ஜெய், யாமி கவுதம், சந்தானம் நடித்துள்ள படம் ‘தமிழ் செலவனும் தனியார் அஞ்சலும்’. இந்தப் படத்தை பிரேம்சி இயக்கியுள்ளார். கவுதம் மேனன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
படத்தின் வேலைகள் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. சில பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படம் வெளிவர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கவுதம் வாசுதேவமேனனின் முன்னாள் நண்பரும், பங்குதாரருமான எல்ரெட் குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “நீதானே என் பொன்வசந்தம்’ படம் இயக்கி தயாரித்து தர கவுதம் வாசுதேவனுக்கு ரூ. 13 கோடியே 27 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் திட்டமிட்டமிட்டபடி படத்தை எடுக்காமல் உள்ளூரிலேயே படத்தை முடித்துவிட்டு எங்கள் பணம் 8 கோடியை வைத்து சென்னை அடையாறில் வீடு வாங்கியுள்ளார்.
படமும் வெளியாகி தோல்வியடைந்து நான் பெரும் நஷ்டத்தை அடைந்தேன். இதனால் எனக்கு வர வேண்டிய பணமான 8 கோடியை வட்டியுடன் சேர்த்து 10 கோடியே 67 லட்சத்தை தந்த பிறகே ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தை வெளியிட வேண்டும். எனவே படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம். “படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது. பண விவகாரம் குறித்து 4 வாரத்துக்குள் கவுதம் வாசுதேவ மேனன் எழுத்துபூர்வமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்..” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.