full screen background image

“தயாரிப்பாளர் சங்கப் பணத்தில் ஊழல்…” – விஷால் மீது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றச்சாட்டு..!

“தயாரிப்பாளர் சங்கப் பணத்தில் ஊழல்…” – விஷால் மீது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றச்சாட்டு..!

ஓம் சாய்ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரை சேர்ந்த சிவகுமார் இப்படத்தை தயாரித்துள்ளதுடன் இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ளார்.

ஏ.கே.ராம்ஜி இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘யானை மேல் குதிரை சவாரி’, ‘பெப்பே’, ‘ஒளிச்சித்திரம்’, ‘நரிவேட்டை’ போன்ற படங்களில் பணியாற்றிய கணேஷ்குமார் படத் தொகுப்பு செய்துள்ளார். வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ‘முருகா’ அசோக்,  இயக்குநர் கேபிள் சங்கர், தரரிப்பாளர் திருநாவுக்கரசு, இயக்குநர் தங்கசாமி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியபோது சிறிய பட தயாரிப்பளர்களின் ஒட்டு மொத்த ஆதங்கத்தை தனது பேச்சில் வெளிப்படுத்தினார். 

சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெங்களூரில் இருந்து வந்துள்ளார். எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், இவரையும் நிச்சயமாக வாழ வைக்கும். ஆனால் தற்போது இங்குள்ள சூழலில் அப்படி வருபவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் என்ன பாதுகாப்பு கொடுக்கிறது..? 

இப்போது சினிமாவில் தயாரிப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்தால் முதலில் ஒரு கோடி ரூபாயை இன்வெஸ்ட் பண்ண வேண்டும். அதிலிருந்து வாக்களர்களுக்கு காசு கொடுத்து சங்கத்தில் தலைவர், பொருளாளர் என ஏதோ ஒரு பொறுப்பிற்கும் வந்துவிட வேண்டும். அதற்கப்புறம் நீங்கள் தைரியமாக படம் எடுக்கலாம். இதுதான் இன்றைக்கு இருக்கும் யதார்த்த நிலைமை.

சமீபத்தில் விஷால், கதிரேசன், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தலைமையில்  தயாரிப்பாளர் சங்க பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. ஆனால் எங்களைப் போன்ற சில தயாரிப்பாளர்களை 12 மணிக்குத்தான் உள்ளே அனுமதித்தார்கள். நாங்கள் கேள்வி எதுவும் கேட்டுவிடுவோமோ என பயந்து ஒரு மணிக்கே தேசிய கீதம் பாடி கூட்டத்தை முடித்துவிட்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் கடந்த அரையாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை. போன வருடம் தாணு சார் பொறுப்பில் இருந்தபோது உண்டான கணக்குகளை காட்டிவிட்டு கிளம்பிவிட்டனர். அதைத்தான் தாணுவே காட்டிவிட்டாரே.. அப்புறம் நீங்கள் எதற்கு..?

விஷால் தலைமையிலான இப்போதைய நிர்வாகம் சங்க வைப்பு நிதியில் இருந்த பணத்தில் முறைகேடாக கையாடல் செய்து விட்டார்கள் என பகிரங்கமாகவே நான் குற்றம் சாட்டுகிறேன். அப்படி இல்லையென்றால் என் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டியதுதானே..? கேள்வி கேட்டால் ‘சங்கத்தை விட்டு நீக்குவோம்..’ என்று நோட்டீஸ் கொடுக்கிறார்கள்.

இப்போது விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலிலும் நிற்கிறார்கள். கேட்டால் கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்கப் போகிறோம் என்கிறார்கள். சின்ன படங்களுக்கு எங்கே கட்டப் பஞ்சாயத்து இருக்கிறது..? இவர்கள் ஒரு பத்து பேர் தங்களது படங்களை காப்பாற்றிக் கொள்ள தேர்தலில் நிற்கிறார்கள். இதனால் சிறிய தயாரிப்பாளர்களுக்கு எந்த பயனும் இல்லை.

கதை திருட்டு பிரச்சனை இன்னொரு பக்கம் வெடித்திருக்கிறது. இன்று கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் இல்லாமல் போய்விட்டது. எதற்காக கதையை திருடி எடுக்கிறீர்கள்..? பணத்தை கொடுத்து நல்ல கதையை வாங்கி படம் எடுக்கலாமே..?

‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்கிற படத்தை அப்படியே உல்டா செய்து ‘அரண்மனை’ படம் எடுத்தார்கள். நாங்கள் நீதிமன்றம் மூலமாக சென்று அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வாங்கி தந்தோம்.

ஆனால் இப்போது சங்கத்தின் செயலாளராக உள்ள கதிரேசன் ரஜினியின் ‘மூன்றுமுகம்’ படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் கதை, ‘மூன்று முகம்’ படத்தின் கதைதான் என்று கூறி, அதனால் தனக்கு நஷ்ட ஈடாக மூன்றரை கோடி ரூபாய் வேண்டும் என கேட்டு நோட்டீஸ் அனுபியுள்ளார் கதிரேசன்.

பழைய ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு வெறும் பத்து லட்சம். ஆனால் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் இவருக்கு மட்டும் மூன்றரை கோடி நஷ்ட ஈடாக வேண்டுமாம்..? 

அப்படி பார்த்தால் ‘மெர்சல்’ படம் ‘மூன்று முகம்’ மட்டுமல்ல. ‘குடியிருந்த கோவில்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ மாதிரி நான்கைந்து படங்களின் கதைகளை தழுவித்தான் எடுக்கப்பட்டுள்ளது.

அட்லீ இப்படியெல்லாம் ஒரு படத்தை மட்டுமே காப்பியடித்து படம் எடுக்கிறவர் அல்ல. மொத்தமா பத்து படங்களை காப்பயியடிச்சுத்தான் படம் பண்ணுவார். அப்படின்னா, ‘குடியிருந்த கோவில்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ படங்களின் தயாரிப்பாளர்களுக்கு யார் நஷ்ட ஈடு வாங்கி தருவாங்க..?

நீங்கள் சங்கத்தில் பொறுப்புக்கு வருவதற்காக செலவு செய்த பணத்தைத் திருப்பியெடுக்க இப்போது சங்கத்தை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். சித்தார்த்தை, கார்த்திக் சுப்புராஜை, அட்லீயை எல்லோரையும் மிரட்டுறீங்க. ‘ரெட் கார்டு போடுவோம்’ன்னு சொல்றீங்க. இதுக்குத்தான் நீங்க பொறுப்புக்கு வந்தீங்களா..?

அமேசன் பிரைம் என ஆன்லைனில் நம் படத்தை விற்பதற்கு வசதி இருக்கிறது. ஆனால் அது எத்தனை பேருக்கு தெரியும். சங்கத்தில் இருக்கிற ஒரு சிலர் மட்டும் அதை பயன்படுத்தி லாபம் அடைகதிறார்களே தவிர, சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு அந்த வழியை காட்ட மறுக்கிறார்கள்.

‘தமிழகம் முழுவதிலும் இருக்கும் தனியார் கேபிள் டிவிக்களில் இசை வெளியீட்டு விழாக்களின் வீடியோக்களை கொடுத்து பணம் வாங்கி தருகிறோம்’ன்னு சொன்னீங்க. அப்படி தனியார் கேபிள் டிவிக்களில் அந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கொடுத்தால் மற்ற முக்கியமான சேனல்கள் மூலமாக எப்படி அந்தப் படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்..? சிறிய படங்களை கொல்வதற்கான முயற்சிதான் இது. சரி.. அப்படி வரும் பணத்தையும் எங்களுக்கா கொடுக்கப் போறீங்க..? நீங்க வாங்கி வச்சு செலவு பண்ணிட்டு போயிருவீங்க.

பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘பைரசியை ஒழிக்கிறோம்’னு நினைச்சு அவர் கத்துக்கிட்ட வித்தையெல்லாம் காட்டுறேன்னு சொல்லி சங்கப் பணத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை எடுத்து செலவு பண்ணிவிட்டு, இப்போது கடைசியாக.. ‘மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பைரசியை ஒழிக்க முடியும்’ன்னு சொல்றார். இதைத்தான் நாங்க ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு வர்றோமே.. இதுக்கு எதுக்காக அவ்வளவு பணம் செலவு பண்ணனும்.?

அவர்கள் இப்படி ஒவ்வொரு மேடையிலும் புதிதாக ஏதாவது திட்டம் பற்றி சொல்லும்போது, மீடியாக்கள்தான் கொஞ்சம் கவனம் எடுத்து அவர்கள் இதற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள என கேள்வி எழுப்ப வேண்டும்.

நடிகர் சங்கத்தில் பிரச்சினை எழுந்தபோது எதிரணியினர் மீது இவர்கள் குற்றச்சாட்டுக்களை வரிசையாக அடுக்கினார்கள். அப்போது சரத்குமார் ‘இதையெல்லாம் மீடியாகிட்ட பேசாதீங்க. எங்கிட்ட நேரா வந்து பேசுங்க’ன்னு சொன்னார். அப்ப ‘நாங்க மீடியாகிட்டதான் பேசுவோம்’ன்னு சொன்ன இவங்க, இப்ப தயாரிப்பாளர் சங்கம் பற்றி மீடியாக்கள் கேள்வி கேட்கும்போது, ‘நாங்க அதை நேரடியா பேசிக்குவோம்’னு சொல்றாங்க.

தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் குறிப்பிட்ட அந்த பத்து நபர்கள் மட்டுமே இந்த சினிமா துறை அல்ல. மீதி 90 பேரும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்.

நாங்க நன்றாக இருந்தால்தான் அந்த பத்து பேருக்கும் பாதுகாப்பு. அவங்க பத்து பேருக்காக மீதி இருக்கிறவங்களை அழிக்க நினைச்சா ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே அழிந்துவிடும்.

எங்களை நோட்டீஸ் கொடுத்து மிரட்டி ஒடுக்கிறலாம்னு நினைச்சுடாதீங்க.. இதைவிட இன்னும் பத்து மடங்கு வீரியமா கிளம்பி வருவோம். நாங்கள் இந்த்த் துறைக்கு படம் எடுக்கத்தான் வந்திருக்கிறோமே தவிர, உங்களைப்போல கட்டப் பஞ்சாயத்து பண்ணி பணம் சம்பாதிக்க அல்ல. நீங்க மட்டுமே சம்பாதிக்கிறதுக்கும், உங்க படங்களோட பிரச்சனைக்கு கட்டப் பஞ்சாயத்து பண்றதுக்குன்னும் மட்டுமே தயாரிப்பாளர் சங்கத்தை பயன்படுத்தாதீர்கள்..” என மிகவும் காட்டமாக விமர்சித்தார் சுரேஷ் காமட்சி.

Our Score