியுள்ளது. மேலும் இதன் இறுதிக்கட்டப் பணி சீனாவில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ஸ்பெஷலாக ‘கோச்சடையான்’ பெயரில் புதிய மொபைல் போனும் வெளியாகவுள்ளதாம். இதனை Karbonn Mobile Company வெளியிடவுள்ளது. இந்த பிப்ரவரி மாதமே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அது சமயமே புதிய மொபைலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரணமானவர்களின் படம் போல சூப்பர் ஸ்டாரின் படத்தை ரிலீஸ் செய்யவே முடியாதே..? தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி என்று பல மொழிகளிலும் உலகம் தழுவிய வகையில் 6000 திரைகளில் இப்படம் திரையிடப்படவுள்ளதாம்.
உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் இல்லங்களில் இந்த வருட சித்திரை புத்தாண்டு, சூப்பர்ஸ்டார் ரஜினியின் புண்ணியத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது..