full screen background image

‘ரெய்டு’ – சினிமா விமர்சனம்

‘ரெய்டு’ – சினிமா விமர்சனம்

இந்த ‘ரெய்டு’ படத்தை ஓபன் ஸ்க்ரீன் பிக்சர்ஸ் & M ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் S.K. கனிஷ்க், G.K.(எ) G.மணிகண்டன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தில் முதன்மை  கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா மற்றும் புதுமுகம் அனந்திகா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக வெள்ளைக்கார துரை’ படத்தில் விக்ரம் பிரபுவும், ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிஷி, செளந்தர்ராஜா, டேனியல், செல்வா, வேலு பிரபாகரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பேனர் – ஓபன் ஸ்க்ரீன் பிக்சர்ஸ் & M ஸ்டுடியோஸ், தயாரிப்பு – S.K. கனிஷ்க், GK (அ) ஜி.மணிகண்டன், இயக்கம் – கார்த்தி, திரைக்கதை, வசனம் – P.G.முத்தையா, இசை – சாம் C.S., ஒளிப்பதிவு – கதிரவன், படத் தொகுப்பு – மணிமாறன், கலை இயக்கம் – வீரமணி கணேசன், சண்டை பயிற்சி இயக்கம் – K.கணேஷ், நடன இயக்கம் – கல்யாண், பாபா பாஸ்கர், சந்தோஷ், பாடல்கள் – மோகன் ராஜன், இணை இயக்கம் – மித்ரன் கார்த்தி, புகைப்படங்கள் – முருகன், ஆடை வடிவமைப்பாளர் – மாலினி பிரியா, ஒப்பனை – வி.சேகர், தயாரிப்பு நிர்வாகம் – கண்ணன்.ஜி., மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சுரேஷ் சந்திரா, ரேகா D’One, விளம்பர வடிவமைப்பு – REDDOT பவன், நிர்வாகத் தயாரிப்பாளர் – தம்பி M.பூபதி, இணை தயாரிப்பாளர் – S.வினோத் குமார்.

2018-ம் ஆண்டில் சிவராஜ்குமார், பாவனா நடிப்பில் வெளிவந்த ‘டகரு’ என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தப் படம்.

தான் பணியில் இருக்கும் ஊரில் ரவுடியிஸமே இருக்கக் கூடாது என்று நினைப்பவர் போலீஸ் துணை கமிஷனரான விக்ரம் பிரபு. ஆனால் அந்த ஊரில் ரிஷி, செளந்தர்ராஜா, வேலு பிரபாகரன் என்ற 3 ரவுடிகள் தங்களுக்குள் ஏரியாவைப் பிரித்துக் கொண்டு தாதாயிஸம் செய்து வருவதை எதிர்த்து அவர்களுடன் நேருக்கு நேர் மோதுகிறார். அந்தத் தாதாக்களின் தளபதிகளை பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் நையப்புடைக்கிறார் விக்ரம் பிரபு.

இதனால் கோபமடையும் ரிஷி தனிப்பட்ட முறையில் விக்ரம் பிரபுவின் வாழ்க்கையில் கை வைக்கிறார். விக்ரம் பிரபுவின் காதலியை ரிஷி கொலை செய்துவிட.. அந்தக் கோபத்தில் விக்ரம் பிரபு வெகுண்டெழுந்து அந்தத் தாதா கூட்டத்தையே வேரறுக்க முடிவு செய்கிறார். அதை அவர் செய்து முடித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘ரெய்டு’ படத்தின் திரைக்கதை.

விக்ரம் பிரபுவுக்கு வயது ஏற, ஏற முகத்தில் ஒரு தேஜஸ் கூடியிருக்கிறது. கம்பீரமும், முரட்டுத்தனமும் கூடவே வந்திருக்கிறது. ஆனால் நடிப்பென்று பார்த்தால் மிக சாதாரணமாகவே அனைத்து காட்சிகளிலும் தோன்றுகிறார். இதுதான் மொத்தமாய் இடிக்கிறது.

சண்டை காட்சிகளில் தொழில் நுட்பத்தின் உதவியோடு தப்பித்தாலும், மற்றைய உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரால் தப்பிக்க முடியவில்லை. அதிகப்பட்சம் சோகத்தைத் தாங்கிக் கொள்ளும் காட்சிகளில்தான், அவரை ஒரு நடிகராகவே பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தில் கூடுதல் விஷயமாக படம் நெடுகிலும் பன்ச் டயலாக் பேசியிருக்கிறார் விக்ரம் பிரபு. அந்த வசனங்களைக் கேட்கும்போதே “அட.. நம்ம விக்ரம் பிரபுவே.. பன்ச் டயலாக் பேசுறாரா..?” என்ற ஆச்சரியத்துடன், சிரிப்பும் சேர்ந்தே வருகிறது. அந்த வசனங்கள் அப்படியிருக்கின்றன..!?

6 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதிவ்யா தமிழுக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். கொஞ்சம் அழகு கூடியிருக்கிறது. நடிப்பும் அவருடைய கேரக்டருக்கேற்ப வந்திருக்கிறது. இங்கயே இருக்கலாமே மேடம்..!?

இவருடைய தங்கை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அனத்திகா, அக்காவுக்கு நேரெதிராக இன்றைய மாடர்ன் கேர்ளாக நடித்திருக்கிறார். கையில் சிகரெட்.. வாயில் புட்டியாக ஷோ காட்டும் முதல் காட்சியிலேயே “யார்ரா இது..?” என்று கேட்க வைத்திருக்கிறார். கடைசிவரையிலும் விக்ரம் பிரபுவை சைடாக சைட் அடித்து, அடுத்த திருமணத்திற்குத் தயார் செய்கிறார். அவ்வளவுதான்..!

மெயின் வில்லனாக ரிஷியும், அடுத்த வில்லனாக செளந்தர்ராஜனும் நடித்துள்ளனர். ரிஷி எந்நேரமும் பீர் பாட்டிலும், சிகரெட்டுமாக இருந்து கொண்டு ரவுடியிஸத்தைக் காட்டுகிறார். கோபமில்லாமல், அதே நேரம் அழுத்தமான குரலால் வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார் செளந்தர்ராஜா.

இவர்களைவிடவும் அதிகமாக நடித்திருப்பவர் விக்ரம் பிரபுவிடம் சிக்கி சின்னாப்பின்னமாகும் டேனியல்தான். தான் பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் விக்ரம் பிரபுவிடம் அவர் போனில் சவால்விடும்போது, அவர் காட்டும் நடிப்பு சிம்ப்ளி சூப்பர்ப்..!

அனைவருக்கும் பெரிய தாதாவான வேலு பிரபாகரன் தன்னை வளர்த்துவிட்டவர்களே தன்னைக் குறி வைப்பதை அறியும் குருநாதராக வந்து போகிறார். நடிகர் செல்வா போலீஸ் கமிஷனராக மென்மையாக நடித்திருக்கிறார்.

இப்படி நடிப்பில் குறையில்லாமல் அனைவரையும் தன்னால் இயன்ற அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்தி.

தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவு, இசை, படத் தொகுப்பு அனைத்துமே ஒரே அளவில் இந்தக் கதைக்கு, இந்தப் படத்துக்கு இது போதும் என்ற அளவில் அமைந்திருக்கிறது.

ஆனால் படத்தில் இருக்கும் பன்ச் வசனங்களை மட்டும் எண்ணவே முடியவில்லை. அந்த அளவுக்கு பன்ச் டயலாக்குகளை அள்ளி வீசியிருக்கும் வசனகர்த்தாவான இயக்குநர் பி.ஜி.முத்தையாவிற்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்..!

“நான் சும்மா வந்தா விருந்தாளி.. உன்னைப் பார்க்க வந்தா நீ காலி..”,

“எல்லாரும் சொந்தக் கால்ல நிக்குறாங்க. நீ போன் கால்ல நிக்குற..”,

“ஆண்டவன் உன் தலையெழுத்த பென்ல எழுதியிருக்கலாம். ஆனா நான் என் கன்ல எழுதியிருக்கேன்..”,

“ஆம்பளைன்னா ரத்தம் இருக்கணும்.. அதுலேயும் ச்சுத்தமா இருக்கணும்..”

என்று முதல் வரிசை ரசிகர்கள் முதல் கடைசி வரிசை ரசிகர்கள்வரைக்கும் அனைவரையும் சிரிக்க வைக்கும் வண்ணம் வசனங்களை தீட்டியிருக்கிறார் முத்தையா. படத்தில் காமெடி இல்லாத குறையை இந்த வசனங்கள் தீர்த்து வைத்திருக்கின்றன.

கன்னட படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் அப்படியே தமிழில் காப்பியடித்து வைத்திருக்கிறார் இயக்குநர். இதை செய்தவர் கன்னடத்தில் செய்திருந்த முக்கியமானதையும் செய்திருந்தால் படம் நம்மைக் குழப்பாமல் இருந்திருக்கும்.

நான் லீனியரில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம் என்று பெருமைக்காக சொன்ன திரைக்கதை ஆசிரியரான கொம்பன் முத்தையா, அதை தமிழுக்கு சொல்லும்போது சப் டைட்டில் போட்டு சொல்லியிருந்தால் ரசிகர்கள் குழம்பாமல் படத்தைப் பார்த்திருப்பார்கள்.

அதை செய்யாததால் முதல் பாதியிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள். பிற்பாதியிலும் பாதியைத் தாண்டிய பின்புதான் படத்தின் கதையே பலருக்கும் புரிகிறது. பிறகெப்படி “படம் சூப்பர்..” என்று வெளியில் போய் சொல்வார்கள்..

சிறந்த திரைக்கதையில் கமர்ஷியல் அயிட்டங்களோடு இருந்ததை புரியும்படியாக சொல்லியிருந்தால் இந்த ‘ரெய்டு’ படத்தை “தியேட்டர்ல ‘ரெய்டு’ விட்டுட்டாங்க” என்று தைரியமாகச் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லாததால் “இந்த ‘ரெய்டு’ ரசிகர்களுக்குத்தான்” என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது..!

ரெய்டு – பிசுபிசுத்துப் போனது..!

RATING : 2.5 / 5

Our Score