முன்னொரு காலத்தில் மெகா பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரித்து வந்து, அதனாலேயே இப்போது படம் தயாரிக்க முடியாமல் ஓய்ந்திருக்கும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், முகநூலில் மிகவும் ஆக்டிவ்வாக உள்ளார்.
அவர் இன்றைக்கு தனது முகநூலில் ரஜினி பற்றி எழுதியிருக்கும் கடிதத்தில் ரஜினிக்கு தான் சொன்ன அட்வைஸை அவர் தவறாக புரிந்து கொண்டு தன்னிடம் பேசாமல் இருப்பதாகவும், ஆனால் இப்போது ‘லிங்கா’வில் அவர் நடிப்பது கண்டு பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஒரு சில பகுதிகள் இங்கே :
உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களில் நானும் ஒருவன். ரஜினி படம் வெளிவருகிறது என்றால் மக்களுக்கு அன்று தீபாவளி கொண்டாட்டம் என்று பொருள். அவர் தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். உலகத்தில் உள்ள கோடானுகோடி ரசிகப் பெருமக்கள் என்றும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதே ரஜினி ரசிகன் என்ற முறையிலும், அவரது நண்பன் என்ற முறையிலும் என்னுடைய ஆசை.
எனது இந்த ஆசையை சுமார் 15 வருடத்துக்கு முன்னதாகவே நான் தெரியப்படுத்தியிருந்தேன். ஆனால் ரஜினி அவர்கள், அதை தவறாக புரிந்த கொண்ட காரணத்தினாலோ என்னவோ எங்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது.
ரஜினி ரசிகனாக இருந்த நான் அவரது ஸ்டைல், டயலாக் பேசும்விதம், நடிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். அதன் வி்ளைவாக அவரது படங்களை வாங்கி கேரளாவில் விநியோகம் செய்து அங்கேயும் அவருக்கு பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை என்னால் உருவாக்க முடிந்தது. ரஜினியின் ‘படிக்காதவன்’, ‘தங்க மகன்’ என்று ஏராளமான படங்களை எனது நிறுவனம் வெளியிட்டது.
அந்தக் காலத்தில் எனக்கு ரஜினியுடனான நட்பு மிக ஆழமானதாக இருந்தது. ‘தங்கமகன்’ படப்பிடிப்பு வேளையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவோம். சினிமா மற்றும் தனிப்பட்ட விஷயங்களைக்கூட நாங்கள் பகிர்ந்து கொள்வோம். அவர் சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுக்கும் வேளையில் நான் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்து விட்டேன். என்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் அவர் வாழ்த்து தெரிவிப்பார். படம் பார்த்து பாராட்டவும் தவற மாட்டார்.
எனது ‘ரட்சகன்’ படத்தை பார்க்க வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு நேரம் இல்லை. பிறகு அவரது செளகரியத்தை அறிந்து அவருக்கு ஒரு தனிக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசித்து அன்று என்னைப் பாராட்டியது இன்றளவும் நான் வெகுமதியாகக் கருதுகிறேன்.
எங்களுக்கு இடையே உள்ள நட்பை அறிந்த பல சினிமா பிரபலங்களும் என்னிடம் ஏன் ரஜினியை வைத்து படம் தயாரிக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதுண்டு. ஆனால் அன்று அதற்கான சூழ்நிலை அமையவில்லை. ரஜினி இமாலய வெற்றிகள் பெற்று உலகமே வியக்கும் அளவுக்கு சூப்பர் ஸ்டார் பதவி பெற்று ரசிகர்களின் பேராதரவோடு திரையுலகில் பவனி வந்து கொண்டிருந்ததால் அவரை வைத்து ஒரு பிரம்மாண்ட படம் தயாரிக்க ஏற்ற கதையும் அமையவில்லை.
இந்த காலகட்டத்தில்தான் ரஜினி இனிமேல் நான் 3 வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கப் போவதாக ஒரு தீர்மானத்தை அறிவித்தார்.
அப்போது ஒரு தமிழ் வார இதழுக்கு நான் அளித்த பேட்டியில் ‘இது ஒரு தவறான முடிவு, அப்படி படம் நடிக்காமல் இருப்பது ரஜினியை நேசிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமும், மன வேதனையையும் அளிக்கும். ஆட்டோ டிரைவர்கள், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள், ஏழை, பணக்காரர்கள் என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் ஒரு ரஜினி படத்துக்காக ஏங்கிக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள் உண்டியலில் பணம் சேமித்து வைத்து ரஜினி படம் வெளியாகும் திருநாளைக் கொண்டாடக் காத்திருப்பவர்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு பாமரர் முதல் பண்டிதர், ஏழை முதல் பணக்காரர்வரை அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் குடியிருப்பவர் ரஜினி. அவரது படத்தை ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது மன வேதனையையும், ஏமாற்றத்தையும் அளிக்கும்’ என்று சொல்லியிருந்தேன். ‘ரஜினி வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்..’ என்று எண்ணத்தில்தான் அந்தப் பேட்டியில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
இதை அவர் வேறு விதமாகக் கருதி (குஞ்சுமோன் ஏன் இப்படிச் சொன்னார்) என்று பிரபல தயாரிப்பாளர் ஜி.வி.யிடம் வருத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். அப்போதிலிருந்து ரஜினியும் என்னிடம் பேசுவதில்லை.
என்னுடைய அந்தப் பேட்டியை தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் எங்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் என் மீது உள்ள அவரது வருத்தத்தையும் நான் அன்புடன் நேசித்துக் கொண்டிருந்தேன்.
நான் சொன்னதை அவர் தவறாக புரிந்து கொண்டாலும் அன்று நான் என்ன நினைத்து ‘ரஜினி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வேண்டும், இடைவெளி விடக்கூடாது’ என்று கருத்து தெரிவித்தேனோ அது இன்று நிஜமாகி இருக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ‘கோச்சடையானைத்’ தொடர்ந்து ரஜினி ‘லிங்கா’வில் நடிக்கிறார். ஒரு புத்துணர்ச்சியும், பழைய வேகமும் அவரிடம் தெரிகிறது.
‘லிங்கா’வைத் தொடர்ந்து எனது பிரம்மாண்ட படமான ‘ஜென்டில்மேன்’ படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகி இன்று பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் தம்பி ஷங்கரின் படத்தில் நடிக்க இருப்பதாகக் கேள்விப்பட்டு என் உள்ளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
மேலும், மேலும் அவர் இது மாதிரி நல்ல கதையம்சம் கொண்ட நல்ல படங்களை ரசிகர்களுக்கு அளித்து 100 வயதிலும் அவர் வெற்றி நாயகனாக நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எனது ஆசையும்…! பிரார்த்தனையும்..!
கடிதமும், எழுத்தும் பிரகாசமாகத்தான் இருக்கிறது. இதில் ஒரு சின்ன விஷயம்.. தயாரிப்பாளர் குஞ்சுமோன் மலையாளி. யாரோ ஒருவர் குஞ்சுமோனிடம் கருத்துக் கேட்டு இதனை எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது யாரோ ஒருவர் தட்டச்சு செய்து கொடுத்திருக்க வேண்டும்..! அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எனது நன்றிகள்..!