“சினிமாவில் இருந்து விலகுகிறோமா..?” – பிவிபி நிறுவனம் மறுப்பு அறிக்கை..!

“சினிமாவில் இருந்து விலகுகிறோமா..?” – பிவிபி நிறுவனம் மறுப்பு அறிக்கை..!

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் ‘தோழா’ படத்தைத் தயாரித்த நிறுவனமான பிவிபி சினிமா நிறுவனம் தொடர் தோல்விகளைக் கண்டு துவண்டு போய் சினிமா தயாரிப்பு துறையில் இருந்து விலகப் போவதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன.

இதை மறுத்து பிவிபி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

"நான் ஈ', 'விஸ்வரூபம்', 'தோழா', 'பெங்களூரு நாட்கள்' போன்ற அற்புதமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கிய நிறுவனம் எங்களது PVP சினிமா.

அண்மையில்,  எமது நிறுவனம் படத் தயாரிப்பில் இருந்து வெளியேறுகிறது போன்ற செய்திகள், ஊடகங்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத பொய்யான தகவல். இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இது போன்ற வதந்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடங்களில் சமீப காலங்களில் அதிகமாக பரவி வருகிறது.

தோல்விகளை கண்டிறாத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்தத் தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்கு பாதை வகுக்கும்.  

ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் துறைதான் இந்த சினிமா துறை. அப்படி ஏற்பட்ட சில சறுக்கல்களுக்காக பாரம்பரியமிக்க  எங்கள் நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது.

பிரபல ஹீரோ மற்றும் பிரபல இயக்குநரின் கூட்டணியில் உருவாகும்  ஒரு படம் எங்களின் அடுத்தத் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் இப்போது குறிப்பிட விரும்புகிறோம்.

அதுமட்டுமின்றி,  PVP சினிமா தொடர்ந்து மக்களுக்காக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளது.." என்று அந்தப் பத்திரிகை செய்திக் குறிப்பில் சொல்லியிருக்கிறார்கள்.