full screen background image

பொதுவாக எம் மனசு தங்கம் – சினிமா விமர்சனம்

பொதுவாக எம் மனசு தங்கம் – சினிமா விமர்சனம்

தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கிறார். வித்தியாச இயக்குநரான ஆர்.பார்த்திபன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘டைகர் பாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் மயில்சாமி, ‘நமோ’ நாராயணன், சுந்தர், ரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், இசை – டி.இமான், பாடல்கள் – யுகபாரதி, கலை – வி.செல்வக்குமார், படத் தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, நடனம் – பிருந்தா, தினேஷ், ஷோபி, தயாரிப்பு நிறுவனம் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட்,  தயாரிப்பாளர் – என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, எழுத்து, இயக்கம் – தளபதி பிரபு.

அறிமுக இயக்குநரான தளபதி பிரபு, இயக்குநர்கள் விக்ரமன், பொன்ராம் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இன்றைய இளைய தலைமுறையினர் வசதியான வாழ்க்கை வேண்டி கிராமத்திலிருந்து, நகரங்களுக்கு படையெடுப்பதைவிட்டுவிட்டு இருக்கும் இடத்திலேயே அந்த வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற கதைக் கருவை முன் வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் தனது கிராமத்திற்கு ஏதாவது செய்து நல்ல பெயரெடுக்க நினைக்கிறார் ஹீரோவான கணேஷ் என்னும் உதயநிதி. இதற்காக அவ்வப்போது ஊருக்குள் எதையாவது செய்து வெளியூர்க்காரர்களை அழைத்து வந்து செலவு வைத்துவிடுவார். பின்பு ஊர்க்காரர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பணம் வசூலித்து அந்த்த் தண்டத்தை தீர்ப்பார்கள்.

பக்கத்து ஊரில் இருக்கும் தொழிலதிபரான ஊத்துக்காட்டான் என்னும் பார்த்திபன் தன் புகழுக்காக, பெயருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்.

சும்மா இருக்கும் குடிசை வீட்டை தானே ஆள் வைத்து கொளுத்திவிட்டு கலெக்டரும், பரிவாரங்களும் வரும் நேரத்தில் அவர்களுக்கு முன்பாக எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் நுழைந்து உள்ளேயிருப்பவர்களை காப்பாற்றி நல்ல பெயரை எடுக்கும் அளவுக்கு பைத்தியம் பிடித்தவர் பார்த்திபன். இவருடைய அல்லக்கை, டிரைவர் நாராயணன் என்னும் மயில்சாமி.

இந்த பார்த்திபனின் மகள் சிறு குழந்தையாக இருக்கும்போது இந்த ஊருக்கு வந்து ஊர்க் கோவிலில் மகளுக்கு காது குத்தி மொட்டையடிக்க நினைக்கிறார். பாதி மொட்டை அடித்திருக்கும் நிலையில் ஊருக்குள் ஒரு சாவு நிகழ்ந்துவிட்டதால் கோவிலில் எந்தக் கும்பிடும் நடக்க்க் கூடாது என்று ஊர்க்காரர்கள் தடா உத்தரவு போடுகிறார்கள்.

இதனால் பாதி மொட்டையுடன் தனது குழந்தையை தூக்கிச் செல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார் பார்த்திபன். இது அந்தக் காலத்திலேயே அவருடைய மனதை பெரிதும் பாதிக்க.. உதயநிதியின் ஊரையே காலி செய்ய நினைக்கிறார்.

இதனால் அவர் வளர்ந்து வந்த வேளையிலேயே திட்டமிட்டோ. சதி செய்தோ அரசாங்கத்தின் எந்தவொரு நல்ல திட்டமும் இந்த ஊருக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொண்டார். அதே நேரம் அந்த ஊரில் இருப்பவர்களையும் வெளியூருக்கு போய் வேலை பார்த்து பொழைச்சுக்குங்க என்று சொல்லி சிலருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார். 2000 குடும்பங்கள் இருந்த ஊரில் இப்போது வெறும் 600 பேர்தான் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் ஊருக்குள் தலையெடுக்கும் உதயநிதி தன்னுடைய நண்பனான டைகர் பாண்டி என்னும் சூரியுடன் இணைந்து பல கலகங்களை செய்து நல்லது செய்து வருகிறார்.

ஒரு நாளில் பக்கத்து ஊருக்கு உதயநிதி போக.. அங்கே பெட்ரோல்கூட விற்பனை செய்யப்படுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு விசாரிக்க.. அந்த ஊரில்தான் பார்த்திபனின் தங்கையை கட்டிக் கொடுத்திருப்பதாகவும், பார்த்திபனின் மைத்துன்ன்தான் அந்த ஊரின் முக்கியப் புள்ளி என்றும், தங்கையின் மாமியார் ஊர் என்பதால் அந்த ஊருக்கு பார்த்திபன் நிறைய வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் உதயநிதிக்கு தெரிய வருகிறது.

இப்போது பார்த்திபனுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருப்பது தெரிந்த்தும், அந்தப் பெண்ணை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டால் பார்த்திபன் தனது ஊரையும் இதேபோல் நல்லபடியாக கவனிப்பாரே என்று நினைத்து பார்த்திபனின் மகளான லீலாவதி என்னும் நிவேதா பெத்துராஜை பாலோ செய்கிறார் உதயநிதி. இந்த பாலோ அப் வெற்றிகரமாக காதலாக மாற இருவரும் காதலிக்கத் துவங்குகின்றனர்.

இந்த நேரத்தில் உதயநிதியின் போக்கினால் அதிருப்தியாகும் பார்த்திபன் அவருக்கெதிராக காய் நகர்த்த, அந்தக் கிராமத்து வழக்கப்படி உதயநிதியை ஊரைவிட்டு வெளியேற்ற ஓட்டெடுப்பு நடத்துகிறார்கள். இதில் உதயநிதி தோல்வியடைய.. அவரை அவசரமாக துபாய்க்கு விமானமேற்றி அனுப்புகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்பு அந்த ஊருக்கு வரவிருக்கும் பேக்டரிக்கான நில ஒப்படைப்பில் உதயநிதியும் கையெழுத்து போட்டாக வேண்டிய கட்டாயம் வருகிறது. இதனால் ஊரே ஒன்று திரண்டு உதயநிதியை மாலையும், கழுத்துமாய் வரவேற்று ஊர்வலமாய் அழைத்து வந்து நிலத்தை விற்க ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த நில விற்பனையில் ஏதோ சூது இருப்பதால் நினைக்கும் உதயநிதி கடைசி நிமிடத்தில் ஒரு டிராமா போட்டு நிலத்திற்கான மதிப்பை ஏற்றிக் கேட்க மற்றவர்களும் இதேபோல் உயர்த்திக் கேட்க.. குறைந்த விலையில் நிலத்தை வாங்கிவிட நினைத்த பார்த்திபனின் முயற்சி வீணாகிறது.

இந்த நேரத்தில்தான் உதயநிதி தனது மகளை காதலிப்பதும் பார்த்திபனுக்கு தெரிய வருகிறது. இந்தக் காதலை முறிக்க நினைக்கிறார் பார்த்திபன். எப்படியாவது இந்தக் காதலை வெற்றியாக்கத் துடிக்கிறார் உதயநிதி. இருவரில் யாருடைய எண்ணம் ஜெயித்தது என்பதுதான் படத்தின் திரைக்கதை.

உதயநிதி ஸ்டாலின் எப்போதும்போல தன்னுடைய கேரக்டரை நிறைவாகவே செய்திருக்கிறார். நன்கு நடனமாடுகிறார். டயலாக் பேசுகிறார். சண்டையிடுகிறார். நக்கல் அடிக்கிறார். இதற்கு மேலும் அவரிடத்தில் ஏதோ ஒன்று வேண்டும் என்பது போலவே தோன்றுகிறது. இந்த கிராமத்து கேரக்டருக்காச்சும் ஏதாவது வித்தியாசமாக தோன்றுவார் என்று பார்த்தால் அதுவும் இல்லை என்றாகிவிட்டது.

பார்த்திபனின் டிவிஸ்ட்டுக்கு பதில் டிவிஸ்ட் தான் வைத்திருக்கிறோம் என்பதை அவரே சொன்னால்தான் நமக்குத் தெரிகிறது. ஒரு சில நடிகர்கள் தங்களது ஆக்சனிலேயே இதைச் செய்துகாட்டிவிடுவார்கள் என்பதை இயக்குநருக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

படத்தைத் தாங்கியிருப்பது பார்த்திபன்தான். அதே லொள்ளு.. அதே கிண்டல்.. அதே எகத்தாளம்.. வில்லத்தனம் என்பது பார்வையில் கொடூரம்.. மேக்கப்பில் அசிங்கம் என்றெல்லாம் இல்லாமல்.. சாதாரணமாக நமது அண்ணன் மாதிரியே இருந்து உயிரை எடுக்கும் வில்லன்கள்தான் இன்றைக்கு சினிமாவில் டாப் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். இதில் பார்த்திபன் முதல் ரகம்.

அவ்வப்போது சூரி, மயில்சாமியை கலாய்த்துக் கொண்டும், ஒவ்வொரு செய்கைக்குள்ளும் ஒரு டிவிஸ்ட் இருப்பது போல் பார்த்துக் கொண்டும் திரைக்கதையை அப்படியே அங்குலம், அங்குலமாக நகர்த்தியிருக்கிறார் பார்த்திபன். வெல்டன் ஸார்..!

இறுதிக் காட்சியில் கொஞ்சமும் சளைக்காமல் உதயநிதிக்கு முன்பாக நாம் போயிரலாம் என்று சொல்லி விரட்டுவது.. பின்பு இப்படி நடந்தால் இப்படி நடக்க வேண்டும் என்று தனது ஊர்க்காரர்களுக்கு சொல்லி வைத்திருப்பது இவருடைய அடுத்த ஆக்சனில் தெரிய வர.. இப்படியே கிளைமாக்ஸில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக காட்சிகளை நகர்த்தியிருப்பது மிகச் சிறப்பு.

ஹீரோயின் நிவேதா பெத்துராஜை பாவாடை, தாவணியில் பார்க்கும்போது ‘சாமி’ படத்தில் பார்த்த த்ரிஷா போலவே இருக்கிறார். அந்தக் கிராமத்துக் கதைக்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச். மூன்று முறை முக்கி, முக்கி தேர்வெழுதியும் பிளஸ் டூ பாஸ் செய்யாத ஒரு மாணவி. இந்த ஒரு தகுதி போதுமே காதலிப்பதற்கு..! இதைத்தான் படத்திலும் செய்திருக்கிறார்.

அவ்வப்போது கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். தனது அப்பாவை ஏமாற்றி, தன்னையும் ஏமாற்றி திருமணம் செய்யவிருப்பதாக உதயநிதியை தாளித்துவிட்டுப் போகும் காட்சியிலும், உதயநிதியிடம் அப்பாவியாய் அவர் சொல்வதையெல்லாம் நம்பும்படியாய் கேட்கும் காதலியாகவும் ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மின் கைவண்ணத்தில் அழகுர மிளிர்கிறார்.

சூரியின் சில கமெண்ட்டுகளுக்கு சிரிப்பு வருகிறது. பல கமெண்ட்டுகளுக்கு சிரிக்கவே தோணவில்லை. ஆனால் மயில்சாமியின் பல டயலாக்குகள் புன்னகையை சிந்த வைத்திருக்கின்றன. நமோ நாராயணன் இரண்டு காட்சிகள் என்றாலும் தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

டி.இமானின் அழகான இசையில் நான்கு பாடல்களுமே கேட்க வைக்கின்றன. ‘அம்மணி நீ’, ‘என்னான்னு சொல்வேன்’, ‘சிங்கக் குட்டி நானடி’ பாடல்களும், ஆட்டமும் ரசனையானது. பாலசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவில் குறையே இல்லை. கடைசிவரையிலும் கண் குளிர பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

நடன இயக்குநர்களைவிடவும் சண்டை பயிற்சியாளர் கூடுதலாக பாராட்டை பெறுகிறார். ஒரேயொரு சண்டை காட்சி என்றாலும் அதையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.

இது முழுக்க, முழுக்க கிராமத்துக் கதையாக பயணிப்பதால் அனைத்து வகை ரசிகர்களையும் திருப்தி செய்யுமா என்பது தெரியவில்லை.

இறுதிக் காட்சியில் திரெளபதி அம்மன் சிலையின் வரலாறு, பக்கத்து ஊருக்கு அருள் பாலிக்கச் சென்று திரும்பி வருதல் போன்று கிராமத்து சம்பவங்களை அப்படியே படமாக்கியிருப்பது நன்று..!

முதல் காட்சியில் ஓட, ஓட விரட்டி, விரட்டி வெட்டப்படுபவர் படத்தின் கிளைமாக்ஸில் இந்த மரண ஓட்டம் எதற்கு என்பதை சொல்கிறார். இப்படி பிளாஷ்பேக் உத்தியில் கதை சொன்னாலும் படத்தின் திரைக்கதையில் இடையிடையே தொய்வு விழுவதால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை.

சில, பல லாஜிக் மீறல்கள் எல்லாவற்றையும் தாண்டி ஒட்டு மொத்தமாய் இந்தப் படம் ஒரு கிராமத்து அத்தியாயத்தை சொல்கிறது எனலாம்.

Our Score