திருப்பூர் சினிமா தியேட்டர்களில் துவங்குகிறது ‘பிரைவேட் ஷோ’க்கள்..!

திருப்பூர் சினிமா தியேட்டர்களில் துவங்குகிறது ‘பிரைவேட் ஷோ’க்கள்..!

தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் தற்போது திறக்கப்பட்டிருந்தாலும் 400 திரையரங்குகள் திறந்த வேகத்தில் கூட்டம் இல்லாததால் மூடப்பட்டுவிட்டன. இப்போது திறந்திருக்கும் தியேட்டர்களிலும் இரவு நேரக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை, பகல், மாலை காட்சிகளிலும் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே பார்வையாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்குக் காரணமாக பெரிய பட்ஜெட் படங்கள் அல்லது ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகர்கள் நடித்தப் படங்கள் வெளியாகாதது.. மற்றும் கொரோனா பயம்.. இந்தக் காரணங்களினால்தான் தியேட்டர்கள் கூட்டம் இல்லாமல் காத்தாடுகின்றன.

இந்த நிலைமையில் திருப்பூரில் புதுமையான ஒரு திட்டத்தைத் துவக்கியிருக்கிறார்கள். அதுதான் ‘பிரைவேட் ஷோ’.

தமிழகத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்தின் சொந்தத் திரையரங்குகளில் முதன்முறையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், “குடும்பத்தில் ஒருவருக்கு பிறந்த நாள் என்றாலோ.. அல்லது திருமண நாள் என்றாலோ.. குடும்பத்தோடு, உற்றார், உறவினர்கள், நண்பர்களோடு சிறப்பாக அந்த நாளை கொண்டாட வேண்டும் என்றாலோ அவர்கள் எங்களது தியேட்டருக்கு வந்து அவர்களது பிறந்த நாளையோ, திருமண நாளையோ கொண்டாடலாம்.

அப்போது, அவர்கள் என்ன படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்தப் படம் அவர்களுக்கு ஸ்கிரீன் செய்யப்படும். எந்தப் படம் வேண்டும் என்பதை ஒரு வாரத்திற்கு முன்பேயே எங்களிடத்தில் சொல்லிவிட்டால், அந்தப் படத்தை விநியோகஸ்தர்களிடத்தில் கேட்டு வாங்கித் திரையிடுவோம்.

அந்தத் திரையிடலின்போது அதிகப்பட்சம் 25 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வேறு பொதுவான ரசிகர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள். பிரைவேட் ஷோவை புக் செய்தவர்கள் அழைத்து வரும் நபர்கள் மட்டுமே தியேட்டரின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான கட்டணமாக 4000 ப்ளஸ் ஜி.எஸ்.டி. என்று நிர்ணயித்திருக்கிறோம். ஒரு பணக்காரக் குடும்பத்திற்கு 4000 ரூபாய் என்பது பெரிய தொகை இல்லை என்பதால் இந்தத் திட்டத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்..” என்கிறார் தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம்.

Our Score