தமிழ் சினிமாவில் கிராமிய வாழ்வியலையும், மண்ணின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது ‘பூ காய் கனி’.
இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில், பழையனூர் சந்தனம் பட கம்பெனி சார்பில் ராஜேஸ்வரி வெற்றி வீரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள இலுப்பைகுளம் சொக்காயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.
திரைப்படத்தின் தொடக்க விழாவில் படக் குழுவினர், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு படத்திற்கு வெற்றியை வேண்டி வழிபட்டனர்.
பாரம்பரிய மரபுகளை மதித்து, ஆன்மிகச் சூழலில் தொடங்கிய இந்த விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தப் படத்தில் இளம் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கொட்டாச்சி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற மானஸ்வி கதாநாயகியாக நடிக்கிறார். இருவரின் புதிய திரை ஜோடி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல முக்கிய நடிகர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் தரம் குறித்து திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கிராமிய பின்னணியில் அமைந்த கதை, குடும்ப உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் வாழ்வியல் கூறுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக படக் குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, நாடக மேடைகளில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த பபூன் காமிக் மருதமணி, இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்.
தனது மேடை அனுபவத்தை வெள்ளித்திரையில் வெளிப்படுத்தவுள்ள அவரது வருகை ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தின் இயற்கை அழகும், பாரம்பரிய கலாச்சாரமும், மண்ணின் மணமும் கலந்த உணர்வுப்பூர்வமான திரைப்படமாக ‘பூ காய் கனி’ உருவாகி வருவதால், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
பூஜையுடன் தொடங்கிய இந்தப் பயணம், வெற்றிகரமான திரைப்படமாக நிறைவடையும் என்ற நம்பிக்கையை படக் குழுவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.









