காதல் வாழவும் வைக்கும்.. பிரச்சினையையும் கொடுக்கும். இது அவரவர் தலைவிதியைப் பொறுத்தது.. சிம்புவைப் பொறுத்தமட்டில் காதல் என்பதே மினரல் வாட்டர் பாட்டில் மாதிரிதான்.. நேரத்துக்கு.. அந்தச் சமயத்துல எது கிடைக்குதோ.. அதுவே காதலாகும்..! அவர் காதல் பண்ணிட்டுப் போகட்டும். அதுக்காக தயாரிப்பாளரையும் சிக்கல்ல மாட்டிவிடணுமா..?
ஏற்கெனவே ‘வாலு’ படம் 3 வருஷமா தயாராகிகிட்டே இருக்கு.. இந்த லட்சணத்துல இவரோட காதலும் சேர்ந்து இப்போ படத்தை கிடப்புல போட்டிருக்கு..! நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் வளர்ந்து வந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்லதான் பார்த்ததும் லவ் என்ற ரீதியில் சிம்பு-ஹன்ஸிகா காதல் வளர்ந்தது.. ‘5 வருஷம் கழிச்சுத்தான் கல்யாணம்’ன்னுகூட சொன்னாங்க.. அப்புறம் யார் இந்தக் காதலுக்கு ஓமப் பொடி போட்டு என்ட் கார்டு போட்டாங்கன்னு தெரியலை.. புட்டுக்கிச்சு..!
இப்போ இதே படத்தோட பாடல் காட்சிகளைத் தவிர மற்ற டாக்கிங் போர்ஷனையெல்லாம் எடுத்து முடிச்சிட்டாங்களாம்.. பாடல் காட்சிக்கு ஹன்ஸிகா டேட் கொடுத்துட்டாங்கன்னா ஷூட் பண்ணிட்டு பூசணிக்காயை உடைக்கலாம்னு பார்த்தா ஹன்ஸிகாவோ அ்ம்மா தன்னோட டைரியை புரட்டவே மாட்டேங்குறாங்க.. ‘வாலு’ படத்துல நடிச்சதாவே ஞாபகம் இல்லை அம்மாவுக்கும், மகளும் என்று கண்ணைக் கசக்கிய நிலையில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியிருக்கிறார்.
‘பேசின சம்பளம் 70 லட்சம். அதுல 55 கொடுத்தாச்சு. மிச்சம் 15 இருக்கு. அதையும் இந்த பாடல் காட்சிகள் எடுத்து முடித்தவுடன் தந்துவிடுகிறேன்னு சொல்லிட்டேன். அப்படியும் அவங்க வர மாட்டேன்றாங்க’ என்று புகார் மனுவை தட்டிவிட்டிருக்கிறாராம்.
ஆனால் ‘உண்மையான காரணம் வேற’ என்கிறார்கள் கோடம்பாக்கத்து கிசுகிசு மன்னர்கள். ‘சென்ற மாதமே கால்ஷீட் தருகிறேன்’ என்று ஹன்ஸிகா சொல்லியிருந்தும் சிக்கல் நம்ம சிம்புவிடம் இருந்துதான் வந்ததாம்.
பாடல் காட்சியை உள்ளூரில் எடுப்பதுதான் முன்பிருந்த திட்டம். இப்போது சிம்பு போட்ட திட்டம்.. வெளிநாட்டில்தான் எடுக்கணும் என்பது. வெளிநாட்டில் எடுத்தால் ஹன்ஸிகாவுடன், அவரது அம்மா வர முடியாத சூழல் வரலாம் . ஹன்ஸிகா மட்டுமே தனியாக வர வேண்டும் என்பதற்காகவே சிம்பு வேண்டுமென்றே லொகேஷனை வெளிநாட்டிற்கு மாற்றிவிட்டதாக ஹன்ஸிகா நினைக்கிறாராம். அதனால்தான் சென்ற மாதம் கடைசி நேரத்தில் வர முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
அதற்குப் பின்பும் வெளிநாடுதான் என்பதில் தயாரிப்பாளரைவிட, சிம்பு உறுதியாக இருப்பதை பார்த்து யோசித்த ஹன்ஸிகா அண்ட் கோ வாலு படத்தின் நினைவுகளை தங்களது மைண்ட்டில் இருந்து ரப்பர் வைத்து அழித்துவிட்டார்களாம்.
‘உள்ளூர் என்றால் உடனே கால்ஷீட்.. வெளிநாடு என்றால் மே அல்லது ஜூன்.. அல்லது எங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதுதான்..’ என்கிறார் ஹன்ஸிகாவின் மேனேஜர் கம் அம்மா.
இப்போது தயாரிப்பாளர் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவியாய் தவிக்கிறார். இப்படி இருக்குற தயாரிப்பாளர்களையும் நட்டாத்துல அலைய விட்டா தமிழ்ச் சினிமா எப்படிங்கய்யா வளரும்..?