நடனப் புயல் பிரபுதேவா, வைகைப் புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை, இன்று கோலாகலமாக நடைபெற்றது..!
KRG நிறுவனத்தின் நான்காவது படைப்பாக உருவாகும் இப்படத்தினை தயாரிப்பாளர் கண்ணன் ரவி, மிகப் பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தில் ‘அனிமல்’, ‘ஏஸ்’ வெற்றிப் படங்களுக்குப் பிறகு, நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார். இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று துபாயில் படக் குழுவினர் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப் புயல் பிரபுதேவா, வைகைப் புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க சிரிக்க வைத்து, ரசிகர்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்த, இந்தக் கூட்டணியுடன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இந்த புதிய படத்தில் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது.
படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், மற்றும் படத்தின் அப்டேட் பற்றிய விபரங்கள். ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.