full screen background image

‘பொன்னி வள வீரச் சரித்திரம்’ தொடர் நிறுத்தம் – நடிகர் சிவக்குமார் அறிக்கை..!

‘பொன்னி வள வீரச் சரித்திரம்’ தொடர் நிறுத்தம் – நடிகர் சிவக்குமார் அறிக்கை..!

தந்தி தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் மாலை 5.30 மணிக்கு ‘பொன்னி வள வீரச் சரித்திரம்’ என்ற பெயரில் ஒரு வரலாற்றுத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடருக்கு நடிகர் சிவக்குமார் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இது கோவை மண்ணைச் சேர்ந்த கொங்கு வேளாள கவுண்டர்களின் வரலாற்றின் அடிப்படையில் உருவாகும் தொடராகும்.

ஆனால் இத்தொடரின் சில காட்சிகள் கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக்க் கூறி அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென்று ஈரோட்டில் போராட்டம் நடத்தினார்கள். நடிகர் சிவக்குமாரின் உருவ பொம்மையை அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக வைத்து எரித்தார்கள்.

நிலைமை இந்த அளவுக்கு சீரியஸாகப் போகும் என்று எதிர்பார்க்காத சிவக்குமார் நேற்றைய முன்தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில், “கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் கரூர் பகுதிகளில் நடந்த வரலாற்று புதினம் இது. உடுக்கை பாடலாகவும், நாட்டுப்புறப் பாடல் வழியாகவும் பிரபலம் ஆனது.

கனடாவைச் சார்ந்த பிருந்தா பெக் என்கிற பெண்மணி கரூர் பகுதிகளில் 1962 முதல் 1964 வரை தங்கியிருந்து தன்னுடைய சொந்தப் பணத்தை எல்லாம் இழந்து ஆராய்ச்சி செய்து 40 மணி நேர ஆடியோவாக பதிவு செய்திருக்கிறார். இப்படி நல்ல வரலாற்று விஷயங்களை சேகரித்து கொடுத்ததற்காக தமிழ்நாட்டில் உள்ள நாம் எல்லோரும் பிருந்தா பெக்கிற்கு நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அதேபோல ‘பொன்னழகர் என்னும் கல்லழகர் அம்மானை’, ‘வரகுண்ணா பெருங்குடி கூட்டம் பொன்னர் சங்கர் வரலாற்று நூல்’, ‘அண்ணன்மார் சுவாமி கதை’ ஆகிய வரலாற்று நூல்களை எல்லாம் ஆதாரமாக வைத்து 1988- ம் ஆண்டு 503 பக்கத்தில் வெளிவந்த ‘பொன்னர் சங்கர்’ வரலாற்று நூலை கருணாநிதி எழுதியிருக்கிறார். இதற்காக கொங்கு நாட்டு மக்களும் அவருக்கு நன்றி கூறினார்கள். சமீபத்தில் இதை ‘பொன்னர் சங்கர்’ என்ற திரைப்படமாகவும் எடுத்தார்.

இவற்றை எல்லாம் ஆதாரமாகக் கொண்டு வரலாற்றுப் பதிவாக வந்ததைத்தான் தற்போது அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில நிமிட குரல் பதிவாகக் கொடுத்திருக்கிறேன்.

தற்போது இந்த விஷயத்தை சாதிப் பிரச்சினையாக எடுத்துக் கொள்வது வெளிநாட்டிலிருந்து வந்திருந்து இங்கே தங்கி ஒரு வரலாற்று சிறப்புமிக்க விஷயத்தைப் பதிவு செய்த அந்த பெண்மணியைக் கொச்சைப்படுத்துவதாகவே தெரிகிறது. சாதி உணர்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் நான். என் குழந்தைகளுக்கே வெவ்வேறு சாதிகளில் மணம் முடித்திருக்கிறேன். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளைக் கடைபிடிப்பவன்…” என்று கூறியிருந்தார்.

இருப்பினும் அந்தந்த சாதிச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதனை ஏற்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த்தால் எதுக்கு இந்த்த் தலைவிதி என்று நினைத்து அந்த்த் தொடருக்கே மங்களம் பாடும் முடிவுக்கு வந்துவிட்டார் நடிகர் சிவக்குமார்.

இது குறித்து அவர் இன்றைக்கு வெளியிட்ட அறிக்கை இது..  

“இந்தத் தொடரில் சில மணித் துளிகள் மட்டுமே பின்னணி குரல் கொடுத்துள்ள நான், எந்த ஒரு இனத்தின் மனதையும் புண்படுத்தும்வகையில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பது ‘பொன்னி வள வீரச் சரித்திரம்’ தொடரைப் பார்த்தவர்களுக்கு புரியும்.

எப்படியிருப்பினும், நான் பிறந்த கொங்கு மண்ணில் வாழும் சகோதர இனத்தவர்களுக்கு சிறிது வருத்தத்தை அளித்திருப்பதை உணர்கிறேன்.. அந்தச் சகோதரர்களின் உணர்வை மதிக்கின்றவகையில், தந்தி தொலைக்காட்சியினரிடம் பேசி, இத்தொடரின் ஒளிபரப்பை இத்துடன் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுள்ளேன்.. பொன்னி வள வீரச் சரித்திரம் தொடரை நிறுத்திவிடுவதாக அவர்களும் உறுதியளித்துள்ளனர்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அந்த ‘பொன்னி வள வீரச் சரித்திரம்’ தொடர் தந்தி தொலைக்காட்சியில் நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது.

ஒரு வரலாற்றை, வரலாறாக பார்க்கக்கூட தெரியாத வகையில் நமது தமிழ்ச் சமூகம் வளர்ந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது..!

Our Score