full screen background image

கேயார் தோல்வி – தாணு வெற்றி – இதனால் யாருக்கு லாபம்..?

கேயார் தோல்வி – தாணு வெற்றி – இதனால் யாருக்கு லாபம்..?

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவிதி அகோரமாக இருக்கிறது..!

இந்த 5 மாதங்களில் வெளியான திரைப்படங்களில் ‘கோலிசோடா’ தவிர்த்து வேறெந்த படமும் லாபத்தை ஈட்டித் தரவில்லை. வெளியிடப்பட்ட படங்களில் 99 சதவிகித படங்கள் தோல்வியாகி தமிழ்ச் சினிமா துறையை வேறு பக்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது. இது எதைப் பற்றியு்ம் கவலைப்படாமல் சிலருடைய தனி மனித ஈகோவினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதியன்று நடைபெற்ற சங்கத் தேர்தலில் கேயார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 832 ஓட்டுக்களில் கேயார் அணி 449 ஓட்டுக்களைப் பெற்றிருந்தது.

அதன் பின்னர் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பதை போல தினம் தினம் தாணு தரப்பினர் கொடுத்த வழக்குகளுக்கு பதில் சொல்லியே இன்றைய நிர்வாகிகளுக்கு கையொடிந்து போனது..

முதலில் தேர்தல் செல்லாது என்று கூறி வழக்கு போட்டார் தாணு. அது தள்ளுபடியானது. நிர்வாகத்தை நடத்தக் கூடாது என்று சொல்லி வழக்கு போட்டார். அதுவும் தீர்த்து வைக்கப்பட்டது. முறைகேடுகள் நடப்பதாக வழக்கு போட்டார். அதுவும் தள்ளுபடியானது.. இனி கோர்ட் மூலமாக எதுவும் செய்ய முடியாது என்று நினைத்த தாணு ரகசிய வழியைக் கையாண்டார்.

சங்கத்தின் விதிப்படி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமெனில், உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு கொடுத்தால் போதும். இதனைச் செய்து பொதுக்குழுவைக் கூட்டும்படி கேட்டார் தாணு. நிர்வாகம் மறுக்கவே, தானே பொதுக்குழுவைக் கூட்டுவதாகச் சொல்லி விளம்பரம் செய்தார்.

தாணுவின் பொதுக்குழுக் கூட்டத்தை தடை செய்ய வம்பாக தானாகவே கோர்ட் படியேறியது கேயார் தரப்பு. கேயார் தரப்பில் மூத்த வக்கீல் ராமானுஜம் வாதாடினார். தாணு தரப்பில் வாதாடியது யார் தெரியுமா..? இன்றைய மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். ஒரு வழக்கிற்கு 5 லட்சத்திற்குக் குறையாமல் சம்பளம் வாங்கும் நளினி இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச்தான் விசாரிக்க வேண்டும் என்றார். அதன்படியே டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் நடந்த விசாரணையில் தாணு கூட்டிய கூட்டத்திற்கு தடை விதித்த கோர்ட், சங்கமே பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று சொல்லி இதன் பார்வையாளராக ஓய்வு பெற்ற நீதிபதியான சண்முகத்தை நியமித்தது. வம்பை விலைக்கு வாங்கிய கதையாகிவிட்டது கேயார் அணிக்கு..! இதுவரையிலும் இப்போதைய நிர்வாகம் ஒற்றுமையாகத்தான் இருந்தது..

ஆனால் அதற்குள்ளாக பிலிம் சேம்பரின் தேர்தலும் வந்தது. அத்தேர்தலில் தமிழகம் சார்பாக யாரை நிறுத்துவது.. கேரளா சார்பாக யாரை கொண்டு வருவது என்பதில் குழப்படி நடைபெற்றது. ஏற்கெனவே பிலிம் சேம்பர் தலைவராக இருந்திருக்கும் கேயார், ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல் முறைகளின்படியே இத்தேர்தலும் நடைபெற வேண்டும் என்றார்.

ஆனால் பழைய முறைப்படி தேர்தல் நடந்தால் வெற்றி பெற்று வருபவர்கள் சினிமா நூற்றாண்டு விழா கணக்குகளை தோண்டித் துருவுவார்கள் என்று நினைத்து தற்போதைய பிலிம் சேம்பர் நிர்வாகிகள் குறுக்கு வழியில் புதிய தலைவரை கேரளாவில் இருந்து இறக்குமதி செய்தார்கள். இதனை கேயார் எதிர்க்க.. அதுவரையில் அவருடன் இருந்த டி.சிவா, டி.ஜி.தியாகராஜன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் மாறி பிலிம் சேம்பருக்கு ஆதரவாளராக மாறினார்கள். ஆனாலும் கேயார் விடாமல் பிலிம் சேமப்ர் தேர்தலை புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.

அத்தேர்தல் நடந்து முடிந்த சூட்டோடு இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான சிற்பபுப் பொதுக்குழுவும் வந்தது. தாணு தரப்பு அரசியல் கட்சிகளை போல பணத்தினை வாரி இறைத்தது.. கேயார் தரப்பு வெறும் நம்பிக்கைகளை மட்டுமே வழங்கியது..  டி.சிவா தரப்பினர் சத்தம் போடாமல் மெளனமாக தாணு தரப்பிற்கு ரகசிய உதவிகளை செய்தார்கள்.. தங்களது தரப்பு ஆதரவாளர்களை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

கேயார் தரப்பில் ஞானவேல்ராஜா, சுபாஷ்சந்திரபோஸ் என்ற இரு நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தார்கள். கேன்வாஷிங் செலவுகளை இவர்கள் இருவருமே பங்கிட்டுக் கொண்டார்களாம். ஆனாலும் இவர்களுக்கு ஆள் பலமில்லாமல் போய்விட்டது..

நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை எழும்பூர் எத்திராஜ் சாலையில் இருக்கும் ரேடிஸன் புளூ ஹோட்டலில் பொதுக்குழு நடைபெற்றது. முதலில் இரு தரப்பின் சார்பிலும் சிலர் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்பு காரசாரமான விவாதமும் நடந்துள்ளது. அடிதடி நடக்கும் சூழலுக்கு முன்பாகவே அது காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 449 வாக்குகள் செலுத்தப்பட்டன. இதில் 2 வாக்குகள் செல்லாதவையாம்..!(தமிழ்நாட்டு பெயரை காப்பாத்துறாங்கப்பா..) இதில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 261 வாக்குகளும், எதிராக 186 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் கேயார் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் கேயார் கட்டாயமாக பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கேயார் மட்டுமே விலகவுள்ளதால் புதிய தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு சங்கம் வந்துள்ளது.

இரு தரப்பினருமே வெற்றி, தோல்வியைப் பற்றிச் சிந்தித்து வரும் வேளையில் ஒரு விஷய்ததை மட்டும் மறந்துவிட்டார்கள்.. இவர்களுடைய போட்டி, பொறாமையினால்  அதிகம் பாதிக்கப்படுவது சங்கம்தான்.. சங்க உறுப்பினர்கள் கஷ்டப்பட்டு சேர்த்துக் கொடுத்த பணம்தான் வீணாகிறது..

இந்த பொதுக்குழுவிற்கான உண்டான செலவுகள்.. கோர்ட் ரீசிவருக்கான சம்பளம் 1 லட்சம் என்று அனைத்துமே சங்கத்தின் செலவுதான்.. அத்தனையும் வீண்தானே..? இதில் கேயார் தரப்பு கோர்ட்டிற்கு சென்றபோது இவர்களுக்காக வாதாடிய வக்கீல் பீஸும் சங்கத்தின் பணம்தான்.. இவர்களுடைய ஆசைக்கு பலிகடா அப்பாவி உறுப்பினர்கள்தான்..! பாவம்..!

832 வாக்களிக்கும் உரிமையுள்ள உறுப்பினர்கள் கொண்ட சங்கத்தில் 449 பேர் மட்டுமே இன்றைக்கு வாக்களித்திருக்கிறார்கள் எனில் இச்சங்க உறுப்பினர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி தெரிந்து கொள்ளலாம்..!

அக்கறையில்லாத உறுப்பினர்கள்.. பொறுப்பில்லாத நிர்வாகிகள்.. தமிழ்த் திரையுலகம் எங்கே போகிறது..?

Our Score