“கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக் குறிப்புகள் ஓடின”  – இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

“கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக் குறிப்புகள் ஓடின”  – இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள ‘ராட்சசன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் ஜி.டில்லிபாபு (ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி) மற்றும் ஆர்.ஸ்ரீதர் (ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்) ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைத்த அனுபவம் பற்றி ஜிப்ரான் பேசுகையில், “எந்த ஒரு படத்திலும் பாராட்டு எந்த அளவுக்கு வருகிறதோ, அந்த அளவுக்கு பொறுப்பும் என் தோள்களில் வந்து சேர்கிறது. மக்கள் என் பின்னணி இசையை அதிகம் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதனாலேயே படத்தை தேர்வு செய்வதில் நான் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாகி விட்டது.

gibran

உண்மையில், எந்த ஒரு இயக்குநரும் எனக்கு ஒரு கதை சொல்லும்போது, அதில் பின்னணி இசைக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனிப்பேன். சில நேரங்களில், அது என் கருத்துக்கு ஆதரவாகவும், ஒரு சில நேரங்களில் முரண்பாடாகவும் இருந்திருக்கின்றன.

ஆனால், ‘ராட்சசன்’ கதையை கேட்கும்போதே என் மனதில் இசைக் குறிப்புகள் ஓடியது. கதையை கேட்கும்போது பின்னணி இசையில் நிறைய சவால்கள் இருப்பதை நான் உணர்ந்தேன்.

பின்னணி இசையின் வழக்கமான கூறுகளை கொண்டு இசையமைப்பதை தாண்டி, நிறைய இடங்களில் ‘இசையுடன் ஒலியை’ கலந்து தர வேண்டி இருந்தது. கதை சொல்லல் மற்றும் பிவி சங்கரின் சிறப்பான காட்சியமைப்புகளுக்கு  இசை மூலம் சிறந்த விஷயங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தேன்.

நடிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவருமே புதிய பரிமாணம் எடுத்திருக்கிறார்கள். ஒரு ரசிகனாக அனைவருமே என்னைக் கவர்ந்தனர். இந்தப் படத்தில் எல்லோரும் திறமையாளர்கள். அதனால் நானும் மிகச் சிறப்பாக பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு மற்றும் அவர்களின்  கருத்துகளை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

Our Score