full screen background image

‘பாயும் புலி’ பட சர்ச்சை – விநியோகஸ்தர் சிங்காரவேலனுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போலீஸில் புகார்..!

‘பாயும் புலி’ பட சர்ச்சை – விநியோகஸ்தர் சிங்காரவேலனுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போலீஸில் புகார்..!

‘பாயும் புலி’ படத்திற்கு வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ‘லிங்கா’ படத்தின் நஷ்டஈட்டு பிரச்சினை தொடர்பாக தடை விதித்துள்ளனர்.

இதனால் கோபம் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்தினர் இந்தப் பிரச்சினைக்கு பின்னணியில் இருக்கும் விநியோகஸ்தர் சிங்காரவேலனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

‘பாயும் புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் ‘லிங்கா’ படத்தினை எம்.ஜி. அடிப்படையில் வாங்கி வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சிலருக்கு நஷ்ட ஈட்டுத் தொகை தரப்படாததால் அவர்கள் தாங்கள் சார்ந்த சங்கத்தில் முறையிட்டுள்ளனர்.

இதனால் வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தினரும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரும் இணைந்து ‘பாயும் புலி’ படத்திற்கு தடை விதித்துள்ளனர். 

இது தொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சிலில் நான்கு நாட்களாக நடந்த பஞ்சாயத்து முடிவுக்கு வராததால், இனி மோதிப் பார்த்துவிடுவது என்கிற முடிவுக்கு வந்துவிட்டது தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பு.

அந்தப் பக்கமாக விநியோகஸ்தர்களையும், திரையரங்க உரிமையாளர்களையும் ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர் சிங்காரவேலன்தான் தூண்டிவிடுகிறார் என்பதையறிந்த தயாரிப்பாளர் கவுன்சில் முக்கியஸ்தர்கள் சிங்காரவேலனுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், “லிங்கா படத்தை வாங்கி வெளியிட்டது தொடர்பாக தனக்கு தேவையான நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட விநியோகஸ்தர் சிங்காரவேலன், மேலும் பல லட்சம் ரூபாய் தனக்கு வேண்டும் என்று சொல்லி வரும் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள ‘பாயும் புலி’ படத்திற்கு எதிராக திரையுலகத்தில் பேசி வருகிறார். ஒரு சிலரை திசை திருப்பி இந்தப் படத்திற்கு எதிராகச் செயல்படும்படி தூண்டிவிட்டுள்ளார்.  ஆகையால், பொதுமக்களிடத்தில் இந்தப் படம் தொடர்பாக எதிர்மறை கருத்துக்களைப் பரப்பி வரும் விநியோஸ்தர் சிங்காரவேலன் மீது நடவடி்ககை எடுக்க வேண்டும்..” என்று சொல்லியிருக்கிறார்கள்.

இன்று மதியம் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த தயாரிப்பாளர் சங்க பிரமுகர்களான கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ஆர்.ராதாகிருஷ்ணன், பி.எல்.தேனப்பன், கதிரேசன், மற்றும் தயாரிப்பாளர்களான வேந்தர் மூவிஸ் எஸ்.மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், கே.எஸ்.சீனிவாசன், ஹெச்.முரளி,  சுப்பையா, ராஜசிம்மன், சுந்தர் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜை சந்தித்து இந்த மனுவை கொடுத்துள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Our Score