‘மூக்குத்தி அம்மன்’ விக்கிக்கும், விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தமே இல்லீங்கோ..!

‘மூக்குத்தி அம்மன்’ விக்கிக்கும், விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தமே இல்லீங்கோ..!

இதுவரையிலும் வெளியிடப்பட்டிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் பாடல் காட்சிகள், டீஸர், டிரெயிலர் அனைத்துமே பரவலாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு காத்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு.

இந்த நேரத்தில் இந்தப் படத்தைச் சம்பந்தப்படுத்தி ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அது இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனா என்பதுதான்..

காரணம், ‘மூக்குத்தி அம்மன்’ போஸ்டரில் ‘இணை தயாரிப்பு – விக்கி’ என்று இருப்பதுதான். விசாரித்தால் ‘அந்த விக்கி வேறு.. இந்த விக்னேஷ் சிவன் வேறு’ என்கிறார்கள்.

இது பற்றி அந்தப் படத்தின் நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “அதை ஏன் ஸார் கேக்குறீங்க.. இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்லியே நான் ஓய்ஞ்சு போயிட்டேன். இந்தப் படத்துக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அந்தப் போஸ்டரில் இருக்கும் ‘விக்கி’ என்பவரின் இயற்பெயரும் ‘விக்னேஷ்’தான். ஆனால் அவர் ‘முள்ளும் பலரும்’ படத்தைத் தயாரித்த பழம் பெரும் தயாரிப்பாளரான ‘ஆனந்தி பிலிம்ஸ்’ வேணு செட்டியாரின் பேரன்.

இரண்டு தலைமுறைகளாக இந்த விக்னேஷின் குடும்பமும், மூக்குத்தி அம்மன் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கே.கணேஷின் குடும்பமும் நெருக்கமான நண்பர்கள் என்பதால் ஐசரி கணேஷ் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் இணை தயாரிப்பாளராக இருந்து தயாரிப்புப் பணியை கவனித்து வருகிறார் இந்த விக்கி.

இவர் இல்லையேல் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் கம்பெனியே இல்லை. அப்படியொரு திறமைசாலி. உழைப்பாளி. அவர்தான் இந்த விக்கி…” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

Our Score