பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கட்சிக்காரன் ‘.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் பாடல்களை வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “கட்சிக்காரன்’ என்று ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். அதை எடுக்க இங்கே புதியவர்கள் வந்திருக்கிறார்கள். இது அரசியல் படம் என்று தெரிகிறது. படம் எடுங்கள். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அதேநேரம் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். தவறுகளைச் சுட்டிக் காட்டாதவன் மனிதனே கிடையாது. இதுதான் இயக்குநர்களுக்கு என் வேண்டுகோள்.
நம் நாட்டில் தொண்டர்கள் தலைவர்களிடம் அடிமையாக இருக்கிறார்கள். தலைவர் மாறினாலும் தொண்டர்கள் மாறாமல் இருக்கிறார்கள். ‘ஜோக்கர்’ என்றொரு படம் வந்தது. அதில் பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் நடிக்கவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் அநியாயங்களை, தவறுகளைச் சுட்டிக் காட்டியது. அந்தப் படம் மிகப் பிரமாதமாக ஓடியது.
இந்தக் ‘கட்சிக்காரன்’ படம் அரசியல்வாதிகளை விமர்சிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு என்ன சொல்ல வேண்டும்..? ஊழல் செய்ய வேண்டாம். அது பாவம். அரசியல்வாதிகளே ஊழல் செய்யாதீர்கள். நீங்கள் எதைச் சேர்த்து வைத்தாலும் பாவத்தைச் சேர்க்காதீர்கள். அது உங்கள் சந்ததியைப் பாதித்து உங்கள் தலைமுறையையே அழித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்…” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் இயக்குநர்கள் எத்தன் சுரேஷ், கேந்திரன் முனியசாமி, மதுராஜ், தொழிலதிபர் தூத்துக்குடி பால்ராஜ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் மலர்க்கொடி முருகன், இசையமைப்பாளர்கள் ரோஷன் ஜோசப், மகேந்திரன், பாடல் எழுதிய நா.ராசா மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டார்கள்.