full screen background image

“இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா…?” – நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..!

“இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா…?” – நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..!

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்தபோதே நமக்கு சந்தேகமும் கூடவே எழுந்தது.. இந்தப் படத்துக்கு எப்படி சென்சார் கிடைக்குமென்று..? அதேதான் இன்றைக்கு நடந்திருக்கிறது.

தமிழரான கணேசன் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். இப்போதும் அங்கேதான் குடியிருக்கிறார். இதுவரையில் 5 கன்னட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 6 திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இவர் இயக்கிய 2 கன்னட திரைப்படங்கள் கர்நாடக அரசின் விருதுப் பட்டியிலில் இடம் பெற்றும் கடைசி நேரத்தில் இவர் தமிழர் என்பதால் நீக்கப்பட்டது.

இந்தக் கோபத்தில் ‘சரி.. இனிமேல் ஏதாவது தமிழ்ப் படமாவது செய்யலாம்’ என்று நினைத்துக் காத்திருந்திருக்கிறார். அந்த நேரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையும் நடந்தேற.. அதற்கடுத்த நாட்களிலும், மாதங்களிலும் ஈழத்து தமிழ்ப் பெண்ணான இசைப் பிரியாவின் படுகொலை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் வெளியாகி உலகத்தையே பதற வைத்தன.

isaipriya-2

அந்த ஒரு கணம் கணேசனும் மாறிப் போய் ‘இந்த உலகத்தில் மனித நேயமே இல்லையா?’ என்கிற நோக்கத்தில் சிந்திக்கத் துவங்கியிருக்கிறார். ‘இந்தப் படுகொலையை, உலகம் முழுவதிலும் கொண்டு போகப் போகிறேன். படமாக்கப் போகிறேன்’ என்று கிளம்பிவிட்டார். ஆந்திராவைச் சேர்ந்த அவருடைய நண்பரொருவர் தயாரிப்புக்கு முன் வர படத்தினைத் துவக்கிவிட்டார். ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்று பெயர் வைத்து ‘தாமினி’ என்கிற பெண்ணை இசைப்பிரியா கேரக்டரில் நடிக்கவும் வைத்துவிட்டார்.

இதற்கு முன்பாகவே கனடாவுக்கு சென்று அங்கேயிருக்கும் இசைப்பிரியாவின் அம்மா, அக்காவை சந்தித்து இசைப்பிரியாவின் பால்ய காலத்து வாழ்க்கை, அவருக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு, புலிகள் இயக்கத்தின் டிவியில் இசைப்பிரியா பணியாற்றியது எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்துதான் படத்தைத் துவக்கியிருக்கிறார்.

படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படியொரு சர்ச்சைக்குரிய படத்திற்கு இசையமைக்க பலரும் தயங்கும் நேரத்தில் இசைஞானி தானே முன் வந்து ‘நீங்க எடுத்திட்டு வாங்க. நான் இசையமைத்துத் தருகிறேன்’ என்று தைரியம் சொல்லி அதேபோல் அருமையாக இசையமைத்துக் கொடுத்துவிட்டார்.

porkkalathil oru poo movie posters

படம் சென்சாருக்கு சென்றபோதுதான் இந்திய அரசியலின் நிஜ முகம் இயக்குநர் கணேசனுக்கு தெரிந்திருக்கிறது. ‘நமது அண்டை நாடான இலங்கை அரசினைத் தூக்கி பல காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கு நாங்கள் அனுமதி தர முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

போராடிப் பார்த்தும் முடியாமல் போய் டெல்லியில் உள்ள மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய டிரிப்யூனலில் மனு செய்திருக்கிறார்கள். அங்கே படத்தை பார்த்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூன்று பேருமே ‘படம் அருமை. நிச்சயம் சர்டிபிகேட் தரப்படும்’ என்று உறுதியளித்திருக்கிறார்கள்.

ஆனால் அதன் பின்பு டெல்லிக்கு வந்த சென்னை மண்டல தணிக்கை அதிகாரி பழனிச்சாமி, சம்பந்தப்பட்ட டிரிப்யூனல் நீதிபதிகளை பார்த்து பேசியிருக்கிறார். இதன் பின்பு நீதிபதிகள் பல ஆட்சேபணைகளை இயக்குநரிடம் தெரிவித்திருக்கிறார்.

அதில் முக்கியமான கட், தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசினை கண்டித்து ஒருமித்தக் குரலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வீடியோ பதிவாம். சரியென்று இதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

அடுத்து கிளைமாக்ஸில் 13 நிமிடக் காட்சிகளை குறைக்கச் சொல்லியிருக்கிறார்கள். ‘படத்தின் உயிர்நாடியே இதுதான்’ என்று பலவாறு கெஞ்சி பார்த்தும் நீதிபதிகள் ‘முடியாது’ என்று சொல்லிவிட ‘அதையெல்லாம் சரி செய்தால் சர்டிபிகேட் கிடைக்குமா?’ என்று கேட்டிருக்கிறார் கணேசன். ‘நிச்சயம் தருகிறோம்’ என்று நீதிபதிகள் சொல்ல.. மறுபடியும் சென்னை வந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு நீதிபதிகள் சொன்னதுபோலவே காட்சிகளைக் குறைத்துக் கொண்டு திரும்பவும் டெல்லி சென்று போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

009

இந்த முறை படம் பார்த்துவிட்டு நீதிபதிகள் சவுண்டே குடுக்காமல் வேறொரு வாசல் வழியாக வெளியேறிவிட்டார்களாம். காத்திருந்த படக் குழுவினரை சந்தித்த ஒரு அதிகாரி.. ‘ஊருக்குச் செல்லுங்கள். ஆர்டர் தபாலில் வரும்’ என்று சொல்லியிருக்கிறார். 1 மாதம் கழித்து 3 நாட்களுக்கு முன்புதான் டிரிப்யூனலில் இருந்து ‘உங்களது போர்க்களத்தில் ஒரு பூ படத்திற்கு சென்சார் வழங்க முடியாது’ என்று உத்தரவு வந்ததாம்..!

மனிதர் கலங்கிப் போயிருந்தார். படத்தின் தயாரிப்பாளரும் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்த நிலையில் உடல் நலிவுற்ற ஹோட்டலிலேயே தங்கிவிட்டாராம். மிக விவரமாகவே பேசும் இயக்குநர் கணேசன், தமிழக இந்திய அரசியல் சூழலைப் பற்றி எதுவும் தெரியாதவராக இருக்கிறார்.

சென்னையில் சென்சார் செய்யும்போது நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு பின்பு சென்சார் போர்டு உறுப்பினரான எஸ்.வி.சேகரும் ஒரு உறுப்பினராக இந்தப் படத்தை பார்த்திருக்கிறார். ‘இந்தப் படத்திற்கு சர்டிபிகேட் தரக் கூடாது’ என்று கடுமையாக எதிர்த்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.

s.v.sekar-1

கூடவே ஒரு புத்திசாலித்தனமான கேள்வியொன்றையும் கேட்டிருக்கிறார் சேகர். ‘இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு ஏதாவது வீடியோ ஆதாரம் இருக்கிறதா?’ என்று..! நல்ல கேள்வி.. உலகத்திலேயே இப்படியொரு கேள்வியை யாருமே யோசித்திருக்கவே மாட்டார்கள்.

இதற்கு இயக்குநர் கணேசன் அதே மேடையில் கண் கலங்கிய நிலையில் மிகுந்த வருத்தத்துடன் தனது கண்டனத்தை பதிவு செய்துவிட்டு, “இப்படியெல்லாம் கேள்வி கேட்டா எப்படிங்க..? நம்ம தமிழ்ப் பொண்ணு.. நம்ம இனத்துப் பொண்ணு.. அந்தப் பொண்ணை இப்படி படுபயங்கரமா சித்ரவதை செஞ்சு கொன்றுக்காங்க. அதை நேர்மையா பதிவு செய்திருக்கிறேன். அதைப் பாராட்டாமல் இப்படி ‘இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா’ என்று கேள்வி கேட்டால் எப்படி..? என் பிள்ளை எனக்குத்தான் பிறந்தான்னு என்கிட்ட ஆதாரம் கேட்டா நான் என்ன ஸார் பதில் சொல்வேன்..? இல்ல வேற யாராச்சும் அவங்கவங்க பிள்ளைக்கு ஆதாரம் காட்ட முடியுமா..?” என்றார் பெரும் துயரத்துடன்.

என்ன செய்வது..? சிலருக்கு அறிவு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். அவர்களுக்கு இன்றைக்கு நேரம் நல்லாயிருக்கு. உச்சத்துல இருக்காங்க. அவங்களுக்கும் இது மாதிரி ஒண்ணு வரும். அந்த ஆண்டவனே அதைக் கொடுப்பான். அப்போ தெரியும் அந்தப் பெண் பட்ட வலி என்னவென்று..?

டிரிப்யூனலின் மறுப்பையடுத்து கோர்ட்டுக்குத்தான் இந்த வ்ழக்கினை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான முனைப்புகளில் ஈடுபடவுள்ளாராம் இயக்குநர். “கூடவே ஈழ விவகாரத்தில் ஆர்வமுள்ள தமிழர் அமைப்புகள், கட்சிகள், தலைவர்களிடத்தில் இந்தப் படத்தைப் போட்டுக் காட்டி அவர்களின் ஆதரவைப் பெற்று ஆலோசனையையும் பெற்று அதன்படி செயல்படுங்கள். நிச்சயம் நாம் நீதிமன்றத்தில் வெல்லலாம்…” என்று பத்திரிகையாளர்கள் பலரும் ஆலோசனை சொல்ல.. அதனை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார் கணேசன்.

எத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்டதுதான் ஈழப் போராட்டம். அதில் இதையும் ஒன்றாக நினைத்து தமிழ் உணர்வு உள்ள நெஞ்சங்கள் இந்தப் படத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

Our Score