நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ என்ற பாடலையும் அந்தப் பாடல் காட்சியையும் தமிழ் ரசிகர்கள் இப்போதும் மறந்திருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து தற்போது ஒரு படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.
இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல், K.P.Y.பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை – ஜி.கே.வி., ஒளிப்பதிவு – ஆர்.ரமேஷ்.
இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி என்று இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார்.
நடன இயக்குநர்கள் பிரபுதேவா, ‘RRR’ படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித், ராகவா லாரன்ஸ் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றியவர்.
லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் வெளிவந்தார்களா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் ஒன் லைன்.
அதற்கிடையே நடக்கும் பரபரப்பான, விறுவிறுப்பான, கிளுகிளுப்பான, சம்பவங்கள்தான் படம். க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இந்தப் படம் இருக்கும்.
படம் குறித்து தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி பேசியபோது, “இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும், தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள். பெல்லாரி ராஜா தாமுவைக் கொன்று விடுகிறான்.அதை நேரில் பார்த்த பெண் வீடியோ எடுத்து விடுகிறாள் .அவளைத் துரத்துகிறது பெல்லாரியின் கும்பல்.
அவள் எஸ்.ஆர்.லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடிப் போகிறாள். அதே நேரம் லேடிஸ் ஹாஸ்டலுக்குள் இளைஞர்கள் இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். அங்குள்ள இரு பெண்களால் ஒரு கால் பாய் அழைக்கப்படுகிறான். ஆள் மாறாட்டக் குழப்பத்தில் ஒரு கொலை நடக்கிறது.
இப்படி அடுத்தடுத்த கொலைகள், பரபரப்பு விறுவிறுப்பு கொண்ட பின்னணியில் இக்கதை உருவாகியுள்ளது..” என்றார்.
படத்தில் இடம் வசனங்களையும், காட்சிகளையும் பார்த்து அதிர்ந்து போன சென்னை மண்டல தணிக்கை அதிகாரி அறுபது வெட்டுகள் கொடுத்திருந்தார். ஆனால், அதையும் மீறி மும்பை சென்று மறு தணிக்கை பெற்று வந்துள்ளார்கள்.
9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் நவம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.









