full screen background image

“டிவி சீரியல்களுக்கு சென்சார் வேண்டும்…” – தயாரிப்பாளர் பட்டியல் சேகர் வேண்டுகோள்

“டிவி சீரியல்களுக்கு சென்சார் வேண்டும்…” – தயாரிப்பாளர் பட்டியல் சேகர் வேண்டுகோள்

சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘தகடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இப்போது தமிழ்த் திரையுலகில் படைப்பாளிகளுக்கு மரியாதை இல்லை. நடிகர்கள் தங்களது வெற்றிப் படத்தின் கதாசிரியர்களையும், இயக்குநர்களையும் மதிப்பதில்லை…” என்று குற்றம்சாட்டிப் பேசினார்.

Thagudu Audio Launch Stills (27)

இவருக்கு பின்பு பேச வந்த தயாரிப்பாளர் பட்டியல் சேகர், “செல்வமணி சொன்னதுபோல படைப்பாளிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அது தவறில்லை. ஆனால் அதைவிட மிக முக்கியமான விஷயம், இப்போ ஒண்ணு இருக்கு. அதுதான் சின்னப் பட்ஜெட் படங்கள் அதிகம் ஓடுவதில்லை. இந்தப் பிரச்சினையை யார் முதல்ல கவனிக்கிறது..?

இதுக்கு முதல் காரணம் தியேட்டருக்கு கூட்டம் வருவதில்லை. எல்லா லேடீஸும் வீட்ல சீரியல் பார்க்க உக்காந்துட்டாங்க. அவங்களை தியேட்டருக்கு கூட்டிட்டு வரணும். அதுக்கென்ன வழின்னு யோசியுங்க. தயாரிப்பாளர் சங்கத்துல எத்தனையோ முறை இது பத்தி சொல்லியாச்சு. அவங்க ஆக்சனே எடுக்க மாட்டேங்குறாங்க.

மொதல்ல இந்த சீரியல்களுக்கு சென்சார்ஷிப் கொண்டு வரணும். சினிமால ஏதாவது ஒரு ஆபாசமான வார்த்தை, சம்பவங்களை காட்டினா ‘கட் செய்’யுன்னு சொல்றாங்க. ஆனால் அதைவிட மோசமான சம்பவங்களையும், வசனத்தையும் டிவி சீரியல்ல வைச்சிருக்காங்க. அதைக் கேட்க ஆளே இல்லை. சென்சார் இல்லாமல் சீரியல்களில் தவறான கதையோட்டத்துடன்கூடிய காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் கண்டிப்பா டிவி சீரியல்களுக்கு சென்சார்ஷிப் வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையுலகமும் போராட வேண்டும்..” என்றார்.

அடுத்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது, “ஒரு படம் ஜெயித்தவுடனேயே அதன் இயக்குநர்கள் தயாரிப்பாளரை மறந்துவிடுகிறார்கள். அடுத்தடுத்த படங்களுக்கு கோடிகளில் சம்பளத்தை வாங்குகிறார்கள். மறுபடியும் முதல் பட தயாரிப்பாளர் படம் செய்யக் கேட்டால் முடியாது என்று மறுக்கிறார்கள். அதோடு அந்தத் தயாரிப்பாளரின் பெயரைக்கூட வெளியில் சொல்வதில்லை. மூடி மறைக்கிறார்கள். படைப்பாளிகள் என்னும் இயக்குநர்களே இப்படியிருந்தால் தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள்..?” என்று கேள்வியெழுப்பினார்.

டிவிக்களுக்கான சென்ஸார்ஷிப்புக்கு மத்திய அரசுதான் நடவடி்ககை எடுக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு அறிவாளிகளான அமைச்சர்களும், நிர்வாகமும் நமக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பதால் இது இப்போதைக்கு சாத்தியமில்லை.

தமிழ்த் திரையுலகில் நடிகர்கள், படைப்பாளிகள் இரு தரப்பினருக்கும் பரஸ்பர மரியாதை கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை சங்கங்கள்தான் முன் வந்து செய்ய வேண்டும்..!

Our Score