“குழந்தைகளுடன் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் புலி..” என்று சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புலி’ படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்டமான செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் பிரமிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
விஜய்யின் நடிப்பு என்ன ஈர்த்தது, விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. Hats Off to the Puli Team..” பாராட்டியுள்ளார்.
‘புலி’ படம் பார்த்த நடிகர் ஜீவா, “புலி’ படத்தில் நிறைய கிராபிக்ஸ், நிறைய ஆக்ஷன் காட்சிகள், விதவிதமான கதாபாத்திரங்கள் எல்லாம் இருக்கிறது. குழந்தைகளுக்கு இது உண்மையிலேயே பிடிக்கும். ‘புலி’ குடும்பத்தோடு ஜாலியாக சென்று பார்க்கக் கூடிய படம். இந்த படத்தை பார்க்கும்போது வேற ஒரு உலகத்துக்கு போகிற உணர்வு ஏற்படும்.
விஜய் முதன்முதலாக இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்திருக்கிறார். அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எல்லோருக்கும் சேர்த்து ஜனரஞ்சகமான படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய நடனம், ஆக்ஷன் என எல்லாம் கலந்த கலவையாக வந்திருக்கிற ‘புலி’ படத்தை கண்டிப்பாக எல்லோரும் குடும்பத்தோட போய் பாருங்க..” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதேபோல் ‘புலி’ படத்தை பார்த்த நடிகை தமன்னா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதில் நடித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
“புலி படத்தை சற்று முன்புதான் பார்த்தேன். ஸ்ருதிஹாசன் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நிறைய அன்புடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் தமன்னா. இதற்கு டிவிட்டரிலேயே பதிலளித்திருக்கும் ஸ்ருதிஹாசன், “நன்றி இனியவளே..! அழகான தமன்னா உங்களுக்கு மிகவும் நல்ல மனது..” என்று தமன்னாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.











