பிழை – சினிமா விமர்சனம்

பிழை – சினிமா விமர்சனம்

Turning Point Productions நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.தாமோதரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில், ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நஸத், கோகுல், தர்ஷினி, ராகவேந்திரா, ‘மைம்’ கோபி, சார்லி, ஜார்ஜ், ‘கல்லூரி’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – பாக்கி, இசை – ஃபாஸில், எழுத்து, படத் தொகுப்பு – ராம் கோபி, பாடல்கள் – மோகன்ராஜ், ரா.தாமோதரன், கலை இயக்கம் – மனோ, சண்டை இயக்கம் – டேன்ஞர் மணி, நடன இயக்கம் – சதீஷ், புகைப்படங்கள் – சுரேந்தர், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், டிசைன்ஸ் – சிந்து கிராபிக்ஸ், இயக்கம் – ராஜ்வேல் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். நேரம் – 1 மணி 53 நிமிடங்கள்.

பெற்றோர்களின் கண்டிப்புக்கும், அடி, உதைக்கும் பயந்து 3 சிறுவர்கள் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள். அதன் பின் அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை கருவாக வைத்து, பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக தயாராகி இருக்கிறது இந்த ‘பிழை’ திரைப்படம்.

அன்று நாம் சிறுவர்களாக இருந்தபோது நம்முடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும் நம்மை கண்டித்து வளர்த்தார்கள், நாமும் அதனால் இன்று நாம் நல்லதொரு இடத்தில் உள்ளோம்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில், ஆசிரியர்களும் சரி பெற்றோர்களும் சரி பிள்ளைகளை கண்டிக்கக் கூடாது என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த மாற்றங்களினால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே புரிதல் இல்லாமல் போய் விட்டது.

அதே போல் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயும்… நமக்கும் சமுதாயத்திற்கும் இடையேயும் புரிதல் இல்லாமல் போய்விட்டது. இவைகளைப் பற்றிப் பிழையில்லாமல் பேச வந்திருக்கிறது இந்த ‘பிழை’ திரைப்படம்.

மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் மூவரும் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடியிருப்பில் வசித்து வரும் ஏழைகள். இவர்களுடைய மகன்கள் மூவருமே ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள். மூவருக்குமே படிப்பு வரவில்லை. மார்க் கார்டில் ஏமாற்றி கையெழுத்து வாங்குகிறார்கள்.

கல்லுடைக்கும் தொழிலைச் செய்து வரும் அப்பன்கள் மூவரும் தங்களது பிள்ளைகள் எப்படியாவது நன்கு படித்து நல்ல வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரமோ வேறு விதமாக இருக்கிறது.

பையன்கள் விளையாட்டுத்தனமாய் திருடுகிறார்கள். வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவனை கிணற்றில் தள்ளிவிடுகிறார்கள். இந்தக் கோபத்தில் மூன்று அப்பன்களுமே தங்களது பையன்களை வெளுத்துவிடுகிறார்கள்.

அதே ஊரில் அவர்களுடைய உறவினர் பையன் ஒருவன் வீட்டைவிட்டு ஓடிப் போய் ஹோட்டலில் வேலை பார்த்து, உயர்ந்து இப்போது பணக்காரனாக அதே ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறான். அதைப் பார்த்து தாங்களும் அதேபோல் செய்தால் என்ன என்று திட்டம் தீட்டுகிறார்கள் பையன்கள் மூவரும்.

ஒரு சுப முகூர்த்த நன்னாளில் பிள்ளைகள் மூவரும் வீட்டைவிட்டு ஓடி நகரத்துக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் பையைத் தொலைக்கிறார்கள். சாப்பிட காசில்லாமல் ஓசியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு தப்பியோடுகிறார்கள். வழியில் இன்னொரு ஹோட்டல் ஓனரிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

அவன் இவர்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துகிறான். பிள்ளைகளுக்கு இப்போதுதான் வீட்டின் அருமையும், பெற்றோர்களின் அருமையும் புரிகிறது. அங்கேயிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள்.

இதே நேரம் ஊரில் பெற்றோர்களும் பிள்ளைகளைக் காணவில்லை என்று சொல்லி போலீஸில் புகார் கொடுத்துவிட்டு கண்ணீருடன் காத்திருக்கிறார்கள். முடிவு என்னவாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் திரைக்கதை.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு தலைமுறையின் வாழ்க்கையை அடுத்தத் தலைமுறை தலைகீழாக மாற்றியமைக்க அவர்கள் கையில் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் கல்வி மட்டும்தான். அதனால்தான் கல்வியை முன் வைத்தே அவர்களது நலன்கள் காக்கப்படுகின்றன.

அந்தக் கல்வியை முறையாகக் கற்றுக் கொள்ளாமல் வீணாக்கினால் அதுதான் அவர்கள் செய்யும் முதல் தவறாக இருக்கும் என்பது அந்தச் சமூகத்தினருக்கே நன்கு தெரியும். அதனால்தான் நாங்களாவது படிக்க வைக்கப்படாமல் வேலைக்கு அனுப்பப்பட்டு இப்போதுவரையிலும் கல்லுடைத்து கஷ்டப்பட்டு உழைத்து கஞ்சி ஊத்தி பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். அதுங்களும் படிக்க மாட்டோம்ன்னு வந்து நின்னா என்னா சாமி செய்யறது என்கிறார்கள் அந்த அப்பாவி மக்கள்.

அந்தக் குரலைத்தான் இந்தப் படத்தில் மைம் கோபியும், ஜார்ஜூம், சார்லியும் கதறலுடன் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்கும் சூழலில் அவர்களது மகன்கள் இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.

மைம் கோபி, ஜார்ஜ், சார்லி மற்றும் இவர்களது மனைவிமார்கள் அனைவருமே சிறந்த தேர்வு. 100-க்கு 156 மார்க் தன் மகனுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லி மகிழும் அப்பாவான ஜார்ஜூம், “எப்படியாவது படிச்சு தலையெடுத்திர மாட்டானா என் மகன்” என்று ஏக்கத்தோடு இருக்கும் மைம் கோபியும்.. “பெத்த அப்பன் பேரைக் கெடுக்காமல் இருடா” என்று மகனிடம் கெஞ்சும் சார்லியும் அப்பன்களாகவே உருகுகிறார்கள்.

பையன்கள் மூவருமே அந்த வயதுக்கேற்ற துடுக்குத்தனத்துடனும், கோபத்தைக் காட்டி நடித்திருக்கிறார்கள். லேட்டாக வரும் ஆசிரியர்களை மட்டும் உள்ளே விடும் வாட்ச்மேனிடம் இது தப்பில்லை என்று உரிமைக் குரல் எழுப்புகிறார்கள். கிறுக்குத்தனமாய் குறுக்கு வழியில் உயர்ந்தவனைப் பார்த்து அவனைப் பின்பற்ற நினைத்து அல்லல்லபடும்போதெல்லாம் பரிதாபத்தை வரவழைக்கிறார்கள்.

என்னதான் வளர்ந்தாலும் கல்விதான் ஒருவனை உயர் இடத்தில் வைக்கிறது என்பதை கார்மெண்ட்ஸ் மில்லில் தெரிந்து கொள்வதும்.. அடுத்தவர் சாப்பிட்ட எச்சில் சாப்பாட்டை சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்போது வீட்டில் அம்மா கொடுத்த சாப்பாட்டை எட்டி உதைத்த நிகழ்வு ஞாபகத்துக்கு வருவதும் கச்சிதமான, பொருத்தமான திரைக்கதை.

படத்தின் இறுதியில் தற்போதைய சமூக அவலங்களில் ஒன்றான ஆணவக் கொலைக்கும் ஒரு சில காட்சிகளை ஒதுக்கி அதன் மூலம் மெயின் படத்தின் திரைக்கதையை இணைத்திருப்பது இயக்குநரின் திறமைக்கு ஒரு சான்று. பாராட்டுக்கள்.

படத்தின் ஒளிப்பதிவே படத்தின் பட்ஜெட்டை சொல்லிவிடுகிறது. ஒளிப்பதிவாளர் பாக்கி, மிகவும் எளிமையாக குறைந்த செலவில் படத்தைப் படமாக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இசையும் சுமார் ரகம்.

எழுத்தும், இயக்கமுமே போதும் என்று இயக்குநரே நினைத்துவிட்டார் போலும். சிறந்த திரைப்படம் என்றால் படத்தின் அத்தனை யுனிட்டுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு உழைத்திருக்க வேண்டும் இயக்குநரே..!

கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் தரம்.. அதன் ஆசிரியர்களின் தகுதி.. படிப்பு சொல்லிக் கொடுக்கும் அறிவாற்றல் இதையும் கொஞ்சம், கொஞ்சம் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். இவர்களே இவ்வளவுதான் என்னும்போது மாணவர்கள் மட்டும் எப்படி அவர்களைத் தாண்டிப் போகும் அளவுக்கு உயர்வார்கள் என்னும் கேள்வி எழுகிறது..

அடிக்காமல் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்றால் எந்தப் பிள்ளையும் வீட்டுக்கு அடங்காது. அடிக்காமல் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும் என்றால் எந்த மாணவனும் பாஸாகக்கூட மாட்டான். இது சென்ற தலைமுறை வரையிலும் இந்தியா கற்றுக் கொண்ட பாடம். இப்போது இது கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து மாணவர்களின் தனி உரிமையும், பெற்றோர்களின் உரிமையும் ஆசிரியர்களின் உரிமையைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் கண்டிக்க வேண்டிய நேரத்தில், விஷயத்தில் பிள்ளைகளையும், மாணவர்களையும் கண்டிக்காவிட்டால் அதன் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அதேபோல் பெற்றோர் பேச்சைக் கேட்காத பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடிப் போனால் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க நேரிடும் என்பதையும் இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் இது.

Our Score