full screen background image

“திலீப் கிரிமினல் போல் நடத்தப்படுகிறார்…” – கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் ஆவேசம்..!

“திலீப் கிரிமினல் போல் நடத்தப்படுகிறார்…” – கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் ஆவேசம்..!

நடிகர் திலீப்புக்கு கிரிமினல் முத்திரை குத்த சிலர் முயல்வதாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் நடிகர் திலீப் தற்போது இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் இவரது ஜாமீன் மனு கடந்த 15 நாட்களாக கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பாக திலீப்புக்கு தெரிந்த செல்போன் ரிப்பேர் செய்யும் டெக்னீஷியன் சைலேஷ் என்பவர் சாலை விபத்தில் காலமானார்.

இந்த வழக்கிலும் திலீப்புக்கு தொடர்பு இருக்கலாம். அதனால் இந்த விபத்து வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று இறந்து போன சைலேஷின் குடும்பத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இப்படி சகல பக்கங்களில் இருந்தும் தாக்குதல்களை சமாளித்து வரும் நடிகர் திலீப்பிற்கு கை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்குமார். இவர் நடிகை மேனகாவின் கணவர். நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமாவார்.

இவர் சமீபத்திய திலீப்புக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடத்தப்பட்டும் தாக்குதல்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், “கேரளாவில் சிலர் திலீப்பிற்கு கிரிமினல் முத்திரை குத்த முயன்று வருகிறார்கள். நாளைக்கு திலீப்பின் காரை ரிப்பேர் செய்யும் மெக்கானிக் இறந்து போனால்கூட அதற்கும் திலீப்தான் காரணம் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.

இப்போது பாலச்சந்திர குமார் என்பவர் வழக்கின் இறுதிக் கட்டத்தில் வந்து தலையைக் கொடுத்திருக்கிறார். வழக்கு பற்றி வாயில் வந்ததையெல்லாம் சொல்லி வருகிறார். இதை பலரும் நம்பியும் வருகிறார்கள். நம்பாதவர்களெல்லாம் என்ன முட்டாள்களா.. இப்படியெல்லாம் பேசுவதால் போலீஸ் நாளை என்னையும் குறி வைக்கலாம்.

இதில் ஒருவரை அழிக்கும் செயலைவிடவும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை. தற்போது ஒட்டு மொத்த மலையாள சினிமாவுலகமும் மெளனமாக உள்ளது. திலீப்பின் ரசிகர்கள் அமைப்புகூட பேச முடியாத நிலையில் உள்ளது. காரணம் பயம்.

எல்லாரும் பயப்படுறாங்க.. எதுக்காகப் பயப்படணும்..? இது ஒரு சுதந்திர நாடு. இந்த நாட்டில் ஒரு குடும்பத்தில் தாயைத் தவிர மற்ற அனைவரையும் குறி வைத்துத் தாக்குகிறார்களே.. இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. அம்மா ஒருவரைத் தவிர மற்றவர்களெல்லாம் குற்றவாளிகள் என்று சொன்னால் எப்படி.. அந்தக் குடும்பம் மட்டுமே குறி வைக்கப்படுவது ஏன்..?

அவர் வீட்டு வழியாகச் சென்றவர்களில் யார் வேண்டுமானாலும் திலீப் மீது வழக்குத் தொடுக்கலாம் என்ற நிலைதான் உள்ளது. இப்போது புதிய, புதிய விஷயங்கள் இந்த வழக்கில் திணிக்கப்படுகின்றன.

வீட்டில் யார் என்ன பேசினாலும் அது முக்கியமாகிவிடுமா..? மதுக்கடைக்குப் போனால் பலரும், பலவிதமாகப் பேசுவதைக் கேட்கலாம். வேண்டுமென்றே யாரையாவது ஒரு வழக்கில் சிக்க வைப்பதைத் தவிர இதில் எதுவும் தெரியவில்லை.

இத்தகைய மன மற்றும் உணர்ச்சிரீதியான துஷ்பிரயோகங்களை ஒருவர் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? வேறு யாருக்காவது இப்படி நடந்திருக்கிறதா? ஏதாவது ஆதாரம் இருக்கிறதா.. சரி, அவர் குற்றவாளி என்றால், அவரை தண்டிக்கலாம். அதற்கு நீதிமன்றம் இருக்கு.  

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதிய, புதிய விஷயங்களைக் கொண்டு வருவதெல்லாம் சந்தேகத்தை எழுப்புகிறது.

விபத்தில் ஒருவர் உயிரிழக்கிறார். அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவியை பார்க்க முடியவில்லையா..? இதெல்லாம் யாரோ வேண்டுமென்றே செய்கிறார்கள்… இன்னும் இது போன்ற நிகழ்வுகள் வரட்டும்!

வழக்கு முடியும்வரை ஒவ்வொருவரும் இப்படித்தான் துன்பப்டுவார்கள்… திலீப்பை குற்றவாளி என்று முத்திரை குத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் இதை செய்து வருகின்றனர். அது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

இப்போது காவல் துறை செய்வது சரியான செயல் என்று நான் நினைக்கவில்லை. எப்படியிருந்தாலும் ஒரு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் சுரேஷ்.

Our Score