“பெரிய நடிகர்களை, ஜெயிக்கிறவர்களையே வைத்து தொடர்ந்து படமெடுப்பவர்கள் எச்சில் இலையில் சாப்பிடுகிறவர்கள் போன்றவர்கள்…” என்று இன்று நடந்த தொட்டால் தொடரும் படவிழாவில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் கூறினார்.
துவார். ஜி.சந்திரசேகர் வழங்கும் FCS கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘தொட்டால் தொடரும்’. தமன், அருந்ததி நடிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ளார். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.சி.சிவன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சாந்தம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.
.
ஆடியோவை வெளியிட்டு கேயார் பேசும்போது, “தயாரிப்பாளர் சந்திரசேகர் 5-வது படமாக இதை எடுத்துள்ளார். 5 படங்கள் எடுத்தும் அவர் சிரித்துக்கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும்போது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டிருப்பது நல்ல அறிகுறியாகத்தெரிகிறது. இப்போதெல்லாம் ஆடியோ விழாக்களுக்கு ஹீரோயின் நடிகைகள் வருவதில்லை. ஆடியோ விழாக்களுக்கு வருவதைத் தவிர்க்கிறார்கள். மீடியாக்கள் ஹீரோயின் நடிகைகள் வந்தால்தான் படங்கள் எடுக்கிறார்கள்; பேட்டி எடுக்கிறார்கள். தாங்கள் நடித்த படங்களின் ப்ரமோஷனுக்கு நடிகைகள் வர வேண்டும். அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.தனக்கு வாய்ப்பு கொடுத்த, தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் ஜெயிக்க உதவ வேண்டும்.
இந்த தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் சிங்கப்பூரிலிருந்து வந்து இருக்கிறார். தயாரிப்பாளராகி இருக்கிறார். இவர் நினைத்திருந்தால் பெரிய நடிகர்களை வைத்துப் படமெடுத்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தன்னால் திரையுலகிற்கு ஏதாவது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று புது நடிகர்கள், புதிய குழுவினரை வைத்து படமெடுத்துள்ளார்.
படமெடுக்கும் தயாரிப்பாளர் யாரையாவது புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும். அதன் மூலம் திரையுலகிற்குப் பயன்படவேண்டும். ஜெயிக்கிறவர்களையே துரத்தி துரத்தி வைத்துப் படமெடுப்பவர்களை எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமமாகத்தான் சொல்ல வேண்டும். அவர்களால் திரையுலகிற்கு எந்தப் பயனும் இல்லை. சினிமாவை நேசிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிற தொகையைக் கொடுத்து கால்ஷீட் கேட்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒழிய வேண்டும். அவர்களால் திரையுலகிற்கு எந்த வளர்ச்சியும் இல்லை.
அவர்கள் கதையே கேட்க மாட்டார்கள். இன்று சின்ன படங்கள் ஓடக் காரணம். நல்ல கதை இருக்கிறது. இயக்குநருக்கு அதைச் சொல்கிற சுதந்திரம் இருக்கிறது. பெரிய நடிகர்கள் பலருக்கும் கதை கேட்கும் அறிவே இல்லை. இப்படிப்பட்டவர்கள் இயக்குநரின் கதையில் தலையிடுகிறார்கள். இதனால் படம் தோல்வியில் முடிகிறது. தயாரிப்பாளரை மதித்து நடிகர் நடிகைகள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்…” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் இயக்குநர்கள் சீனுராமசாமி, பத்ரி, கார்த்திக் சுப்புராஜ், கவிஞர்கள் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, யு டிவி தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் பி.சி.சிவன், அருள்தேவ், சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் தமன், எப்.எம்.பாலாஜி, அப்புக்குட்டி, வேல்முருகன், வின்சென்ட் அசோகன், வெற்றி, நடிகைகள் அருந்ததி, மதுமிதா, தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், சுரேஷ் காமாட்சி, விமலா பிரிட்டோ, லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் ஆகியோரும் பேசினர்.
முன்னதாக தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். இயக்குநர் கேபிள் சங்கர் நன்றி கூறினார். விழாவை நடிகர் விஜய் ஆனந்த் தொகுத்து வழங்கினார்.
கேயாரின் கோபமெல்லாம் மிகச் சரிதான்.. ஆனால் அவருடைய பக்கத்தில் அமர்ந்திருந்த மெகா பட்ஜெட் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை வைத்துக் கொண்டே இப்படி பேசியது பொருத்தம்தானா..? இந்த அறிவுரை ஏ.எம்.ரத்னத்துக்கு பொருந்தாதா..? இப்போது அவரும் தொடர்ச்சியாக அஜீத்தை வைத்து படமெடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.. அப்போ ஏ.எம்.ரத்னமும் ஒரு எச்சில் இலை தயாரிப்பாளர்தானா..?