full screen background image

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..!

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..!

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நடிகை ஜோதிகா முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் மே 29, வெள்ளிக்கிழமையன்று அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இத்திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராம்ஜி, இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – அமரன், பாடல்கள் – விவேக், உமாதேவி, கார்த்திக் நேத்தா, வசனம் – லட்சுமி சரவணக்குமார், ஜே.ஜே.பேட்ரிக், கூடுதல் வசனம் – முருகேசன், பொன்.பார்த்திபன், ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, நடன இயக்கம் – பிருந்தா, சண்டை இயக்கம் – ராக் பிரபு, ஒலி வடிவமைப்பு – சின்க் சினிமா, இறுதி ஒலிக் கலவை – எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், தயாரிப்பு மேலாண்மை – பி.செந்தில்குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ், நிழற்படம் – சரவணன், விளம்பர வடிவமைப்பு – அமல் ஜோஸ், இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பு – சூர்யா, எழுத்து, இயக்கம் – ஜே.ஜே.பேட்ரிக்.

இத்திரைப்படம் முழுவதும் தயாராகி கடந்த மார்ச் 26-ம் தேதி திரைக்கு வரத் தயாராக இருந்தது. இடையில் திடீரென்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமலாக்கப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டதினால் இத்திரைப்படமும் முடங்கியது.

ஆனாலும் இத்திரைப்படத்தை அமேசான் பிரைம் எனப்படும் OTT தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சென்ற மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

4.50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது அமேஸான் பிரைம் நிறுவனத்திற்கு 12 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மூன்று மடங்கான தொகையாகும். இதன் மூலமாக தயாரிப்பாளருக்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு இப்போதே லாபம் கிடைத்துள்ளது.

இத்தகவல் கிடைத்தவுடன் தமிழ்த் திரையுலகம் பரபரப்பானது.. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் உடனடியாக இதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளரான ரோகிணி பன்னீர்செல்வம் இது குறித்து அளித்த வீடியோ பேட்டியில் “பொன் மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானால் அதன் பின்பு அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சூர்யா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் திரைப்படங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்…” என்று அறிவித்தார்.

இதற்கடுத்து திரையுலகின் பல்வேறு தரப்பினரும் இது குறித்து தங்களுக்குள் விவாதித்து வந்தனர். பல தயாரிப்பாளர்கள் இந்த முடிவு எடுத்தது சரிதான் என்று சூர்யாவுக்கு ஆதரவுக் கரம் கொடுத்துள்ளனர்.

அதே சமயம், திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு திரைப்படம் 2 மடங்கு லாபத்தைக் கொடுக்கிறது என்றால் நாளைக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் இதையே பின்பற்றினால் தியேட்டர்களின் கதி என்னாவது என்று தியேட்டர் அதிபர்கள் பயப்படுகிறார்கள்.

amzon-ott-direct-release-movies

இந்த நிலையில் ‘பொன் மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் மே 29-ம் தேதியன்று அமேஸான் தளத்தில் வெளியாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு திரைப்படம் மட்டுமன்றி, இந்தியில் அமிதாப்பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குலாபோ சிட்டாபோ’ என்ற படம் ஜூன் 12-ம் தேதி அமேஸானில் வெளியாகவுள்ளது.

3-வது படமாக நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் நடித்திருக்கும் ‘பெண்குயின்’ படம் வரும் ஜூன் 19-ம் தேதி வெளியாகிறது.

4-வது படமாக கன்னடத்தில் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் தயாரிப்பில் ராகினி சந்திரன் நடித்திருக்கும் ‘லா’ என்ற படம் ஜூன் 26-ம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5-வது படமாக பிரபல கன்னட இயக்குநர் பன்னக பரானா இயக்கத்தில் தனிஷ்சைத் நடித்திருக்கும் ‘பிரஞ்ச் பிரியாணி’ என்ற படம் ஜூலை 20-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

6-வது படமாக இந்தியில் பிரபல நடிகை வித்யா பாலன் நடிப்பில் இந்தியாவின் கணித மேதையான சகுந்தலா தேவியின் வாழ்க்கைக் கதையாக உருவாகியிருக்கும் ‘சகுந்தலா தேவி’ படம் வெளியாகவுள்ளது.

இதேபோல் மலையாளத்தில் ஜெயசூரியா, அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூபியும் சுஜாதாயும்’ படமும் அமேசானில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.

அமேஸான் நிறுவனம் இன்று அறிவித்துள்ள இந்த படங்களின் வெளியீட்டு செய்தி தமிழ்த் திரையுலகத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

இதன் விளைவுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score