full screen background image

‘ராஜி’ திரைப்படம் – திரை முன்னோட்டம்..!

‘ராஜி’ திரைப்படம் – திரை முன்னோட்டம்..!

முழுக்க முழுக்க கிராமத்துக் கதையாக உருவாகி இருக்கும் படம் ‘ராஜி’. H and N மூவி மேக்கர்ஸ் சார்பில் வி.ஹேமந்த்குமார், நிஜாம் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை அசோக்.ஜி இயக்கியுள்ளார்.

 கதாநாயகியை பிரதானப்படுத்தி பின்னப்பட்ட கதை இது. ஆணாதிக்கம் கொண்ட சமுதாயம் இது. இங்கிருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள், பெருமைகள் அனைத்துமே ஆணை மையப்படுத்தியே உள்ளன. அதுவும் சில குறிப்பிட்ட சடங்கு உரிமைகள் ஆணுக்கு மட்டுமே உள்ளன. ஏன் அதை பெண் செய்யக்கூடாது என்று கேட்டு மரபை உடைக்கிற ஒரு பெண்ணின் கதைதான் இந்த ‘ராஜி’.

ராஜாத்தி என்கிற கதாநாயகியின் பாத்திரத்தின் பெயரை அனைவரும் ‘ராஜி’ என்கிற அவ்வூரில் அழைக்கிறார்கள். அதுவே படத்தின் பெயராகி உள்ளது.  ராஜி படித்துவிட்டு வீட்டிலிருக்கும் பெண். நாயகன் படித்துவிட்டு வேலையில்லாமல் ஊர் சுற்றிவரும் பொறுப்பற்றவன். அவனை அவள் திருத்தி பொறுப்பான இளைஞனாக மாற்றுகிறாள். அவர்களுக்குள் வரும் காதல், தடைகள், அதிர்ச்சிகர சம்பவங்கள் என்று கதை சூடு பிடிக்கிறது.

படத்தில் நாயகனாக ராஜ்கமல் நடித்துள்ளார். இவர் குறும்பட நடிகர். கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர். மற்றும் நடனம், சண்டை பயிற்சிகளும் எடுத்தவர். சேலம் அருகிலிருக்கும் வாழப்பாடி இவரது சொந்த ஊர். இப்படத்தின் மூலம் திரையுலகில் காலடியெடுத்து வைக்கிறார்.

நாயகி உமா ஸ்ரீ. இவர் ‘ராட்டினம்’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். ‘நெல்லு’ படத்திலும் நடித்துள்ளார். ‘என் காதல் புதிது’, ‘பரணி’, ‘அஞ்சுக்கு ஓண்ணு’ ஆகிய படங்களில் இப்போது நடித்து வரும் இவர் ‘ராஜி’யில் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார்.  மேலும் சபிதா ஆனந்த், குமரிமுத்து,தேவிப்பிரியா போன்ற நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர்.

சகாய ஜேசுதாஸ் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். பெங்களூரை சேர்ந்த இவர் கிராமத்து மைனராக நடித்திருக்கிறார். இவரது நண்பர் ஹேமந்த் குமார் மூலம்தான் இயக்குநருக்கு பட வாய்ப்பு வந்தது. இப்படம் உருவாவதற்கும் ஜேசுதாஸ்தான் காரணமாக இருந்துள்ளார்.

தர்மபுரி, ராயக்கோட்டை, நெடுங்கல், ஜமீன்தார் மேடு, காவேரிப்பட்டினம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அறுபதே நாட்களில் முழுப் படத்தையும் முடித்துள்ளார் இயக்குநர்.

கட்டுமானத் தொழிலில் தயாரிப்பாளர் இருந்தவரான ஹேமந்த் குமார் சினிமா பார்க்கக்கூட நேரமில்லாமல் தொழிலில் பரபரப்பாக இயங்கி வந்தவர்.  இயக்குநர் தனது நண்பர் மூலம் இவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். “படத்துக்கான கதையை என்னிடம் கூறினார். அவர் உணர்ச்சிகரமாகக் கூறியது என்னைக் கவர்ந்தது. அது மட்டுமல்ல படத்துக்கான பாடல்களையும் தயாராகக் கொண்டு வந்திருந்தனர். அந்த முன் தயாரிப்பு எனக்குப் பிடித்தது. இதனால்தான் சட்டென்று தயாரிப்பில் இறங்க முடிவு செய்தேன்..” என்கிறார் தயாரிப்பாளர் ஹேமந்த்குமார்.

எழுதி இயக்கும் இயக்குநர் அசோக்.ஜி கூறும்போது “என் முதல் படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்ததில் மகிழ்ச்சி. கதையைக் கேட்டவர் மற்ற எல்லாவற்றையும் தேர்வு செய்யும் உரிமையையும் சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார். அதன்படியே நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களை சுதந்திரமாக தேர்வு செய்தேன்…” என்கிறார்.

இசை – பீட்டர் ஜோசப்

பாடல்கள்  –  தர்மபுரி சோமு

ஒளிப்பதிவு – குமரன்.ஜி

படத்தொகுப்பு – காளிதாஸ்

நடனம் – ராதிகா

சண்டை பயிற்சி – சிவு

எழுத்து இயக்கம் – அசோக்ஜி

தயாரிப்பு – H and N மூவி மேக்கர்ஸ் சார்பில் வி.ஹெமந்த்குமார், நிஜாம்.

Our Score