‘கங்காரு’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது படத்தின் ஷூட்டிங்கை லைட்மேன்கள் நிறுத்தியதாக புகார் கூறினார்.
அவர் பேசும்போது. “இந்தக் ‘கங்காரு’வை ரொம்ப நாள் நானே சுமந்திருந்தேன். நான்கு ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது. சினிமாவில் எல்லா சங்கங்களும் இயங்கி வந்தன. தயாரிப்பாளர் சங்கம் மட்டும்தான் இயங்காமல் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. ஒரு கசப்பான அனுபவம்.. இதைச் சொல்லியே ஆக வேண்டும்.
கொடைக்கானலில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் பேட்டா கொடுக்கவில்லை என்று படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார்கள். அதுவும் யார்..? லைட்மேன் சங்கம். அந்த சங்கத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் போன் செய்து நிறுத்துகிறார். அவர் யாரு..? பெப்ஸி தலைவர் அமீரா..? ஆனால் அவரோ ‘செல்வமணியா.. விக்ரமனா… யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள்’ என்று திமிராக மிரட்டுகிறார்.
எல்லா தொழிலிலும் முதலாளிதான் தொழிலாளிகளை கட்டுப்படுத்துகிறார்கள். சினிமாவில் மட்டும்தான் தொழிலாளிகள் முதல் போட்ட முதலாளிகளை கட்டுப்படுத்துகிறார்கள். இது என்ன கொடுமை..? இதற்கு விடிவு காலம் என்ன..? 150 பேர் வேலை பார்க்கும் ஒரு படப்பிடிப்பை ஒரு தனியாள் நிறுத்த முடியும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? ” என்று குமுறினார்.
இதேபோல் வேறு பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய நடிகர்களின் படங்களென்றால் முறைப்படி பெப்சிக்கு கடிதம் அனுப்பி பேட்டாவை வாங்கித் தரச் சொல்வார்கள்..! இளிச்சவாயனைத்தான் ஏறி மிதிப்பார்கள்..!