விஜய்யின் ‘பைரவா’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க புதுவை அரசு மறுப்பு

விஜய்யின் ‘பைரவா’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க புதுவை அரசு மறுப்பு

விஜயா-வாஹினி புரொடெக்சன்ஸ் சார்பில் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி தயாரிப்பில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் பரதன் இயக்கிய படம் ‘பைரவா’.

இந்தப் படம் சென்ற மாதம் உலகமெங்கும் வெளியானது. இந்தப் படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருந்தது. ஆனால் புதுச்சேரி அரசு வரிவிலக்கு தர மறுத்துவிட்டது.

‘பைரவா’ என்கிற பெயர் தமிழ் வார்த்தை இல்லை என்று புதுவை அரசின் பொழுது போக்கு துறை ஆணையகம் தெரிவித்துவிட்டதாம். இதனால் வரிச்சலுகையை பெற முடியாமல் போன இந்தப் படத்தின் புதுவை மாநில விநியோகஸ்தரான ஜி.ஆர்.துரைராஜ், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “பைரவா என்ற பெயர் தமிழ் வார்த்தையில்லை என்று புதுவை அரசு சொல்கிறது. ஆனால் ‘பைரவா’ என்பது இறைவன் சிவபெருமானின் மறு அவதாரப் பெயர். ஆக, இதுவும் ஒரு தமிழ் வார்த்தைதான் என்று சொல்லி தமிழக அரசு வரிச்சலுகை அளித்திருக்கிறது. ஆனால் புதுவை அரசு மட்டுமே இதனை ஏற்க மறுக்கிறது. இது தன்னிச்சையான சட்ட மறுப்பாகும்.

எனவே ‘பைரவா’ படத்திற்கு வரிச்சலுகை வழங்க மறுத்து புதுவை அரசு கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் அளித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து பதில் அளிக்கும்படி புதுவை மாநில உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பொழுது போக்குத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

‘ஆல கால பைரவா’ என்று சிவ புராணத்திலேயே தமிழ் வார்த்தைகள் உண்டு. புதுவையின் ஆட்சி மொழியும் தமிழ்தான். ‘பைரவா’ என்கிற வார்த்தையை அறியாத தமிழர்களே இருக்க முடியாது. இது வழக்குத் தமிழ் அல்ல. ஆதி காலத் தமிழ்தான்.. அப்படியும் வரிச்சலுகை இல்லை என்றால்.. அங்குள்ளவர்கள் ‘ஏதோ’ எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்..!

Our Score