தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான கோட்டா சீனிவாசராவ் நடிகர் பிரகாஷ்ராஜை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவுலகத்தின் நடிகர் சங்கமான ‘MAA’ அமைப்பின் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா ராஜசேகர், நடிகை ஹேமா, நடிகர் நரசிம்மராவ் ஆகியோர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
இந்தச் சங்கத் தேர்தல் குறித்து மூத்த நடிகரான கோட்டா சீனிவாசராவ் பேசும்போது நடிகர் பிரகாஷ்ராஜை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “தற்போதுள்ள கதாநாயக நடிகர்களின் காஸ்ட்யூம் மாறுகிறதே தவிர, அவர்களது மனப்பான்மை மட்டும் மாறவில்லை. அவர்கள் புதியவைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தங்களது அறிவினை வளர்த்துக் கொள்வதில்லை.
மைக்கைப் பிடித்தால் எப்படி பேசுவது என்பதுகூட சில கதாநாயகர்களுக்கு தெரியவில்லை. மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவும் தெரியவில்லை. பணம் வைத்திருக்கிற கதாநாயகர்களுக்கு நடிக்கவே தெரியவில்லை.
நடிகர் சங்கத்திற்கு இன்னமும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை. அதற்குள்ளாக பிரகாஷ்ராஜ் இத்தனை பெரிய நாடகம் போடுவது எதற்காக..?
சிரஞ்சீவி தனது ஆதரவை பிரகாஷ்ராஜூக்குக் கொடுத்திருக்கிறாரா.. இல்லையா.. என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாக பாபு இந்த விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.
எல்லாரும் அதிகப்படியாக இந்தச் சங்கத் தேர்தல் பற்றியே பேசுவது ஆச்சரியமாக உள்ளது. அதேபோல் என்னிடம் அதிகம் பேர் இது குறித்துக் கருத்து கேட்பதும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சங்கத்தின் தேர்தலைப் பற்றிப் பேசுவதற்கு இது தகுந்த நேரமல்ல.
ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் அணிக்கு ஆதரவு கொடுத்திருப்பதாகச் செய்திகளைப் பார்த்தவுடன் நானே ஜெயசுதாவுக்கு போன் செய்து அது பற்றி கேட்டேன்.
நடிகர் சாய்குமார் திடீரென்று பிரகாஷ்ராஜூக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் தீவிரமான பா.ஜ.க. எதிர்ப்பாளர். சாய்குமார் தீவிரமான பா.ஜ.க.வின் ஆதரவாளர். இப்படியிருக்கும்போது சாய்குமார் எதற்காக இந்த நேரத்தில் தனது கட்சியின் விசுவாசத்தையும் மீறி பிரகாஷ்ராஜூக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார்..?” என்று கேள்வியும் எழுப்பியிருக்கிறார் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.