full screen background image

தனது பெயரில் ஹிந்தி சினிமா-தடை விதிக்கக் கோரி சூப்பர் ஸ்டார் ரஜினி கோர்ட்டில் மனு..!

தனது பெயரில் ஹிந்தி சினிமா-தடை விதிக்கக் கோரி சூப்பர் ஸ்டார் ரஜினி கோர்ட்டில் மனு..!

‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற ஹிந்தி படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே வழக்கு தொடுத்திருப்பது திரையுலகதை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்தை ஃபைசல் சயீப் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பில்லா-2’, ‘வில்லு’ ஆகிய தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்த ஆதித்ய மேனன் ஹீரோவாக நடித்திருக்கிறார். கவிதா ராதேஷ்யாம் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தில் நாயகனுக்கு பெயர் ‘கில்லர் ரஜினிகாந்த் ராவ்’ என்பதாம்.. பொறுக்கித்தனம், கிறுக்குத்தனம்மிக்க சிபிஐ அதிகாரி வேடமாம் அவருக்கு. ரஜினியின் இமேஜைக் கெடுக்கும் அத்தனை விஷயங்களையும் படத்தில் காட்சிகளாக வைத்துள்ளார்களாம்.

 இது பற்றி கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை திரையிடுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தன்னுடைய மனுவில், “இந்திய சினிமா துறையில் புகழ் பெற்ற, முன்னணி நடிகராக உள்ளேன். என்னுடைய சிறந்த நடிப்பு, இணையற்ற நடத்தை, வசன உச்சரிப்பு, ‘ஸ்டைல்’, கடின உழைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று பலரால் அழைக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளேன்.

எனக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால், என்னுடைய பெயர், என்னுடைய உருவ அமைப்பு, ஓவியம், வசன உச்சரிப்பு உள்ளிட்டவைகளை யாராவது தவறாக பயன்படுத்தினால், அது எனக்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும். பொதுமக்கள் மத்தியில் எனக்குள்ள நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படும்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள ‘வர்ஷா புரடக்ஷன்‘ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (நான்தான் ரஜினிகாந்த்) என்ற பெயரில் இந்தி படத்தை தயாரித்து வருகிறது. இதற்காக என்னிடம் எந்தவித முன் அனுமதியினையும் அந்நிறுவனம் பெறவில்லை.

இந்த படத்தில் என்னை போன்ற உருவ அமைப்புள்ள நடிகரை வைத்து என்னைப் போலவே ‘ஸ்டைலான’ வசனம் பேசி, என் நடிப்பை போல் நடித்து, எனக்கு உள்ள புகழை சீர்குலைக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், என் பெயரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

எனவே, ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்..” என்று கோரியிருந்தார் ரஜினி.

அந்த மனு இன்று நீதிபதி தமிழ்வாணன் முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். அதில், “மனுதாரர் ரஜினிகாந்த், 1975-ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து, புகழ் பெற்ற நடிகர் என்றும் அவர் மத்திய மாநில அரசுகளிடம் இருந்து பல்வேறு விருதுகளையும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நற்பெயரையும் பெற்றுள்ளார் என்றும் அவரது வக்கீல் வாதம் செய்தார்.

மேலும், இப்படிப்பட்டவரின் புகழை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர் மனுதாரர், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்தை தயாரிக்கிறார் என்றும் அந்த படத்தில் நடித்துள்ளவர் சி.பி.ஐ. அதிகாரி, போக்கிரி, பகுதி நேர சமூக சேவகர், பகுதி நேரமாக கொலை செய்பவர் என்று சித்தரிக்கப்பட்டுள்ளார் என்று கூறி ஏராளமான ஆவணங்களை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

ரஜினிகாந்த் பெண் பித்தர் போலவும், பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பு உள்ளவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்றும் ‘வர்ஷா புரொடெக்சன்’ நிறுவனத்துக்கு கடந்த ஜூலை 15-ந் தேதி அனுப்பிய வக்கீல் நோட்டீசும் திரும்பி வந்து விட்டது என்றும் மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு ஆபாச காட்சியும் இந்த கோர்ட்டில் மனுதாரர் தரப்பில் போட்டுக் காட்டப்பட்டது. இந்த காட்சிகள் கண்டிப்பாக, மனுதாரர் ரஜினிகாந்தின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தும்விதமாக உள்ளது.

தற்போதைய நவீன சட்டத்தின்படி, அறிவுசார் சொத்துரிமை என்பது ஒருவருக்கு சொந்தமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அரசியல் சட்டத்தின்படி, ஒவ்வொரு குடிமகனும் மரியாதையாக, கண்ணியமாக வாழ்வதற்கு உரிமை உள்ளது.

எனவே, இந்த வழக்கு ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் படங்கள், வீடியோ காட்சிகளை பார்க்கும்போது, இவையெல்லாம் நடிகர் ரஜினிகாந்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது.

எனவே, ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ படத்தை வெளியிட வருகிற 25-ம் தேதிவரை இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று வர்ஷா புரொடெக்சன் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன்..” என்று கூறியிருக்கிறார்.

இந்த அளவுக்கு தைரியமாக இந்தப் படத்தை எப்படி தயாரித்தார்கள்ன்னு தெரியலையே..?

Our Score