பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் ஒரு விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாக பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் தங்கியிருந்து, ’ருத்ரமாதேவி’ என்ற தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். நேற்று முன்தினம் அனுஷ்காவுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்தப் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு, மாலை 4-30 மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு காரில் போய்க்கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.
’சிக்னலுக்காக’ ஓரிடத்தில் அவருடைய கார் நின்றிருந்தபோது பின்னால் வந்த அரசு பஸ், பிரகாஷ்ராஜ் கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில், காரின் பின்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. ஆனால் பிரகாஷ்ராஜும், அவருடைய உதவியாளர்களும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜுக்கு காலில் மட்டும் லேசான அடியாம்.
பஸ் மோதியதில் நொறுங்கிய பிரகாஷ்ராஜின் கார், போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டது. பிரகாஷ்ராஜ் வேறு ஒரு கார் மூலம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார். நேற்று கிருஷ்ண வம்சி டைரக்டு செய்யும் ’கோவிந்துரு அந்துருவாடு’ என்ற தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
இந்த விபத்தில் இருந்து தப்பியது குறித்தும், விபத்து நடந்த இடத்தில் இளைஞர்களின் செயலை மிகவும் கண்டித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.
“டிராபிக் சிக்னலில், ஒரு பஸ், எங்கள் வண்டி மீது மோதியதில், அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பினோம்.
அன்றைய நிகழ்வினால் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்தேன். வாழ்க்கை முடியும்வரை வாழ்வதே ஒரே வழி என்பது தெரிந்தது. நான் கண்களை மூட இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.
என்னை நலம் விசாரித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தச் சம்பவம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் நான் இப்போது நலமாக உள்ளேன்.
ஆனால் அன்றைய நிகழ்வின்போது என் கண்ணில்பட்ட ஒரு விஷயம், என்னை இதைவிட பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த விபத்தின்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து ஒரு குடும்பமே வெளியே தூக்கிவீசப்பட்டு விழுந்தது.
ஆனால், அப்போது அங்கு சுற்றியிருந்த இளைஞர்களின் செய்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, தங்கள் மொபைல்களில் விபத்துக்குள்ளானவர்களை படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது வெட்கக்கேடான செயல்.
உயிர் போகும் தருணத்திலிருந்து மீண்ட அதிர்ச்சியைவிட, இன்றைய இளைய சமுதாயனத்தினரின் மனிதத் தன்மையற்ற இந்தச் செயல் என்ன உலுக்கியுள்ளது. நாம் எங்கு செல்கிறோம், நமக்கு என்ன ஆனது…?” என்று கேட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.
‘நமக்கு வந்தால்தான் ரத்தம்.. மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி ஜூஸ்’ என்கிற மனப்பான்மையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஸார்.. அதற்கு இதுதான் மிகச் சிறந்த உதாரணம்..!