கே புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S.N.ராஜராஜன் மற்றும், Y.S.R. பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் பிரபல இசையமைப்பாளரான யுவன்சங்கர்ராஜாவும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரெய்சா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆனந்த்பாபு, ரேகா, ‘ராஜாராணி’ பாண்டியன், பஞ்சு சுப்பு, முனீஸ்காந்த், தீப்ஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ராஜா பட்டாச்சார்யா, இசை – யுவன்சங்கர்ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், நிரஞ்சன் பாரதி, மோகன்ராஜன், ஓவியா உமாபதி, இளன், கலை இயக்கம் – E.தியாகராஜன், படத் தொகுப்பு – மணிக்குமரன் சங்கரா, நடனம் – நந்தா, சால்சா மணி, எழுத்து, இயக்கம் – இளன்.
இத்திரைப்படம் ஒரு கொரியப் படத்தின் அப்பட்டமான காப்பி. போஸ்டர் டிசைனைகூட அப்படியே காப்பி செய்திருக்கிறார்கள். வெரிகுட் காப்பி சினிமா..!
ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் குமார் என்னும் ஹரீஷ் கல்யாணுக்கு பக்கத்து பில்டிங்கில் வேலை பார்த்து வரும் பெயர் தெரியாத ரைசாவின் மீது காதல். அந்த தேவதை அடுத்த சில நாட்களில் ஹரீஷின் பக்கத்து சீட்டுக்கே வந்து அமர்கிறது.
ஒருதலைக்காதலாக தனக்குள்ளேயே காதலை வளர்த்து வரும் ஹரீஷ் தனது காதலை ரைசாவிடம் சொல்ல.. அவளோ எடுத்த எடுப்பிலேயே ஹை ஸ்பீடில் போய் நிற்கிறாள். “அப்பா வீட்ல இல்லை. நான் மட்டும்தான் தனியா இருக்கேன்…” என்று சொல்லி காண்டம் வாங்க வைத்து அன்றைக்கே ஹரீஷோடு உறவு கொள்கிறார்.
‘மேட்டர்’ முடிந்ததும், ‘மீட்டர்’ முடிந்த கதையாக.. ‘இதை இப்படியே மறந்திரு’ என்கிறார் ரைசா. ஹரீஷோ ரைசா மீது அளவற்ற காதலோடு இருக்கிறார். ‘நாம கல்யாணம் செய்துக்கலாம்’ என்று கெஞ்சுகிறார். ரைசாவோ ‘அதெல்லாம் ஒரு விஷயமா.. இப்ப கல்யாணமெல்லாம் எனக்கு வேண்டாம்..?’ என்று திட்டவட்டமாக மறுக்க..
இது ஒரு விழாவில் அனைத்து சக நண்பர்கள் முன்னிலையில் வெளியாகிறது. இதனால் கோபமடையும் ரைசா, ஹரீஷுடனான தனது நட்பை முறித்துக் கொள்கிறாள். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் ஹரீஷ் நூல் விட்டு தனது காதலை புதுப்பித்தாலும் கல்யாண விஷயத்தில் ரைசா பிடிவாதமாக இருக்கிறார்.
“வேண்டுமானால் நாம லிவிங் டூ கெதராக வாழ்ந்து கொள்ளலாம்…” என்று சொல்லி அதன்படியே ஹரீஷின் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடித்தனம் நடத்துகிறார்கள் ரைசாவும், ஹரீஷும்.
இப்போது ஹரீஷின் அம்மா அவருக்காக பெண் பார்க்கத் துவங்குகிறார். ரைசாவை நினைத்து பெண்ணை பிடிக்கவில்லை என்கிறார் ஹரீஷ். இதனால் ஹரீஷின் அம்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட ஹரீஷ் ஏதோ ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.
மீண்டும் ரைசாவிடம் கல்யாணத்திற்கு கெஞ்ச ஆரம்பிக்க.. ஒரு ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பித்து பெரிய அளவில் நடத்த வேண்டும் என்கிற தனது லட்சியம் கெட்டுப் போய்விடும் என்று சொல்லி கல்யாணத்திற்கு இந்த முறையும் மறுக்கிறார் ரைசா.
இதனால் கோபமடையும் ஹரீஷ் ரைசாவைவிட்டு பிரிந்து வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறார். இதற்கு பின்பு ரைசா என்ன செய்யப் போகிறார்..? ஹரீஷின் வாழ்க்கை என்னவானது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
இப்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவின் இயக்குநர்கள் சமூகத்தைக் கெடுப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு கதையைத் தயார் செய்கிறார்கள் போலும். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்கள் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் இந்த மாதிரியான வைரஸாக நுழைந்திருக்கும் திரைப்படங்கள்.
கொரிய சமூகத்திற்கு இது சகஜமான திரைப்படம்தான். ஆனால் தமிழுக்கு..! இதையெல்லாம் இயக்குநர் யோசித்திருக்க வேண்டாமா.. எத்தனையோ நல்ல நல்ல படங்களெல்லாம் கொரியாவில் வெளியாகிறது. அதையெல்லாம் தொட்டுக்கூட பார்க்காமல் அவர்களது கலாச்சாரத்திற்கு ஏற்ற படத்தை தமிழ்க் கலாச்சாரத்திற்குக் கொடுத்திருக்கும் இவருடைய அறிவுத் திறனை என்னவென்று சொல்வது..?
“கல்யாணம் செய்ய வேண்டாம். லிவிங் டூ கெதராகவே இருப்போம். பிள்ளை பெத்துக்க வேண்டாம். பிடித்திருந்தால் தொடர்வோம். இல்லையெனில் பிரிவோம். அடுத்த ஆளை தேடுவோம்..” – இதுக்கு பெயர் வாழ்க்கையா..? இதுவும் விபச்சாரத்தில் ஒரு பிரிவுதான். இதைத்தான் இந்தப் படத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இளன்.
நல்ல பெரிய மனசுங்க இவருக்கு. நிச்சயமாக இவருக்கு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டியதுதான்.
காலம் காலமாக தமிழ்ச் சினிமாவில் காதலைப் போற்றிப் புகழ்ந்தவர்கள்கூட காதல் என்பது கல்யாணத்தில் முடிய வேண்டும். அது காதலர்களின் வம்சத்தை வளர்த்தெடுக்க வேண்டும். இது மனிதச் சங்கிலியின் தொடர்ச்சியாக தொடர வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.
இப்போதுதான் புதிய டிரெண்ட்டாக பல வித்தியசாமான மனிதப் பிறவிகள் தங்களுடைய வாந்தியையெல்லாம் கொட்டி இதெல்லாம் அற்புதமான கருத்துக்கள் என்று விசிலடிச்சான் குஞ்சுகளாக இருக்கும் ரசிகர்களின் மனதில் விஷத்தைப் பரப்புகிறார்கள்.
இந்த இயக்குநர் இளனும் இது போன்ற விஷத்தைத்தான் இந்தப் படத்திலும் பரப்பியிருக்கிறார். லட்சியத்தை அடைந்துவிட்டுத்தான் கல்யாணம் என்றால் இந்த உலகத்தில் யாருக்குமே கல்யாணம் நடக்காது. கல்யாணமும், அதைத் தொடர்ந்த பிள்ளை பேறும் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பத்தினரின் வம்சம் தொடர அவசியம் தேவை.
பிள்ளை பெறுவதற்கு பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரைமுறை உண்டு. அதற்குள்ளாக பிள்ளை பெற்றால் அவர்களுக்கும் பாதுகாப்பு. குழந்தைகளுக்கும் பாதுகாப்பு. இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு காலம் போன கடைசியில் பிள்ளை பெத்துக்கலாம் என்று ஐடியா கொடுப்பதெல்லாம் ஒரு உயிரைக் கொலை செய்வதற்குச் சமமானது.
காதலைப் பற்றி என்னவென்று நினைத்தார் இந்த இயக்குநர்..? வெறும் கல்யாணத்துக்கு மட்டுமானதா காதல்..? காலம் முடியும்வரைக்கும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து தோள் சாய்ந்து பரிந்துணர்வோடு வாழ்வதற்குப் பெயர்தான் காதல். அந்தக் காதலையே கொச்சைப்படுத்திவிட்டு காதல் என்பதே படுக்கையில் வீழ்வதுதான் என்பது மாதிரியான சிந்தனையை அதிலும் ஒரு பெண் மீது செலுத்தியிருப்பது வன்முறையின் உச்சக்கட்டம்.
இந்த லட்சணத்துல படத்துக்கு ‘பியர் பிரேமா காதல்’ என்று காதலுக்கு முன்னுரிமை கொடுத்து டைட்டில் வேறு. ‘பியர்’ என்றார் ஹிந்தியில் ‘காதல்’ என்று அர்த்தம். ‘பிரேமா’ என்றால் தெலுங்கில் ‘காதல்’ என்று அர்த்தம். தமிழுக்கு நேரடியாகவே ஒரு காதல். அதாவது அனைத்து மொழி காதலர்களுக்கும் ‘காதல்’ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். காதலர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று இந்த அறிவுஜீவி இயக்குநர் சொல்கிறார். ம்ஹூம். வெட்கக்கேடு..!
இத்திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் தமிழ்ச் சமூகத்தை சீரழிப்பதற்கென்று வந்திருப்பதால், இந்தப் படத்தின் மற்ற அம்சங்களை குறிப்பிட்டு படத்தைப் பாருங்கள் என்றெல்லாம் சொல்ல வைக்க மனமில்லை.
இத்திரைப்படம் வந்தது தெரியாமல்.. போனது தெரியாமல் இருப்பதுதான் தமிழகத்திற்கு நல்லது.
போய்த் தொலையட்டும் சனியன்கள்..! விட்டுவிடுங்கள்..!