நேற்று மாலைதான் 65 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, ‘புலிப்பார்வை’ படத்திற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து, படம் எப்படி வெளியாகும்ன்னு பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.
18 மணி நேர இடைவெளியில் இன்று காலையில் ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் மீடியாக்களை சந்தித்தது ‘புலிப்பார்வை’ டீம்.
அதிசயமாக இந்த முறை புலிப்பார்வை படத்தில் பிரபாகரனாக நடித்திருக்கும் ‘வேந்தர் மூவிஸ்’ மதனே பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
மதன் பேசும்போது, “தலைவர் பிரபாகரனையும், பாலகர் பாலச்சந்திரனையும், விடுதலைப்புலிகளையும் கெளரவப்படுத்துற நோக்கத்துலதான் இந்தப் படத்தை எடுத்தோம். அதனால் தமிழ் ஆர்வலர்கள் ஆட்சேபிக்கும் எந்த ஒரு காட்சியோ, வசனமோ ‘புலிப்பார்வை’ படத்துல இருக்கவே இருக்காது.
‘புலிப்பார்வை’ படத்தில் நெடுமாறனும், சீமானும் சில முக்கியமான திருத்தங்கள் செய்யணும்னு சொல்லியிருந்தாங்க. அவங்க சொன்னபடி திருத்தம் செய்யிற வேலைகள் நேத்துல இருந்து நடந்துக்கிட்டிருக்கு.
நண்பர் வேல்முருகன் தலைமையில் திரண்டிருக்கும் தமிழ் ஆர்வலர்கள் குழுவினர்களுக்கு என்னுடைய ஒரு உறுதிமொழியைக் இந்த நேரத்தில் இந்த மேடையில் இருந்து கூறிக் கொள்கிறேன்.
உங்களுடைய பார்வைக்கு ‘புலிப்பார்வை’ படம் காண்பிக்கப்பட்டு, உங்கள் சம்மதம் மற்றும் ஆதரவோடுதான் இந்தப் படம் ரிலீசாகும். உங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை என்றால், எத்தனை கோடி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. இந்தப் படத்தை நான் ரிலீஸே செய்ய மாட்டேன்… என்று இப்போதே நான் உறுதியளிக்கிறேன். இதையும் மீறி உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.
தொடர்ந்து அவரிடம் ‘புலிப்பார்வை’ இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் தாக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்..
அதற்கு பதிலளித்த மதன் “மாணவர்களை அடிச்ச விஷயம் எங்களுக்கு சுத்தமாத் தெரியாது. ஏன்னா அப்போ நாங்க எல்லாருமே பங்ஷன் நடந்த மேடையில இருந்தோம். விழா நடக்குற இடத்துல அவங்க கத்துனாங்க. அதுக்கு வேந்தர் அய்யா ‘கொஞ்சம் அமைதியா இருங்க. உட்கார்ந்து பேசலாம்’னு சொன்னாங்க. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எங்களுக்கும் தெரியல. ஆனா அப்படி ஏதாவது அடிதடி நடந்திருந்தால் கண்டிப்பாக, நான் மாணவர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…” என்றார்.
அடுத்தது ‘கத்தி’தான்..!
ஒன்று திரண்டால் மட்டுமே நாம் ஜெயிக்க முடியும்..! அந்த 65 இயக்கத்தினருக்கும் நமது பாராட்டுக்கள்..!