நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குநராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா, சாயா சிங், சென்ட்ராயன் உள்பட பல நடிகர்கள் இணைந்துள்ளனர்.
இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னையில் நடைபெற்றது.
படத்தில் நடித்த பிரசன்னா பேசுகையில், “ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையில் மட்டுமே இப்படத்தில் நடித்தேன். முதலில் இப்படத்தில் நடிக்க தயங்கிய நான், தனுஷிடம் கதை கேட்டது முதல், அவருடன் வேலை செய்த அணைத்து தருணங்களிலும் மிகப் பெரிய ஆச்சரியத்தை அடைந்தேன்.
மிகவும் திறமையான நடிகரான தனுஷ் தற்போது ஒரு இயக்குநராக உருவெடுத்து அதில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றியை கூறிக் கொள்கிறேன். மேலும் என் இத்தனை வருட திரையுலகில் இப்படத்தை என் தந்தைக்காக அர்ப்பணிக்கிறேன்…” என்று கூறினார்.
படத்தின் நாயகனான ராஜ்கிரண் பேசுகையில், “27 வருடங்களுக்கு முன் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இன்று மீண்டும் அவரது மகனான என் மருமகன் தனுஷ் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இத்தனை வருட காலமாக நீங்கள் பார்த்திருந்த ராஜ்கிரணை முற்றிலுமாக மாற்றி புதிய ராஜ்கிரணாக எனக்கே என்னை அடையாளம் காட்டியுள்ளார் தனுஷ். இப்படியொரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு தனுஷிற்கும், என்னுடன் இணைந்து பணியாற்றிய படக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று கூறினார்.
விழாவில் பேசிய இயக்குனர் தனுஷ், “உலகத்தில் நம் வாழ்க்கையில் அன்பு, நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இதில் பாஸிட்டிவ் விஷயங்கள் அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வதுதான் இந்த ‘ப. பாண்டி’ திரைப்படம்.
இயக்குநர் பாலு மகேந்திரா எப்போதும் கூறும் விஷயம், ‘ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்ளாத படம்தான் தோல்வியை சந்திக்கும்..’ என்பார்.
அந்த வகையில் இந்த ‘ப.பாண்டி’ திரைப்படம் தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக் கொண்டது. இப்படித்தான் ராஜ்கிரண் ஸாரும் எங்களுக்கு கிடைத்தார்.
ஷான் ரோல்டனின் இசையில்தான் இந்தப் படத்தின் ஆன்மாவும் இருக்கிறது. எனது எண்ணமும், அவரது எண்ணமும் ஒரே திசையில் பயணித்ததே அவருடன் கூட்டு சேர காரணமாக இருந்த்து. அதோடு அவரது இசையில் சப்தங்கள் இல்லை. ராகங்கள் மட்டுமே இருந்த்து. சப்தங்களை குறைத்து ராகத்தை இனிமையாக்கி கொடுப்பதுதான் அவரது ஸ்பெஷலாட்டி. இப்படத்தின் இசை வெற்றி பெற்றதற்கு அதுதான் முக்கியக் காரணம்….” என்று கூறினார்.