full screen background image

“ஜீ.வி.யை அநியாயமா சாகடிச்சாங்க…” – தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கொதிப்பான பேட்டி..!

“ஜீ.வி.யை அநியாயமா சாகடிச்சாங்க…” – தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கொதிப்பான பேட்டி..!

இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குநரான மணிரத்னத்தின் உடன் பிறந்த அண்ணனும், பிரபலமான தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஷ்வரன் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பலரிடமும் கடன் வாங்கிய காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவருடனான தனது நட்பு பற்றி தயாரிப்பாளர் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“ஜி.வி. தற்கொலை செய்து கொண்ட அந்த நாளில் கடைசியாத என் வீட்டுக்கு போன் செய்து என்னைத் தேடியிருக்கிறார். அடுத்த 15-வது நிமிடத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்…” என்று அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

இது குறித்து அவர் பேசும்போது, “தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் அற்புதமான மனிதர். சிம்பிள் மேன். ‘நாயகன்’, ‘தளபதி’ உட்பட பல புகழ் பெற்ற படங்களை தயாரித்தவர்.

அவர் ஒரு கட்டத்தில் இதே சினிமாவில் கடன் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டார். என்னைச் சந்திக்க என் அலுவலகத்திற்கு அடிக்கடி வருவார். நான் அப்போது அவரிடம், “ஸார்… நீங்க ஏன் என்னைப் பார்க்க வர்றீங்க.. நான் இங்க சாதாரண கொசு ஸார். போன் செஞ்சா நானே வந்திர மாட்டேனா..?” என்பேன்.

ஆனால், அவர் கேட்க மாட்டார். ஒரு நாளைக்கு மூன்று முறைகூட வருவார். “நாராயணன்.. நீங்க ஒருத்தர்தான் இங்க ஜென்டில்மேனா இருக்கீங்க. பணம் கடனா கொடுத்தாலும் வட்டி கேட்க மாட்டீங்க. சொன்னா, சொன்ன தேதில, சொன்ன நேரத்துல கடன் கொடுக்குறீங்க. டார்ச்சர் செய்றதில்லை. அதுனால உங்களை நான் பார்க்க வர்றதுல்ல தப்பில்லை..” என்பார்.

அவருக்கும் நான் கடன் கொடுத்திருக்கேன். திருப்பி வாங்கியிருக்கேன். எல்லாமே சில லட்சங்கள்தான். எனக்கும் அவர் ‘தமிழ்’ என்ற படத்தைக் கொடுத்து விநியோகம் செய்யும் வாய்ப்பையும் கொடுத்தார்.

அவருக்கு என்ன பண நெருக்கடியோ தெரியவில்லை.. திடீர்ன்னு ஒரு நாள் காணாமல் போயிட்டார். அவருடைய மனைவியும், அவருடைய மைத்துனரான ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷூம் என் வீடு தேடி வந்து அவரைப் பத்திக் கேட்டாங்க. நானும் அவரைத் தேடினேன். அவரையும் காணோம். அவரோட டிரைவரையும் காணோம்.

மூணாவது நாள் அவர் நேரா அவர் வீட்டுக்குக்கூட போகாமல் என் வீட்டுக்கு வந்தார். நான் அவர்கிட்ட.. “ஸார்.. இதெல்லாம் நல்லாயில்லை. உங்க வீட்ல எல்லாரும் பயந்துட்டாங்க.. நீங்களே இப்படி செய்யலாமா..?” என்று கேட்டேன். அதுக்கு அவர்.. “இல்ல நாராயணன்.. எனக்கு வாழவே பிடிக்கலை..” என்று விரக்தியாகச்  சொன்னார்.

“ஸார்.. கொஞ்சம் பொறுமையா இருங்க. எல்லாத்தையும் சரி பண்ணிரலாம். சின்ன தொகைன்னா.. 5 லட்சம், 10 லட்சம்ன்னா நான் உதவிருவேன். ஆனால் கோடிகள்ல தேவைன்னா என்ன ஸார் பண்றது.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. செய்யலாம்”ன்னு சொன்னேன்.

அவரோட வீட்டுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அவரோட மனைவி ஓடி வந்தாங்க. அவங்களை தனியா உக்கார வைச்சு விஷயத்தைச் சொல்லி.. “உங்க வீட்டுக்காரர் இப்படியெல்லாம் பேசுறார். அவரைப் பத்திரமா பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு”ன்னு சொல்லி அனுப்பி வைச்சேன்.

இதுக்கப்புறமும் அவர் பைனான்ஸ் பிரச்சினைல போராடிக்கிட்டிருந்தார். மே மாதத் துவக்கத்தில் நான் அவருக்கு போன் செய்து, “ஸார், நான் நாளைக்கு மலேசியாவுக்கு போறேன்.. ஒரு வாரத்துல வந்திருவேன்…” என்று அவரிடம் சொல்லிவிட்டுத்தான் மலேசியாவுக்குப் போனேன்.

2003, மே 3-ம் தேதி காலைல காலைல எட்டரை மணிக்கு ஜி.வி. என் வீட்டுக்குப் போன் செஞ்சிருக்காரு. என் வொய்ப்கிட்ட “எங்கம்மா நாராயணன்…?” என்று கேட்டிருக்கார். “அவர் மலேசியா போயிட்டாரே..?” என்று என் மனைவி சொன்னவுடன்.. “ஆமாமாம்.. சொன்னாப்புல” என்று சொல்லி போனை வைத்திருக்கிறார்.

இதுக்கடுத்து கால் மணி நேரம் கழித்து எட்டே முக்கால் மணிக்கு தன் வீட்டுல பெட்ரூம்ல பேன்ல தூக்குப் போட்டுத் தொங்கிட்டாரு.

என் வீட்ல இருந்து எனக்குப் போன் பண்ணி சொன்னாங்க. என்னால உடனேயே கிளம்பி வர முடியலை. அடுத்த நாள்தான் வந்தேன். அவர் வீட்டுக்குப் போய் அவர் மனைவியை பார்த்ததும் என்னால அழுகையை அடக்க முடியலை.. அப்படி அழுதேன்.

நான் அன்னைக்கு சென்னைல இருந்திருந்தால் நிச்சயமா அவரை சாக விட்டிருக்க மாட்டேன். நிச்சயமா நான் சென்னையில் இருந்து போனை எடுத்திருந்தால்.. அவர் என்னைத் தேடி வந்திருப்பார். இல்லை.. நான் அவரைப் பார்க்கப் போயிருப்பேன். ஏதோ ஒண்ணு நடந்திருக்கும். செத்திருக்கவே மாட்டார்.

ஒரு நல்ல மனுஷனை அநியாயமா சாகடிச்சிட்டாங்க. நான் முன்னாடியே ஒரு தடவை அவர்கிட்ட சொன்னேன்.. “ஸார். நீங்க இப்போ மணிரத்னத்தை வைச்சு ஒரு படம் பண்ணுங்க.. இல்லாட்டி ரஜினியை வைச்சு ஒரு படம் பண்ணுங்க.. பிரச்சினை எல்லாம் தீர்ந்திரும்…” என்றேன். “இல்லை.. இல்லை.. அதெல்லாம் வேண்டாம்…” என்று மறுத்துவிட்டார். “ஸார்.. அவங்ககிட்ட நான் கேக்குறேன் ஸார்…” என்றேன்.. “இல்லை.. இல்லை வேண்டாம்.. அவங்ககிட்ட கேக்காத”ன்னுட்டாரு..

அவர் இறந்தப்புறம் தயாரிப்பாளர் கவுன்சில்ல மீட்டிங் போட்டு அனுதாபம் தெரிவிக்கிறாங்க. அவர் உசிரோட இருந்தப்ப அவருக்கு ஹெல்ப் பண்ணிருந்தா அவரைக் காப்பாத்தியிருக்கலாம். அதெல்லாம் செய்யாமல் செத்த பின்னாடி அவரைப் பத்திப் பேசி என்ன பிரயோசனம்..?..” என்று வேதனையுடன் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

Our Score