full screen background image

ப்ரீத்தி ஜிந்தாவின் புகார் – நெஸ் வாடியா கைதாவாரா..?

ப்ரீத்தி ஜிந்தாவின் புகார் – நெஸ் வாடியா கைதாவாரா..?

பிரபல நடிகையான ப்ரீத்தி ஜிந்தா தனது பிஸினஸ் பார்ட்னரும், இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்திருப்பது பலவித யூகங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

எப்போதும் பெண்களுக்கென்றால் முணுக்கென்று முந்திக் கொண்டு ஓடி வந்து கருத்து சொல்லி ஆதரவளிக்கும் பாலிவுட் வட்டாரமே இதனை நம்ப முடியாமல் அமைதியாக இருக்கிறது. காதலர்களுக்குள் ஏற்பட்ட மோதலாக இருக்குமோ என்றெண்ணி பல நெருங்கிய நண்பர்கள்கூட இருவருக்கும் ஆதரவளிக்காமல் இருக்கிறார்களாம்.

ப்ரீத்தி ஜிந்தா காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பது இதுதான்..

“எனக்கு நெஸ் வாடியாவை கடந்த 10 ஆண்டுகளாக தெரியும். அவருடன் எனக்கு உறவு இருந்தது. சில காலத்துக்கு முன்பாக எங்கள் உறவு முடிவுக்கு வந்தது. நாங்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கூட்டு உரிமையாளர்கள் என்ற போதிலும், தொழில் சம்மந்தமாக மட்டுமே பேசிக் கொள்வோம். சிறிது காலமாக நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. தொழில் தொடர்பாக பேசிய போது, ஓரிரு முறை எங்களுக்குள் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் தவறாகப் பேச முயற்சித்தார். மிகவும் இழிவுபடுத்தக்கூடிய மொழியில் திட்டினார். இதனால் என் சகாக்கள் முன்னிலையில் நான் வெட்கப்பட்டுப் போனேன்.

பெங்களூரில் ஐ.பி.எல். அணி தேர்வு ஏலத்தின்போது, அவர் பக்கத்தில் நான் அமர வேண்டும் என வற்புறுத்தினார். நான் மறுத்தபோது, முரட்டுத்தனமாகவும், கோபமாகவும் நடந்து கொண்டார். தரக்குறைவாக பேசினார். “நான் யார் என நினைத்துக் கொண்டாய்? நான் வாடியா குரூப் அதிபர், நீ ஒன்றுமே கிடையாது…” என்று கூறினார். அவரது நடத்தை எனக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்தது. இப்படி ஒரு நிகழ்வின்போது அவர் இந்த மாதிரியாக நடந்துகொள்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது ஐ.பி.எல். தலைமை நிர்வாகி தலையிட்டு, “இருவரும் அமைதியாக இருங்கள்…” என்று கூறினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்ய நேரும் என அவரை எச்சரித்தேன். அதன் பின்னர் அமைதியானார்.

மே மாதம் 30-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய அரையிறுதி போட்டியின்போது, “உன்னை ஒன்றுமில்லாமல் செய்து விடுவேன், உன்னை காணாமல் ஆக்கி விடுவேன். நீ ஒன்றும் கிடையாது. ஒரு நடிகைதானே, நான் சக்தி வாய்ந்த பிரபலம்…” என கூறி மிரட்டினார்.

நான் என் வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால், மிகவும் மென்மையாக நடந்து கொள்ள முயற்சித்தேன். ஆனால் வான்கடே மைதானத்தில் நடந்த சம்பவம், என்னை அடித்துப் போட்டு விட்டது. என் உயிர் மீது அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. அவர் தொடர்ந்து மோசமாக நடந்து கொண்டு மிரட்டியது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தையும், உடல் நோவையும் ஏற்படுத்தியது. எனக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டது. ஒரு பெண் என்ற நிலையில் வெட்கப்பட்டு போனேன்.” இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா அந்தப் புகாரில் கூறியுள்ளாராம்.

இந்த புகாரை பெற்ற மும்பை மரைன் டிரைவ் போலீசார், நெஸ் வாடியா மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவுகள் 354 (மானபங்கப்படுத்துதல்), 504 (பொது அமைதியை குலைக்கும் விதத்தில் அவமதித்தல்), 506 (குற்ற மிரட்டல்), 509 (அவமதிக்கும் நோக்கில் சைகை செய்தல், பேசுதல், அந்தரங்கத்தை ஆக்கிரமித்தல்) படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில், “பிரீத்தி ஜிந்தா புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இதில் தொடர்புடையவர்களின் வாக்குமூலத்தைப் பெறவும், சம்பவம் தொடர்பான ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறவும் முயற்சிக்கிறோம்” என்றார். இந்த சம்பவத்தில் ஐ.பி.எல். தலைமை நிர்வாகி சுந்தர்ராமன், மற்றும் வான்கடே மைதான ஊழியர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இப்போது புதிய திருப்பமாக இந்தப் பிரச்சினையில் மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நெஸ் வாடியாவை 24 மணி நேரத்தில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த ‘கெடு’ விதித்துள்ளது. இது தொடர்பாக மராட்டிய மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சித்ரா வாக் கருத்து தெரிவிக்கையில், “பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இது ஜாமீனில் விடுவிக்க முடியாத குற்றம். குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த ‘கெடு’ விதித்திருக்கிறோம். இது தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதாகவும், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் என்னிடம் வாக்குறுதி அனித்தனர்..” எனவும் கூறினார்.

நெஸ் வாடியாவுக்கும், ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் இடையில் நடக்கும் காதல், மோதல், பணப் பிரச்சினைதான் இதற்கெல்லாம் அடிப்படை காரணங்கள் என்று மீடியாக்கள் தொடர்ந்து எழுதி வருவதைத் தொடர்ந்து இதனை மறுத்து ப்ரீத்தி ஜிந்தா நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“இது எனக்கு ஒரு கடினமான நேரம். இந்த விவகாரத்தில் எனது அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்று ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். யாருக்கும் தீங்கு செய்வது எனது நோக்கம் அல்ல. என்னை நான் பாதுகாத்துக்கொள்வதுதான் எனது நோக்கம்.

பணித் தளத்தில் எனது மரியாதையை காத்துக்கொள்வதற்கான ஒரு போராட்டம் இது. எனது பக்கம் உண்மை இருக்கிறது. பணித் தளத்தில் நான் தவறாகப் பேசப்பட்டபோது, பொது இடத்தில் அவமதிப்புக்கு ஆளானபோது, யாரும் என் பக்கம் நிற்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

இது பலரது முன்னிலையில் நடைபெற்றதால், கடும் நடவடிக்கை எடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. வான்கடே மைதானத்தில் என்ன நடந்தது என்பதை நீர்த்துப் போகச் செய்கிற விதத்தில், என் நடத்தை மீது ஆளுக்கொரு கட்டுக் கதை திரிக்கிறார்கள். உண்மையை மட்டும் யாரும் சொல்லவில்லை.

ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உண்மையை சொல்வார்கள் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் போலீசார் தங்கள் பணியை நேர்மையாகவும், விரைவாகவும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

எந்தவொரு பெண்ணும் இப்படிப்பட்ட சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விரும்பமாட்டாள். இத்தனை வருடங்களில் அவரைப் பற்றி நான் ஊடகங்களில் ஏதும் சொன்னதில்லை. ஆனால் இப்போது எனக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது நெஸ் வாடியா கைதாவாரா என்பதுதான் இந்தப் பிரச்சினையின் அடுத்த கேள்வியாக இருக்கிறது..!

Our Score