குல்ஷன் குமார், டிரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர் இணைந்து இந்தப் ‘போர்‘ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் டி.ஜெ.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா, மெர்வின் ரொசாரியோ, ஜான் விஜய் மற்றும் எண்ணற்ற மாணவர், மாணவிகள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜிஷ்மி காளித், பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா, பாடல் இசை – சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி, பின்னணி இசை – மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்), படத் தொகுப்பு – பிரியன் பிரேம் குமார், எழுத்து, இயக்கம் – பிஜோய் நம்பியார்.
பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரியில் அர்ஜூன்தாஸ் படித்து வருகிறார். படிப்பைத் தவிர மற்றது அனைத்தையும் கல்லூரிக்குள் செய்து வருகிறார். குடி, சிகரெட், போதை மருந்து பழக்கத்துடன் அடிதடி,வெட்டுக் குத்து என்று அனைத்து ரவுடியிஸத்தையும் செய்து வருகிறார். கூடவே டி.ஜெ.பானுவை காதலித்தும் வருகிறார்.
அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக உள்ளே நுழைகிறார் காளிதாஸ். அர்ஜூன்தாஸூக்கும், காளிதாஸூக்கும் பள்ளியில் படிக்கும்போதே மோதல்கள் எழுந்துள்ளது. அந்த மோதலுக்கு இந்தக் கல்லூரிக் காலத்தில் பழி வாங்க நினைக்கிறார் காளிதாஸ். இருவருக்குள்ளும் மறைமுகப் போர் வெடிக்கிறது.
அதே நேரம் அந்தக் கல்லூரியின் ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினரும், அமைச்சராக இருப்பவரின் ஒரே மகளுமான அம்ருதாவும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். தான் கல்லூரி மாணவர் சங்கத்துக்குத் தலைவராக நினைக்கிறார் அம்ருதா.
அதற்கு எதிர்ப்பாக இருக்கும் அம்ருதாவின் முன்னாள் காதலியான எதிரணி வேட்பாளர் பெண்ணின் கையில் ஆசிட்டை ஊற்றி ஊரைவிட்டுத் துரத்தியடிக்கிறார்கள் அம்ருதாவின் அடியாட்கள்.
தேர்தல் நடந்து முடிந்தவுடன் அந்தப் பெண் நேரில் வந்து புகார் தெரிவிக்க.. அம்ருதாவின் தலைவி பதவியும் பறி போகிறது. கூடவே சஸ்பெண்டும் ஆகிறார். இந்த நேரத்தில் இடையில் புகும் காளிதாஸ் மாணவர் சங்கத்தின் புதிய தலைவராகிறார்.
இந்தத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அர்ஜூன் தாஸூடனான தனது கணக்கைத் தீர்த்துக் கொள்ள நினைக்கிறார் காளிதாஸ். விலகி, விலகிப் போனாலும் தன்னைத் தெருச் சண்டைக்குள் இழுத்துவிடும் காளிதாஸை போர்க்களத்தில் சந்திக்கத் தயாராகிறார் அர்ஜூன்தாஸ்.
இந்தப் போரில் ஜெயித்தவர் யார்..? அந்தக் கல்லூரி அமைதியானதா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
பிரபு என்ற கதாப்பாத்திரத்தில் ரவுடி மாணவராக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது ஆயுதமான கட்டைக் குரலை வைத்தும், இறுக்கமான முகத்தோற்றத்தை வைத்தும் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு பெரிதும் நியாயம் சேர்த்திருக்கிறார்.
கோபக்கார இளைஞராக அவர் திரையில் வரும்போதெல்லாம் அனல் பறக்கிறது. காதலியிடம் முறைப்பு காட்டும் இடங்களிலும், காளிதாஸிடம் அன்றைக்கு நடந்ததை புரிய வைத்துத் தோற்று ஏமாற்றமடையும் காட்சியிலும், கல்லூரி நிர்வாகிகளிடம் நியாயத்திற்காகப் போராடும் காட்சிகளிலும் அவர் ஒரு ஸ்டூடண்ட் என்பதை மறந்து ஹீரோவாகவே தெரிகிறார். இதுதான் படத்தின் பலவீனமும்கூட!
இன்னோரு மாணவராக நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன்தாஸ் முரட்டுத்தனமாக செய்வதை சிரித்துக் கொண்டே செய்யும் கேரக்டர். அர்ஜூன்தாஸ் மீதான தனது குரோதத்தை தீவிரமாக வெளிக்காட்ட நினைக்கும் காளிதாஸ் அதற்காக தனது காதலைக்கூட தூக்கிப் போடவும் தயங்காதவராக இருக்கிறார். அந்த முட்டாள்தனமான முரட்டுத்தனத்துடன் கூடிய குருட்டுத்தனமான விரோதத்தை சிரித்த முகத்தில் காட்டும் காளிதாஸின் நடிப்பும் ஏற்புடையதே..!
நாயகிகளில் மூவருமே ஒரு மாதிரியான முகத் தோற்றத்தில் இருப்பதால் சில நேரங்களில் இவர் யார், அவர் யார் என்ற குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. டி.ஜெ.பானுவும், சஞ்சனா நடராஜனும் இரண்டு மூடர்களிடையே மாட்டிக் கொண்டு முழி பிதுங்கி, நல்லது செய்ய நினைக்கும் நாயகிகளாக நடித்துள்ளனர். இடையிடையே கதையை நகர்த்தும்விதமாக அனைத்துப் பகுதிகளுக்கும் திரைக்கதையைக் கொண்டு போகும் பணியை சஞ்சனா நடராஜன் ஏற்று நடித்துள்ளார். சிறப்பு..!
வில்லியாக நடித்திருக்கும் அம்ருதா, அவரது அப்பா, இவர்களது அடியாள், மற்றும் ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். படத்தில் ஏனைய காட்சிகளில் நடித்திருக்கும் துணை நடிகர், நடிகைகள், மாணவர், மாணவிகள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜிஷ்மி காளித், பிரஸ்லி ஆஸ்கார் டிசோசாவை வெகுவாகப் பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் கூட்டம், கூட்டமாக மாணவர், மாணவிகள் தெரிகிறார்கள். இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்துத் தொடர்ந்து படமெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் வாகனப் பேரணி மற்றும் ஹாஸ்டல், ஓப்பன் தியேட்டர்களில் நடக்கும் அடிதடி, சண்டை காட்சிகளை படமாக்கியவிதமெல்லாம் நம்மை பெரிதும் ஆச்சரியப்படுத்துகிறது.
சண்டை இயக்குநர்கள் பிரம்மாண்டத்தை மட்டுமே மனதில் வைத்து உழைத்திருக்கிறார்கள் போலும். ஒவ்வொரு சண்டையில் 20 பேர், 30 பேர் மோதுகிறார்கள். அந்தந்த சூழலுக்கேற்றவாறு இந்த சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கும் சண்டை பயிற்சி இயக்குநர்களுக்கு நமது பாராட்டுக்கள்.
சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் எதுவும் காதுகளுக்குப் புரியவில்லை என்றாலும் கேட்கும்படி இருக்கிறது. ஆனால், பின்னணி இசையும் ஒரே இரைச்சலைக் கொடுத்துக் காதுகளைக் கிழித்தெடுத்துள்ளது.
எப்படியும் நான்கு மணி நேரம் இருக்கும் புட்டேஜை கொடுத்து எடிட் செய்ய சொல்லியிருக்கிறார் இயக்குநர். படத் தொகுப்பாளர் பிரியங் பிரேம் குமார், இந்தக் காட்சிகளை தொகுத்து முழு படமாக ஆக்குவதற்கு என்ன பாடுபட்டிருப்பார் என்பதை நினைத்தால் நமக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது.
மொத்தகமாக பார்க்கப் போனால், இயக்குநர் எதையோ சொல்ல நினைத்து, எதை எதையோ காட்சிகளாக எடுத்துக் கொடுத்திருப்பதை ஒரு முழுமையான திரைப்படமாக கொடுத்தமைக்காக படத் தொகுப்பாளரை நாம் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
மணிரத்னத்தின் சிஷ்ய கோடியான பிஜாய் நம்பியார் ‘அக்னி நட்சத்திரம்’, ‘ஆயுத எழுத்து’ பாணியில் இந்தப் படத்தை எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் அதற்காக தான் நினைத்ததையெல்லாம் கதையாக, திரைக்கதையாக எழுதி, அதை அப்படியே ராவாக படமாக்கியிருக்கிறார்.
மாணவர்களுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கமான கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை அமைக்காமல் ரவுடித்தனம், குடியில் திளைக்கும் இரு பாலர்கள். காதல் என்ற பெயரில் செக்ஸ் உறவு கொள்வது… காதலனுக்காக போதை மருந்தை வாங்கித் தருவது.. உட்கொள்வது என்று சகல அயோக்கியத்தனங்களையும் செய்யும் மாணவர்களாகக் காட்டியிருப்பது எந்த வகையில் நியாயம் இயக்குநரே..!?
கல்லூரியில் நடக்கும் ராகிங், மாணவர் சங்கத் தேர்தல்கள், காதல் லீலைகள், காதலால் ஏற்படும் மோதல்கள்.. உள்ளிட்ட பல விஷயங்களை எந்தளவுக்கு மிகைப்படுத்தி காட்ட முடியுமோ அந்தளவுக்குக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் மோதலை, ஒட்டு மொத்த கல்லூரியின் பிரச்சினையாக மாற்றி இரண்டு ரவுடி மாணவர்களும் சண்டையிடுவதை கல்லூரி வாழ்வியல் கதை என்ற பெயரில் படமாய் எடுத்து, படம் பார்க்கும் எல்லா மாணவர்களின் மனதையும் டைவர்ட் செய்யும்விதமாய் திரைக்கதை அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
படத்தில் இடம் பெற்றுள்ள எந்தவொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், படம் எதை நோக்கி செல்கிறது என்பதே தெரியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலவீனம்.
காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டுவதற்கும், இறுக்கமான இயக்கத்தை வெளிப்படுத்தவும் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் பிஜாய் நம்பியார், அதே முக்கியத்துவத்தை திரைக்கதை அமைப்பதிலும், கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் காட்டியிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.
RATING : 2.5 / 5