இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘ஸ்டோன் பெஞ்ச்’ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2014-ம் ஆண்டு துவக்கினார்.
இந்த தயாரிப்பு நிறுவனம் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, ‘பெஞ்ச் காஸ்ட்’, ‘பெஞ்ச் சப்ஸ்’ என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம், இதுவரையிலும் 150 படங்களுக்கும் மேலாக சப் டைட்டில் செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக, ‘பெஞ்ச் டாக்கீஸ்’ என்கின்ற பெயரில் 5 குறும் படத்தினையும், 2016-ல் ‘அவியல்’ என்கின்ற படத்தின் மூலம் 4 குரும் படத்தினையும் ஒன்றிணைத்து ஒரு முழு நீள படமாக வெளியிட்டு குறும்பட இயக்குநர்களுக்கு ஊக்கம் மற்றும் பாதை வகுத்து கொடுத்தது.
தற்பொழுது தனது சொந்த தயாரிப்பினை வெள்ளித் திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால் பதித்து இரண்டு திரைப்படத்தினையும், வெப் சீரீஸ் ஒன்றினையும் தயாரிக்கவுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இதற்கான துவக்க விழா மற்றும் அறிமுக விழா நேற்று மாலை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், விக்ரமன், தரணிதரன், எஸ்.ஜே.சூர்யா, தியாகராஜன், குமாரராஜா, கார்த்திக் சுப்புராஜ், பாரதிராஜா, பிரபுதேவா, விஜயகுமார், லிங்குசாமி, நடிகை பிரியா பவானி ஷங்கர், நடிகர்கள் பாபி சிம்ஹா, வைபவ், செளந்தரராஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் சார்பில் முதலாவதாக ‘மேயாத மான்’ எனும் படத்தினையும் அதற்கடுத்து ‘மெர்குரி’ எனும் திரைப்படத்தையும், ‘கள்ளசிரிப்பு’ எனும் வெப் சீரீயஸையும் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
‘மேயாத மானில்’ நடிகர் வைபவ்வும், நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநரான ரத்தினகுமார் இயக்க, புதுமுக ஒளிப்பதிவாளர் விது ஒளிபதிவு செய்து சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இரண்டாவதாக ‘மெர்குரி’ எனும் படத்தினை இயக்குநர் திரு. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். நடனப் புயல் பிரபுதேவா நடிக்கிறார். படத்தினை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தினை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.
டெண்ட் கொட்டா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் ‘கள்ள சிரிப்பு’ எனும் வெப் சீரீயஸில் ரோஹித் எழுதி நடித்துள்ளார் அவருடன் அம்ருத், சீனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். புதுமுக ஒளிப்பதிவாளர் தினேஷ் ஒளிபதிவு செய்துள்ளார். சதீஷ் இசையமைத்துள்ளார். கல்யாண் தயாரித்துள்ளார். இந்தத் தொடர் வெளியாகும் தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
இந்த புதிய புராஜெக்ட்களில் அமெரிக்காவை சேர்ந்த சோமசேகர் மற்றும் கல்ராமன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.