full screen background image

பொங்கல் தினத்தில் வெளியான பிரபல நடிகர்களின் திரைப்படங்களின் பட்டியல்..!

பொங்கல் தினத்தில் வெளியான பிரபல நடிகர்களின் திரைப்படங்களின் பட்டியல்..!

ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரையில் முக்கியமான இடத்தை வகிப்பது தீபாவளி பண்டிகையும், பொங்கல் பண்டிகையும்தான்.

இதில் தீபாவளியைவிடவும் பொங்கல் பண்டிக்கைக்கு சற்று கூடுதல் சிறப்பு ஒன்று உண்டு. ஏனென்றால் தீபாவளி மாதிரி பொங்கல் பண்டிகை ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல. மூன்று நாள் கொண்டாட்டம்.

பொங்கலன்று குறைந்தபட்சம் மூன்று திரைப்படங்களைப் பார்க்காமல் எந்தத் தீவிர தமிழ் சினிமா ரசிகனின் அன்றைய நாளும் முழுமையடையாது.

பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையிலும் புதுத் துணி, கரும்பு, சர்க்கரைப் பொங்கல் இவற்றுக்கெல்லாம் எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதற்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் நம் தமிழ்ச் சினிமாவிற்கும் உண்டு.

இதுவரையிலும் பொங்கல் பண்டிகை தினத்தன்று வெளியான படங்களின் பட்டியலைத் தேடிப் பார்த்தால் அது 1940-ம் ஆண்டில் இருந்துதான் கிடைக்கிறது.

இயக்குநர் கே.சுப்ரமணியம் இயக்கத்தில் உருவான ‘பக்த சேதா’ என்ற திரைப்படம் 1940-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகியுள்ளது. இதுதான் நமக்கு அதிகாரப்பூர்வமாகக் கிடைத்திருக்கும் முதல் பொங்கல் பண்டிகை தின படம்.

1941-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று இயக்குநர் கே.சுப்ரமணியம் இயக்கிய ‘கச்ச தேவயானி’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகத்தின் முதல் கவர்ச்சிக் கன்னியான டி.ஆர்.ராஜகுமாரி அறிமுகமானார்.

1944-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்று நடிகை கண்ணாம்பாவின் தயாரிப்பில் பி.யூ.சின்னப்பா நடித்த ‘ஹரிச்சந்திரா’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

1949-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்று பி.யூ.சின்னப்பா நடித்த ‘கிருஷ்ண பக்தி’ என்ற திரைப்படமும் வெளியாகியுள்ளது. இதே நாளில் ‘பொன்முடி’ என்ற படமும் வெளியாகியுள்ளது.

1953-ம் ஆண்டு ‘வேலைக்காரி மகள்’ என்ற படம் பொங்கல் தினத்தன்று வெளியாகியுள்ளது.

1955-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்த முதல் வண்ணப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற படம் பொங்கல் தினத்தன்று வெளியானது.

இதே 1955-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்று சிவாஜி நடித்த ‘காவேரி’ படமும் வெளியாகியுள்ளது.

1958-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான ‘கன்னியின் காதலி’ படத்தின் மூலம்தான் கவிஞர் கண்ணதாசன் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். கூடவே ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘பூலோக ரம்பை’ ஆகிய படங்களும் வெளியாகின.

1959-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் ‘சுமங்கலி’, ‘மஞ்சள் மகிமை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

1960-ம் ஆண்டில் ‘இரும்புத் திரை’, ‘தந்தைக்குப் பின் தமயன்’ ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகியுள்ளன.

1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்றுதான் நடிகர் ஜெய்சங்கர் முதன்முதலாக நடித்த ‘இரவும், பகலும்’ என்ற படமும் வெளியானது.

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தித் திருமகள்’(1957), ‘பணத்தோட்டம்’(1963), ‘வேட்டைக்காரன்’(1964), ‘எங்க வீட்டுப் பிள்ளை’(1965), ‘அன்பே வா’(1966), ‘தாய்க்குத் தலை மகன்’(1967), ‘ரகசிய போலீஸ் 115’(1968), ‘மாட்டுக்கார வேலன்’(1970) ஆகிய திரைப்படங்கள் அந்தந்த வருடங்களில் பொங்கல் தினத்தன்று வெளியாகியுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘நல்ல வீடு’(1956), ‘நான் பெற்ற செல்வம்’(1956), ‘இரும்புத் திரை’(1960), ‘கர்ணன்’(1964), ‘எங்க மாமா’(1970), ‘இரு துருவம்’(1971), ‘மனிதனும் தெய்வமாகலாம்’(1975), ‘அவன் ஒரு சரித்திரம்’(1977), ‘உருவங்கள் மாறலாம்’(1983), ‘சாதனை’(1986), ’ஞானப் பறவை’(1991) ஆகிய படங்கள் அந்தந்த வருடங்களின் பொங்கல் தினத்தன்று வெளியாகியுள்ளன.

ஜெமினி கணேசனின் ‘மிஸ்ஸியம்மா’(1955), ‘கொஞ்சும் சலங்கை’(1962), ‘குழந்தை உள்ளம்’(1969) ஆகிய படங்களும் பொங்கல் தினத்தன்றுதான் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா நடித்திருந்த ‘திருமாங்கல்யம்’ என்ற திரைப்படம் 1974-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியானது.

நடிகர் விஜய் நடித்த முதல் திரைப்படமான ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படமும் 1996-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்றுதான் வெளியாகியுள்ளது.

இதற்குப் பிறகு ‘பிரண்ட்ஸ்’(2001), ‘திருப்பாச்சி’(2005), ‘போக்கிரி’(2007), ‘காவலன்’(2011), ’நண்பன்’(2012) என்று அவரது படங்கள் அந்தந்த வருடங்களில் பொங்கலன்று வெளியாகி வெற்றியைத் தொட்டிருக்கின்றன.

அஜீத்தின் நடிப்பில் 1996-ம் ஆண்டு உருவான ‘வான்மதி’யும் பொங்கல் தினத்தில் வெளியான திரைப்படம்தான். மேலும் ‘தீனா’(2001), ‘வீரம்’(2014), ‘விஸ்வாசம்’(2018) ஆகிய படங்களும் பொங்கல் தினத்தன்றுதான் வெளியானது.

சத்யராஜ், மணிவண்ணன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘அமைதிப்படை’ திரைப்படம் 1994-ம் ஆண்டு பொங்கல் தினத்தில்தான் வெளியானது.

மணிரத்னம் இயக்கிய சர்ச்சைக்குரிய திரைப்படமான ‘இருவர்’ படமும் 1997-ம் ஆண்டில் பொங்கல் தினத்தில்தான் வெளியானது.

இதே பொங்கல் தினத்தன்று விஜயகாந்த் நடித்த ‘தர்மசக்கரம்’, பிரபுதேவா நடித்த ‘மின்சாரக் கனவு’, ‘பெரிய தம்பி’ ஆகிய படங்களும் வெளியாகின.

சிவக்குமாரின் நடிப்பில் உருவான ‘கந்தன் கருணை’ படம் 1967-ம் ஆண்டு பொங்கலன்று வெளியான திரைப்படம்.

சூர்யா நடித்த ‘காதலே நிம்மதி என்ற படம் 1998-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியானது.

கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படமும் 2010-ம் ஆண்டில் பொங்கல் தினத்தில்தான் வெளியானது.

வெற்றி மாறனுக்கும், தனுஷூக்கும் மிகப் பெரிய வெற்றியையும், பெயரையும் பெற்றுத் தந்த ‘ஆடுகளம்’ படமும் 2011-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்றுதான் வெளியானது.

சிம்பு நடித்த ‘சரவணா’ திரைப்படமும் 2006-ம் ஆண்டின் பொங்கல் தினத்தில்தான் வெளியானது.

சந்தானம் நாயகனாக நடித்திருந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படம் வெளியானதும் 2013-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்றுதான்.

தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாரினியாகத் திகழும் நயன்தாரா தமிழ்த் திரையுலத்தில் அறிமுகமாகிய ‘ஐயா’ படமும் 2005-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்றுதான் வெளியானது.

 

Our Score