அதிகம் படித்த மக்கள் முதல் சராசரியான பாமர மக்கள்வரை எல்லோர் மனதிலும் எளிதாக நுழைய கூடிய ஒன்று, சினிமா. அதற்கு எந்தவித மொழியும் தேவை இல்லை என்பதை தற்போது ஆழமாக உணர்த்தி இருக்கிறது, விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம்.
தெலுங்கில் ‘பீட்சா – 2’ என்று தலைப்பிடப்பட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
ஹைதராபாத்தில் கடந்த நவம்பர் 27-ம் தேதி, விமரிசையாக நடைபெற்ற இந்த படத்தின் இசை விழாவே இதற்கு சிறந்த உதாரணம்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், தம்மா ரெட்டி பரத்வாஸ், பெல்லம்கொண்ட சுரேஷ், எஸ்.வி.ஆர்.மீடியா – சோபராணி, இசையமைப்பாளர் மந்த்ரா ஆனந்த் மற்றும் மல்காப்புறம் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த ‘பீட்சா – 2’ (புரியாத புதிர்)படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை டி.வி.சினி கிரியேஷன்ஸ் சார்பில் விநியோகஸ்தர் டி.வெங்கடேஷ் வாங்கி விநியோகிக்கிறார். ஜே.எஸ்.கே.பிலிம் கார்பொரேஷன் ஜே.சதீஷ்குமார், மாருதி மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோர் இணைந்து இந்த படத்தை வெளியிடுகின்றனர்.
ஜே.எஸ்.கே.பிலிம் கார்பொரேஷன் ஜே.சதீஷ் குமார் ‘பீட்சா – 2’ படத்தின் இசை தட்டை வெளியிட, அதை பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் பெற்று கொண்டார்.
“நல்ல கதைக் களங்கள் கொண்ட திரைப்படங்கள் அனைத்தும் வர்த்தக உலகில் வெற்றியைத்தான் பெற்றிருக்கின்றன. அப்படியொரு திரைப்படமாக எங்களின் இந்த ‘பீட்சா – 2’ இருக்கும். வலுவான கதையம்சம் நிறைந்த தமிழ் திரைப்படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களின் ரசனைகளையும், எதிர்பார்புகளையும் முழுவதுமாக ‘பீட்சா – 2’ திரைப்படம் பூர்த்தி செய்யும்…..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் விநியோகஸ்தர் டி.வி.சினி கிரியேஷன்ஸ் டி.வெங்கடேஷ்.