நேற்றுதான் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்றைக்கு ‘சமத்துவ மக்கள் கட்சி’யின் தலைவர் சரத்குமார் மற்றும் அந்தக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான ராதிகா சரத்குமாருக்கு எதிரான பண மோசடி வழக்கில் அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது திரையுலகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘ரேடியன்ஸ் மீடியா’ என்ற பட தயாரிப்பு நிறுவனத்திடம் ‘புரொடெக்ஷன் நம்பர்-4’ என்ற பெயரில் படத்தை தயாரிப்பதற்காக கடந்த 2014-ம் ஆண்டு 2 கோடி ரூபாயை கடனாகப் பெற்றிருந்தனர்.
‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம் சார்பில் பணத்தை திருப்பி தருமாறு கோரிய நிலையில், ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் 75 லட்சம் மதிப்புள்ள 2 காசோலைகளும், சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் மதிப்புள்ள 5 காசோலைகளும் வழங்கப்பட்டன.
இந்த ஏழு காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விடவே ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனத்தின் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில 7 செக் மோசடி வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த 7 வழக்குகளில் இரு வழக்குகளில் சரத்குமார், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும், மற்ற 5 வழக்குகளில் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்குகள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜரானார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.
நடிகை ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி அலிசியா அளித்த தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
மொத்தமுள்ள 7 வழக்குகளில் சரத்குமார் மட்டும் தொடர்புடைய ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், சரத்குமார், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும் தொடர்புடைய இரு வழக்குகளில் மூவருக்கும் தலா ஓராண்டும் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனையை மூவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
காசோலை மோசடியில் ஈடுபட்டதற்காக மூவரும் தொடர்புடைய இரண்டு வழக்குகளில் தலா 1.5 கோடி அபராதமும், சரத்குமார் தொடர்புடைய 5 வழக்குகளிலும் தலா ₹10 லட்சம் அபராதம் என மொத்தம் 3 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. இதில் புகார்தாரருக்கு 3.30 கோடியை இழப்பீடாக தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தீர்ப்பைக் கேட்ட சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் தரப்பு வக்கீல், இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 2 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். ராதிகா சரத்குமார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகாததால் அவருக்கு மட்டும் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டார்.
தீர்ப்பை கேட்டு வெளியே வந்த சரத்குமார் கூறும்போது, ‘‘கொரோனா தொற்று காரணமாக ராதிகா நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். நாங்கள் சொன்ன தேதியில் செக்கை வங்கியில் செலுத்தாமல் முன் கூட்டியே செலுத்திவிட்டனர். இதை ஆதாரப்பூர்வமாக உயர் நீதிமன்றத்தில் முன் வைப்போம்…’’ என்றார்.
இந்த வழக்குகளின் பின்னணி பற்றி விசாரிக்கும்போது சில சுவாரஸ்யமான விஷயங்களும் வெளிவந்தன.
ராதிகா, சரத்குமாருடன் இணைந்து தண்டனை பெற்றுள்ள தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் மலையாளத்தில் புகழ் பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவர்.
‘டிராபிக்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘சப்பா குரீஷ்’, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’, ‘சிராகோடின்ஜியா கெனவல்கல்’, ‘விமானம்’, ‘அவல் ஓரல்’ ஆகிய புகழ் பெற்ற மலையாளப் படங்களைத் தயாரித்துள்ளார் லிஸ்டின் ஸ்டீபன்.
தமிழில் ‘சாப்பா குரீஷ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘புலிவால்’, மற்றும் ‘டிராபிக்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மாரி’, ‘இது என்ன மாயம்’ ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார் லிஸ்டின் ஸ்டீபன்.
இதில் 2013-ம் ஆண்டு ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தை ராதிகாவின் ராடான் மீடியா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார் லிஸ்டின் ஸ்டீபன். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. நஷ்டம்தான் ஏற்பட்டது.
மீண்டும் ஒரு புதிய படத்தைத் தயாரிப்பதற்காகத்தான் ‘ரேடியன்ஸ் மீடியா’ என்னும் நிறுவனத்திடம் 2 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளார்கள் சரத்குமாரும், ராதிகாவும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ராதிகா, சரத்குமார் இருவரும் கடன் வாங்கியிருந்த அந்த ‘ரேடியன்ஸ் மீடியா’ என்னும் நிறுவனம், பிரபல தொழிலதிபரான வருண் மணியனுக்குச் சொந்தமானது.
இந்த வருண் மணியன் ‘ரேடியன்ஸ் மீடியா’ என்ற தனது சொந்த நிறுவனத்தின் பெயரிலேயே ‘வாயை மூடிப் பேசவும்’, ‘காவியத் தலைவன்’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களைத் தயாரித்திருக்கிறார்.
இவருக்கும், நடிகை த்ரிஷாவுக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்து பின்பு, அது திடீரென்று ரத்தானது நினைவிருக்கலாம்.
வருண் மணியன் 2010-ம் ஆண்டில் இருந்தே படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்தார். அதனால் சினிமா வட்டாரத்தில் பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.
வருணின் குடும்பமும், ராதிகாவின் குடும்பமும் ஒரு தலைமுறையாக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். வருண், ராதிகாவின் வீட்டிலேயே வளர்ந்தவர் என்றுதான் அவருடைய குடும்ப நண்பர்கள் சொல்கிறார்கள்.
அந்த வகையில் ராதிகாவும், சரத்குமாரும் வருண் மணியனுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். த்ரிஷா-வருண் மணியன் திருமண நிச்சயத்தார்தத்தில்கூட சரத்தும், ராதிகாவும் மிக உற்சாக கலந்து கொண்டிருந்தார்கள்.
த்ரிஷாவுடனான நிச்சயத்தார்த்தம் முறிந்த பிறகு வருண் மணியன் ‘தினகரன்’ பத்திரிகையை நிறுவியவரும், தமிழகத்தின் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான கே.பி.கந்தசாமியின் பேத்தியும், முன்னாள் ராஜ்யசபாவின் திமுக உறுப்பினரான கே.பி.கே.குமரனின் மகளுமான கனிகா குமரனைத் திருமணம் செய்துள்ளார்.
கே.பி.கந்தசாமியின் முதல் மனைவி தினத்தந்தியைத் தோற்றுவித்த சி.பா.ஆதித்தனாரின் மகள். கே.பி.கந்தசாமியின் இரண்டாவது மனைவியான மல்லிகா, நடிகர் சரத்குமாரின் உடன் பிறந்த அக்காள். கே.பி.கே.குமரன் கே.பி.கந்தசாமியின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். அந்த வகையில் கே.பி.கே.குமரனுக்கு சரத்குமார் சகோதரர் முறை வரும்.
இப்போது வருண் மணியன் சரத்குமாரின் ஒன்றுவிட்ட அண்ணனான கே.பி.கே.குமரனின் மகளான கனிகா குமரனை மணம் முடித்திருந்தாலும், தற்போது கே.பி.கே.குமரனுக்கும், சரத்குமாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்பதால் இவர்களின் திருமணத்திற்குக்கூட சரத்-ராதிகா போகவில்லை என்கிறார்கள். இங்கேதான் இவர்களிடையே உறவு கசந்திருக்கிறது.
வருண் மணியன்-கனிகா திருமணம் 2017-ம் ஆண்டு நடைபெற்றது. சரத்-ராதிகா இருவரும் வருண் மணியன் கம்பெனியில் இருந்து கடன் பெற்றது 2014-ம் ஆண்டில். ஆக முன்பேயே கடன் பெற்றிருந்தும் அதை அடைக்க ஏன் இவர்கள் முயற்சி செய்யவில்லை என்பது புரியவில்லை.
போதும்.. போதாமைக்கு மலையாள தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபனையும் சேர்த்து இதில் இழுத்துவிட்டிருக்கிறார்கள். அவரோ கேரள தேசத்தில் பெரும் கோடீஸ்வரர். இந்த 2 கோடி பணமெல்லாம் அவருக்கு ஜூஜுபியாம். ஆனாலும் மாட்டிக் கொண்டுள்ளார்.
வருண் மணியனைப் பொறுத்தமட்டில் பிஸினஸில் மிகவும் கறாராக இருப்பார் என்கிறார்கள். தெரிந்தவர், உறவினர், நண்பர் என்றெல்லாம் பார்க்க மாட்டார் என்று திரையுலகத்தில் பலரும் சொல்கிறார்கள்.
இதே பார்முலாப்படி ராதிகா மற்றும் சரத்குமாரை வருண் மணியன் அணுகியபோது ஏற்பட்ட மனத்தாங்கல் ஈகோ பிரச்சினையாகி கடைசியில் கோர்ட்டுக்கு வந்து இப்படி தண்டனையில் முடிந்திருக்கிறது என்கிறது அவர்களின் நெருங்கிய குடும்ப வட்டாரம்.
‘கோச்சடையான்’ படத் தயாரிப்பின் காலக்கட்டத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த், வருண் மணியனுடன் மிக நட்பாக இருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் அந்தப் படத்திற்காக 5 கோடி ரூபாயை கடனாக, லதா ரஜினிகாந்த் வருண் மணியனிடமிருந்து பெற்றார். அந்தப் பணத்தை லதா ரஜினிகாந்த் தராமல் போக, இதேபோல் நீதிமன்றத்திற்குச் சென்று போராடித்தான் லதா ரஜினியிடமிருந்து பணத்தைப் பெற்றார் வருண் மணியன். அதோடு சவுந்தர்யாவின் நட்பும் முறிந்தது.
தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவதாக திருமணம் செய்திருக்கும் விசாகன் வணங்காமுடி, சாட்சாத் வருண் மணியனின் தற்போதைய மனைவியான கனிகா குமரனின் முன்னாள் கணவர் என்பது, இதில் இருக்கும் ஒரு ருசிகரமானத் தகவல்.
எப்போதோ பேசி முடித்திருக்க வேண்டிய விஷயத்தை இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டதற்கு ராதிகா-சரத்குமார் ஜோடியைத்தான் அனைவரும் குறை சொல்கிறார்கள்..!
முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய ஈகோவினால் விளைந்த துயரம் இது..!