full screen background image

இயக்குநராக மாறிய தயாரிப்பாளர்

இயக்குநராக மாறிய தயாரிப்பாளர்

‘அத்தனைக்கும் ஆசைப்படு’ படம் மூலம் இயக்குநராக மாறியிருக்கிறார் ‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி..!

‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, தமிழ்ச் சினிமாவுலகத்திற்குள் கால் வைத்ததே இயக்குநராவதற்குத்தான். பாரதி கண்ணம்மா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸில் பணியாற்றினார். இதன் பின்புதான் கிடைத்த அனுபவத்தில் அமைதிப் படை 2 மூலம் தயாரிப்பாளராக மாறினார். 

கங்காருவுக்குப் பிறகு, அடுத்து அவர் தயாரிக்கும் படத்தை தானே இயக்குகிறார். இந்தப் படத்தின் நாயகனாக முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கிறார்.  நாயகியாக கங்காரு படத்தில் நடித்த ப்ரியங்காவே நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்ய, சீனிவாஸ் இசையமைக்கிறார்.

“திடீரென இயக்குநராக மாறியது ஏன்..?” என்று கேட்டதற்கு, “நான் சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். திடீரென ஆகவில்லை. கொஞ்சம் தாமதமாக என் ஆசை நிறைவேறுகிறது.

இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.  இந்தப் படத்தை பாலச்சந்திரன் படைப்பகம் என்ற எனது இன்னொரு நிறுவனத்தின் சார்பில் நானே தயாரித்து நானே இயக்குகிறேன். அடுத்த வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்…” என்றார்.

வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score