full screen background image

இயக்குநர் சரண் கைதுக்கு தயாரிப்பாளர், இயக்குநர்கள் சங்கம் கண்டனம்..!

இயக்குநர் சரண் கைதுக்கு தயாரிப்பாளர், இயக்குநர்கள் சங்கம் கண்டனம்..!

செக் மோசடி வழக்கில் இயக்குநர் சரண் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்த் திரையுலகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘ஜெமினி’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சரண் சமீபத்தில் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இயக்குநர் சரண், திருநெல்வேலி அருகே ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற தன்னுடைய சொந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்த நேரத்தில், சிவகாசி நகர போலீஸார் அங்கே வந்து அவரை கைது செய்தனர்.

பின்னர், இயக்குநர் சரணை அழைத்து வந்து சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அங்கே நடந்த விசாரணைக்குப் பின்னர் இயக்குநர் சரண் ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் இயக்குநர் சரண் கைது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இயக்குநர் சரணின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவரான டி.சிவா பத்திரிகையாளர்களிடம் விளக்கினார்.

“தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகிய சரண், திருநெல்வேலியில் ‘ஆயிரத்தில் இருவர்’ படப்பிடிப்பில் இருக்கும்போது படப்பிடிப்பு தளத்திலேயே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிவகாசி சபையர் லித்தோ பிரஸ்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான ஞானசேகரின் பொய்யான புகாரின் அடிப்படையில் புனையப்பட்ட வழக்கில் இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு மேலான இந்திய திரைப்பட வரலாற்றில், தயாரிப்பாளர், இயக்குனர் ஒருவர் படப்பிடிப்பு தளத்திலேயே கைது செய்யப்பட்ட வருத்தமான நிகழ்வு இதுவே முதல்முறையாகும்.

அதுவும், எங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்த சபையர் லித்தோ பிரஸ் உரிமையாளர்களில் ஒருவரால் இந்த அவமானச் செயல் தொடங்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கொண்ட இயக்குனர் சரண் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார். எல்லோருடனும் நட்பாக பழகக் கூடிய நல்ல நண்பர்.

அவர், நம்பிக்கையின் பேரில் வழங்கிய காசோலையில் தர வேண்டிய பாக்கித் தொகையைவிட பல மடங்கு கூடுதலான தொகையை நிரப்பி… தன் தவறான வழிக்கு சட்டத்தையும் உடந்தையாக்கி கொண்டு, ஞானசேகர் செய்த இந்த அத்து மீறிய செயல், தமிழக திரைப்படைத் துறையினர் நெஞ்சில் தீராத காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காசோலையில் உண்மையாக கொடுக்கப்பட வேண்டிய பாக்கித் தொகையைவிட ஞானசேகர் பல மடங்கு தொகையை உயர்த்தி நிரப்பிக் கொண்டது, தமிழ்த் திரைப்படத் துறையின் அஸ்திவாரமான தொழில் நம்பகத் தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது.

இந்த முறையற்ற செயலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த திரைப்படத் துறையிலேயே வளர்ந்து, அந்த திரைப்படத் துறையையே அழிக்க நினைக்கும் சிவகாசி சபையர் லித்தோ பிரஸ்சுடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொழில் உறவு கொள்ளும் முன், தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.

இந்த நிறுவனத்துக்கு வேறு எந்தத் தயாரிப்பாளராவது பணம் பாக்கி வைத்திருந்தாலும், உடனே அதனை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவிக்குமாறும் டி.சிவா கேட்டுக் கொண்டார்.

 இயக்குநர் சரண் தான் தயாரித்த படத்தின் விளம்பரப்  போஸ்டர்கள் அச்சடித்த வகையில் சில லட்சங்கள் சபையர் லித்தோ பிரஸுக்கு கொடுக்க வேண்டியிருந்ததாம். இதற்காக தொகை நிரப்பப்படாத செக் ஒன்றை அவர்களிடத்தில் முன்பேயே அளித்திருந்திருக்கிறார் இயக்குநர் சரண்.

அந்தத் தொகை நிரப்பப்படாத செக்கில்தான் சரண் கொடுக்க வேண்டிய தொகையைவிட மூன்று மடங்கு அதிக தொகையை நிரப்பி வங்கியில் போட்டிருக்கிறார் சபையர் லித்தோ பிரஸ்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான ஞானசேகர்.

வங்கியில் பணம் இல்லாததால் செக் ரிட்டனாக இதையே காரணமாகக் காட்டி சரண் மீது சிவகாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ஞானசேகர். இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர் சரண் கோர்ட்டில் ஆஜராகாததால், நீதிமன்றம் அவருக்குப் பிடியாணை அறிவித்தது..

பொதுவாக இது போன்ற பிடியாணை அறிவித்தாலே சம்பந்தப்பட்டவரின் வழக்கறிஞர்கள் கோர்ட்டில் ஆஜராகி நேரில் வந்து சரண்டராக வாய்ப்பு வழங்கும்படி கேட்பார்கள். நீதிபதிகளும் இதற்கு ஒத்துக் கொள்ள.. குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர் கோர்ட்டிலேயே ஆஜராகிவிடுவார். போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

ஆனால் இதில் சிவகாசி போலீஸார் ஒருவித ‘பாச’ உணர்ச்சியோடு ஞானசேகரனுக்கு உதவி செய்ய நினைத்து இயக்குநர் சரணை தேடிப் போய் பிடித்து வந்திருக்கிறார்கள். இதுதான் இப்போது நடந்திருக்கிறது..!

திரையுலகத்தினர் கண்டனம் தெரிவித்திருப்பது போலீஸாரின் கைது நடவடிக்கைகாக அல்ல.. திரையுலகத்தைச் சேர்ந்தவரான சிவகாசி சபையர் லித்தோ பிரஸ் உரிமையாளர் ஞானசேகர் தன்னிடம் நம்பிக்கையோடு கொடுத்த செக்கை துஷ்பிரயோகம் செய்தது.. மேலும் காவல்துறையில் மறைமுகமாக தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு இயக்குநரை சட்ட விரோதமாக கைது செய்யப்பட தூண்டியிருக்கிறார் என்பதைத்தான்..!

இந்த டிராமா, “என் செல்வாக்கை நீ பார்த்துட்டீல்ல.. இனி போயிட்டு வா…” என்று சினிமா வில்லன் சொல்லும் டயலாக்கைதான் ஞாபகப்படுத்துகிறது..!

பாவம் இயக்குநர் சரண்.. நண்பர்களை அளவுக்கதிமாக நம்பியதன் பலனை, ஆண்டுக்கணக்கில் அனுபவிக்கிறார்..!

Our Score