‘ஈரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘நண்பன்’ ஆகிய படங்களுக்கு மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து கவனத்தை ஈர்த்தவர் மனோஜ் பரமஹம்சா. இவர் முதன்முதலாக ‘பூவரசம் பீப்பீ’ என்ற படத்தை தயாரித்து ஒளிப்பதிவும் செய்கிறார்.
இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்த பெண் இயக்குநரான ஹலிதா ஷமீம், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியிருப்பதுடன், படத்தொகுப்பும் இவரே.
டிஜிட்டல் சினிமாவின் நவீன தொழில் நுட்பங்களுடன் தயாராகியுள்ளது ‘பூவரசம் பீப்பீ’ படம். இதில் கவுரவ் காளை, பிரவீன் கிஷோர், கபில்தேவ், வர்ஷினி, அகல்யா ஆகிய குழந்தைகளுடன் சமுத்திரக்கனி, காளி வெங்கட், சாய்ராம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ‘பட்டாபட்டி’, ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த அருள்தேவ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற ஆஜித் மற்றும் சில குழந்தைகள் கோ கோ கோழிகளாய்.. உருட்டி மிரட்டி விரட்டி விட்டது போதுங்களா..” என்ற ஜாலியான ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். தயாரிப்பு: மனோஜ் பரமஹம்சா, டாக்டர் சுஜாதா செந்தில்நாதன்.
பூவரசம் பீப்பீ’ படத்தை பற்றி இயக்குநர் ஹலிதா ஷமீம் சொல்வது இதுதான் :
“அறியாமையிலிருந்து அறிந்து கொள்ளும் பருவம்தான் பால்யம். அந்தப் பருவத்தின் நேர்மையான பதிவாகவே இப்படம் இருக்கும். முதன்முதலில் நாம் செய்யும் எதுவும் நம் நினைவைவிட்டுப் போகாது. அது போன்ற சில நினைவுகளை இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நான் காணவிருக்கிறோம்..
பால்ய காலத்தில், கோடை விடுமுறையில் பீப்பீ ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், காற்றாடி விடுவதும், நீச்சல் அடிப்பதுமாக இருக்கும் பிள்ளைகள், ஒரு வன்முறையைப் பார்க்க நேரிடுகிறது. அதனால் அவர்களுக்குள் ஏற்படும் மன உளைச்சல், அதை எவ்வாறு அவர்கள் கையாள்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. நகர்ப்புறங்களில் விடுமுறையை கழிக்கும் பிள்ளைகளுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும். ” என்கிறார் இயக்குநர்.
படத்தின் முதல் பிரதியைப் பார்த்த தமிழ்ச் சினிமாவின் பெரியவர்கள் அனைவரும் படம் மிக பிரமாதம் என்று பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள். கடந்த மாதமே இந்தப் படத்தை கெளதம்மேனன் வாங்கிவிட்டார் என்றும், அவர்தான் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. விரைவில் வரும் என்று நம்புகிறோம்..!