full screen background image

பிரின்ஸ் – சினிமா விமர்சனம்

பிரின்ஸ் – சினிமா விமர்சனம்

தெலுங்குலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டி.ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடெக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனம், வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷாப்கா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், சூரி, பிரேம்ஜி, ஆனந்த்ராஜ், பிராங்ஸ்டர் ராகுல், சதீஷ், பாரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – சுனீல் நரங், டி.சுரேஷ் பாபு, புஷ்குர் ராம், மோகன்ராவ், இணை தயாரிப்பு – அருண் விஸ்வா, இயக்கம் – கே.வி.அனுதீப், கதை – கே.வி.அனுதீப், மோகன் சாட்டோ, வசனம் – பிரபாகரன், ஆனந்த் நாராயணன், இசை – எஸ்.தமன், ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – நாராயண ரெட்டி, உடைகள் வடிவமைப்பு – கிருத்திகா சேகர், நடன இயக்கம் – ஷோபி பால்ராஜ், சதீஷ் கிருஷ்ணன், பாடல்கள் –  விவேக், அறிவு, சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன், புகைப்படங்கள் – ஜெ.ஹரிசங்கர், விளம்பர வடிவமைப்பு – கபிலன், ஒலி வடிவமைப்பு – ஜி.சுரேன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

“மனித நேயம் முக்கியமா.. தேசப் பற்று முக்கியமா..?” என்ற கேள்விக்கு இக்காலத்திய மக்கள் என்ன விடையளிப்பார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

கடலூர்-பாண்டிச்சேரி எல்லையில் தமிழ்நாட்டுக்குள் இருக்கும் கிராமம் தேவனாகோட்டை. இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. உலகநாதன்’ என்ற சத்யராஜ். எல்லா விஷயங்களையும் தெரிந்தது போல காட்டிக் கொண்டு, ஊரில் கெத்தாக பெரிய மனுஷனாய் வலம் வருகிறார்.

இவருடைய மகனான அன்பரசன் என்ற சிவகார்த்திகேயன் புதுச்சேரியில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் சமூகவியல் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக வருகிறார் இங்கிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெசிகா.

பார்த்தவுடன் காதல் என்ற சினிமா டெம்ப்ளேட் திரைக்கதையினால் சிவாவும் ஜெசிகாவை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். சில, பல பிரச்சினைகளுக்குப் பிறகு இந்தக் காதலுக்கு ஓகே சொல்கிறார் ஜெசிகா.

ஆனால், சத்யராஜ் இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார். அவருடைய தாத்தா, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்டவர் என்பதால் தன் மகன் சிவா பிரிட்டிஷ் நாட்டு மருமனாக ஆவதை கடுமையாக எதிர்க்கிறார் சத்யராஜ். இதேபோல் ஜெசிகாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.

இந்த இரு வீட்டார் எதிர்ப்புகளை சமாளித்து ஊரார், உற்றார், நண்பர்கள் ஆதரவுடன் சிவா, ஜெசிகாவை எப்படி திருமணம் செய்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

இந்த ‘ப்ரின்ஸ்’ படத்தின் ராஜா கண்டிப்பாக அன்பரசனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்தான். ஆயிரம் வாட்ஸ் எனர்ஜியுடன் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தனது முந்தைய படங்களான டாக்டர்’, ‘டான்’ ஆகிய படங்களில் டார்க் காமெடியையும், காலேஜ் காமெடியையும் வைத்து ஹிட் கொடுத்தவர், இதில் கொஞ்சம் கூடுதலாக பத்திரிகைகளில் வந்த நகைச்சுவை துணுக்குகள், டிவி நிகழ்ச்சிகளில் வரும் ஒன் லைன் நகைச்சுவைகளை வைத்து காமெடிகளை கொடுத்திருக்கிறார்.

காட்சிக்குக் காட்சி டைமிங்சென்ஸ் மிக்க ரிவீட் அடிப்பது போன்ற வசனங்கள், தன்னுடைய உடலை அசைத்தே அடுத்தடுத்த நடிப்பைக் காண்பிப்பது, நடிகர் விஜய்க்கு போட்டியாக நடனத்தில் சிறப்பு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அதிலும் பிம்பிளிக்கி பிளாப்பி’ பாடலில் வரும் சிங்கிள் ஷாட் டான்ஸ் அசத்தல். ரொமான்ஸ், பாசம், வீரம், காமெடி, நடிப்பு என்று படம் நெடுகிலும் தானே தாங்கிப் பிடித்திருக்கிறார் சிவா.

கிளைமாக்ஸ் காட்சியில் மனித நேயமா, தேசப் பற்றா என்ற முக்கியமான கேள்வியை கேட்டு ஊர்க்காரர்களை திசை திருப்பும் காட்சியிலும் மிகச் சிறப்பாக ஒன்றிப் போன உணர்வோடு நடித்திருக்கிறார் சிவா.

இவருடைய நண்பர்களாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், பாரத், சதீஷ் ஆகியோர் அவ்வப்போது வந்து முகத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் சிரிக்க வைக்கவில்லை. ஒரேயொரு காட்சியில் வரும் சூரியும் சிரிக்க வைக்கவில்லை என்பது கொடுமையானது. ஆனால் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆனந்த்ராஜ் அதகளமான காமெடியை வழங்கி கொஞ்சம் சமன் செய்திருக்கிறார். பிரேம்ஜியின் வில்லன் நடிப்பும் காமெடியானதால் அதுவும் சீரியஸாக இல்லை.

உலகநாதனாக நடித்திருக்கும் சத்யராஜ் தன்னுடைய பாணியில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அனைத்திலும் ஓவர் ஆக்ட்டிங்காகிவிட்டது. சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால் சீரியஸான காட்சிளில்கூட நகைச்சுவையாக பேசி பிரச்சினையை டைவர்ட் செய்வதால் நம்மால் ரசிக்க முடியவில்லை.

ஜெஸிகா கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் உக்ரைன் நாட்டு நடிகையான மரியா ரியாபோஷாப்கா. புரியாத, தெரியாத மொழி என்பதால் நடிப்பை வரவழைக்க முடியவில்லை. நடன அசைவுகளில் கொஞ்சம் தேர்ச்சி பெறுகிறார். டப்பிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படம் முழுவதும் வியாபித்திருக்கிறது. பாண்டிச்சேரியின் அழகையும், ஜெசிகாவின் அழகையும் ஒரு சேர படம் பிடித்திருக்கிறார். இருவரில் யார் அழகு என்று போட்டிதான் வைக்க வேண்டும். பாடல் காட்சிகளை ரம்மியமாக படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் தமனின் இசையில் ‘ஜெஸிகா’ பாடலும், பிம்பிளாக்கி பிளாப்பி’ பாடலும் ஹிட். காட்சிகளும் ரசிக்கும்படிதான் படமாக்கியுள்ளனர். கிருத்திகா சேகரின் ஆடை வடிவமைப்பு இளமையானவர்கள் நடித்த படத்தைப் பார்த்த திருப்தியைத் தருகிறது.

இப்படியொரு சின்ன காதல் கதைக்குள் போய் இந்திய சுதந்திரப் போராட்டம், பிரிட்டிஷ் படைகள், அரச குடும்பம், இந்திய-பிரிட்டன் நாடுகளிடையேயான உறவுகள் போன்ற சீரியஸ் மேட்டர்களை காமெடியாக பேச நினைத்ததன் விளைவுதான் படத்தின் ஒட்டு மொத்தத் தன்மையும் கெட்டுப் போனதற்குக் காரணம்.

இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சில இடங்களில் நகைச்சுவைகள் வலிந்து திணிக்கப்பட்டது போல் இருக்கின்றன. பல இடங்களில் சிவாவின் படத்தில் இப்படியொரு காமெடியா என்று கேட்கவும் வைக்கிறது.

பெரும்பாலான காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்குத்தான் வசனங்கள் உள்ளன. இடையிடையே பத்திரிகைகளில் வெளிவந்த ஜோக்குகளையும் பட்டி, டிங்கரிங் வேலை பார்த்து ஒட்டியிருக்கிறார்கள்.

“இவர்தான் எங்கப்பா… வயசுல என்னைவிட மூத்தவரு”, என்ற வசனத்தில் துவங்கி “என் ரத்தம் லைட்டு பிங்க்”, “இந்த மாதிரி நிறைய தடவை நடந்திருக்கு. ஆனா, இதுதான் ஃபர்ஸ்ட் டைம்”, “எலிசபத் டெய்லருன்னு குழந்தைக்கு பேரு வைக்கிறான். ஒரு டெய்லரோட புள்ள டெய்லராத்தான் ஆகணுமா?” என்று வரும் வசனங்கள் லேசான சிரிப்புக்களை ஆங்காங்கே வரவழைத்தாலும், ஒட்டு மொத்தமாய் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சத்தைத் தந்திருக்கிறது இந்தப் படம்.

இருந்தாலும் இந்த தீபாவளி கொண்டாட்ட மூடில் குடும்பத்தோடு தியேட்டருக்கு வருபவர்களை கொஞ்சமேனும் ரசிக்க வைத்து அனுப்புகிறான் இந்த பிரின்ஸ்’.

RATING : 3.5 / 5

 

Our Score